ஹட்டன் குப்பை மக்கள் வாழும் பகுதிக்கு வேண்டாம் – செனன் மக்கள் போராட்டம்

ஹட்டன்–டிக்கோயா நகரசபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பை மற்றும் கழிவுகளை, ஹட்டன் ரொத்தஸ் பகுதியில் அமைந்துள்ள பழைய கல் குவாரி ஒன்றில் கொண்டு சென்று, மீள்சுழற்சி செய்வதுடன், கொம்போஸ்ட் உரம் மற்றும் சேதனப் பசளை தயாரிக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, செனன், ரொத்தஸ், எபோஸ்லி மற்றும் ஸ்ரதன் ஆகிய தோட்டப் பிரிவுகளைச் சேர்ந்த மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய மாகாண ஆளுநர் தலைமையில் குறித்த திட்டத்திற்கான பெயர்ப்பலகை நாட்டப்பட்டு திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்ட மறுநாளே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

ஹட்டன்–கொழும்பு பிரதான வீதியின் செனன் சந்தியில் ஒன்றுகூடிய மக்கள், தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

‘இயற்கை வளங்களை அழிக்க வேண்டாம்’,
‘ஹட்டன் குப்பைகளை ஹட்டனிலேயே கொட்டுங்கள்’,
‘ஹட்டன் குப்பை எங்களுக்கு வேண்டாம்’

போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு, மக்கள் கோஷங்களை எழுப்பினர்.

இதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஊர்வலமாகச் சென்று, குப்பை மற்றும் கழிவுகளை கொண்டு சென்று கையாளுவதற்காக தெரிவுசெய்யப்பட்டுள்ள இடத்திற்கு அருகில் ஒன்று கூடி, தமது கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

பின்னர், மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்த போராட்டத்தில் பொதுமக்களுடன் இணைந்து அம்பகமுவ பிரதேச சபையின் எதிர்க்கட்சி உறுப்பினரும் கலந்து கொண்டு, திட்டம் தொடர்பில் தமது கருத்துக்களை தெரிவித்தார்.

போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவிப்பதாவது:

இந்தப் பிரதேசத்தில் வாழும் மக்கள் தற்போதைய அரசாங்கத்திற்கு வாக்களித்தவர்கள் என்றும், நாட்டின் பொருளாதாரத்திற்காக பெருந்தோட்டத் தொழிலாளர்கள் நீண்டகாலமாக உழைத்து வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

எனினும், மக்கள் வாழும் இந்தப் பகுதிகளில் போதுமான அடிப்படை வசதிகள் கூட ஏற்படுத்திக் கொடுக்கப்படாத நிலையில், தற்போது அவர்களது குடியிருப்புகளுக்கு அருகிலேயே குப்பைகளைக் கொண்டு வந்து கொட்டுவதற்கும், குப்பை மீள்சுழற்சி திட்டத்தை முன்னெடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர்கள் குற்றம் சுமத்தினர்.

மக்களின் கருத்துக்களைப் பெறாமல் அல்லது அவர்களுடன் கலந்துரையாடாமல், தன்னிச்சையான முறையில் இந்த இடம் தெரிவுசெய்யப்பட்டுள்ளதாகவும் போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore