தைவானில் மனைவியின் கள்ளத் தொடர்பை நிரூபிப்பதற்காக ரோபோ வெற்றிடச் சுத்திகரிப்பானில் உள்ள ஒலிப்பதிவு வசதியைப் பயன்படுத்தி வீடியோ பதிவு செய்த கணவருக்கு 5 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
2021ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட குறித்த தம்பதி, கணவரின் பெற்றோருடன் வசித்து வந்ததுடன், விடுமுறை நாட்களில் மாத்திரம் அவர்களது விடுமுறை இல்லத்திற்குச் சென்று வந்துள்ளனர்.
2023ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் குறித்த விடுமுறை இல்லத்தில் பயன்படுத்தப்பட்ட பல் துலக்கும் தூரிகை ஒன்றைக் கண்டதைத் தொடர்ந்து, கணவருக்கு தனது மனைவி தொடர்பில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து, வாகனத் தரிப்பிடத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு காட்சிகளை ஆய்வு செய்த அவர், தனது மனைவியை முன்னர் வீட்டிற்கு அழைத்துச் சென்றிருந்த அடையாளம் தெரியாத ஒருவரை அடையாளம் கண்டுள்ளார்.
சுமார் மூன்று மாதங்களின் பின்னர், தனது கையடக்கத் தொலைபேசி செயலி மூலம் வீட்டிலிருந்த ரோபோ வெற்றிடச் சுத்திகரிப்பானை (robot vacuum) தொலைவிலிருந்து இயக்கியுள்ளார். அதன் ஒலிப்பதிவு வசதியைப் பயன்படுத்தி மனைவியுடன் தொடர்புகொள்ள அவர் திட்டமிட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும், ரோபோவின் நேரடி ஒளிப்பதிவு மூலம் தனது மனைவி மற்றொரு ஆணுடன் நெருக்கமான நிலையில் இருப்பதை அவர் அவதானித்துள்ளார். இதனை சட்ட நடவடிக்கைக்கான ஆதாரமாக பயன்படுத்தும் நோக்கில், அந்தக் காட்சிகளை பதிவு செய்துள்ளார்.
பின்னர், அந்த வீடியோ காட்சிகளை ஆதாரமாகக் கொண்டு தனது மனைவிக்கும் அவருடன் தொடர்பில் இருந்ததாகக் கூறப்படும் நபருக்கும் எதிராக வழக்குத் தாக்கல் செய்தார்.
குறித்த இருவரின் உறவு சாதாரண நட்பின் எல்லையைத் தாண்டியுள்ளதாக நீதிமன்றம் தீர்மானித்து, கணவருக்கு 500,000 தைவான் டொலர்கள் இழப்பீடு வழங்குமாறு உத்தரவிட்டது.
எனினும், ஆதாரத்தைப் பெற்ற விதம் தொடர்பில் கணவருக்கும் சட்டரீதியான சிக்கல் ஏற்பட்டது.
மனைவி தனிப்பட்ட வாழ்க்கையை தனது அனுமதியின்றி பதிவு செய்ததாகக் கூறி கணவருக்கு எதிராக எதிர்வழக்குத் தாக்கல் செய்தார்.
குறித்த வீடியோ ஏற்கனவே சிவில் வழக்கில் ஆதாரமாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும், தனது செயல் சட்டரீதியாக நியாயமானது என்றும் கணவர் வாதிட்டார்.
ஆனால், திருமண உறவிலுள்ள கடமைகள் ஒருவரின் தனியுரிமைக்கான உரிமையை மீறுவதற்கு அனுமதியளிக்காது என நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
மேலும், ரோபோ வெற்றிடச் சுத்திகரிப்பானில் இருந்த விளக்குகள் அல்லது குரல் எச்சரிக்கைகள், தான் பதிவு செய்யப்படுவதை மனைவி அறிந்திருந்தார் அல்லது அதற்கு சம்மதித்திருந்தார் என்பதை நிரூபிக்க போதுமானவை அல்ல என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது.
இதனையடுத்து, தனிப்பட்ட காட்சிகளை சட்டவிரோதமாக பதிவு செய்த குற்றத்திற்காக குறித்த கணவருக்கு 5 மாத சிறைத்தண்டனையும் 150,000 தைவான் டொலர் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
தைவான் சட்டத்தின்படி, மற்றொருவரின் தனிப்பட்ட நடவடிக்கைகள் அல்லது அந்தரங்க தகவல்களை அவர்களின் அனுமதியின்றி இரகசியமாக பதிவு செய்வது அல்லது வெளியிடுவது குற்றமாகும். இதற்கு அதிகபட்சமாக 3 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 300,000 தைவான் டொலர் அபராதமும் விதிக்கப்படலாம்.
இந்தச் சம்பவம் சமூக வலைத்தளங்களில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.





