சம்மாந்துறையிலிருந்து சர்வதேச இளம் தலைமைத்துவ அரங்கிற்கு இளம் மக்கள் பிரதிநிதி
இந்திய அரசாங்கத்தின் ஏற்பாட்டில் புதுடெல்லியில் நடைபெறும் சர்வதேச இளம் தலைவர்கள் மேம்பாட்டுச் செயலமர்வில் (International Young Leaders Development Workshop) இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில், சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் இளைஞர் அமைப்பாளருமான அமீர் அப்னான் பங்கேற்கின்றார்.
உலகளாவிய ரீதியில் இளம் தலைவர்களின் தலைமைத்துவ ஆற்றல்களை மேம்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இச்செயலமர்வில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த இளம் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.
இலங்கையிலிருந்து பங்கேற்கும் பிரதிநிதியாக அமீர் அப்னானை, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் பரிந்துரை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச அளவிலான தலைமைத்துவப் பயிற்சிகள், கொள்கை வகுத்தல் மற்றும் அரசியல் அனுபவங்களைப் பெற்றுக்கொண்டு, அவற்றை எதிர்காலத்தில் தாய்நாட்டினதும் சம்மாந்துறை பிரதேசத்தினதும் அபிவிருத்திக்காகப் பயன்படுத்த எதிர்பார்ப்பதாக அமீர் அப்னான் தெரிவித்துள்ளார்.
மேலும், தன்னை இச்செயலமர்வில் பங்கேற்க பரிந்துரைத்த கட்சித் தலைவர் றிஷாட் பதியுதீன், அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.எம். தாஹிர், சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் ஐ.எல்.எம். மாஹிர் உள்ளிட்ட கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.
சம்மாந்துறை மண்ணை சர்வதேச இளம் தலைமைத்துவ அரங்கில் பிரதிநிதித்துவப்படுத்தும் வாய்ப்பு கிடைத்திருப்பது பெரும் பாக்கியம் எனவும், இச்செயலமர்வின் அனுபவங்களைப் பயன்படுத்தி இளைஞர் சமூகத்திற்கும் பிரதேசத்திற்கும் மேலும் சிறப்பாக சேவையாற்ற எதிர்பார்ப்பதாகவும் அமீர் அப்னான் தெரிவித்துள்ளார்.





