தனக்கு எதிரான குற்றச்சாட்டுகளை முற்றாக நிராகரித்த றிஷாட் பதியுதீன்!

தனக்கு எதிராக கடந்த செப்டெம்பர் 15ஆம் திகதி முதல் வெளியிடப்பட்டு வரும் குற்றச்சாட்டுகளை முற்றாக நிராகரிப்பதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் றிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு (CID) வழங்கப்பட்டதாகக் கூறப்படும் ஒரு வாக்குமூலத்தை அடிப்படையாகக் கொண்டே இந்தக் குற்றச்சாட்டுகள் பரப்பப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த வாக்குமூலத்தில் கருத்து தெரிவித்ததாகக் கூறப்படும் “தம்பியன்” என அழைக்கப்படும் முன்னாள் விடுதலைப் புலிகள் உறுப்பினர், கடந்த காலங்களில் தனது அரசியல் செயற்பாடுகளுக்கு எதிராக செயற்பட்டவர் என்றும், தமது சமூகத்திற்கு எதிராகவும் கருத்துகளை வெளியிட்டவர் என்றும் றிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

எனவே, அவர் தெரிவித்ததாகக் கூறப்படும் கருத்துகள் தவறானவை மற்றும் பொய்யானவை என குறிப்பிட்ட றிஷாட், அவற்றை அடிப்படையாகக் கொண்டு தமது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் முயற்சிகளை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் விளக்கமளிப்பதற்காக இன்று (19) நிந்தவூர் பிரதேச சபை மண்டபத்தில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்தக் கருத்துகளை வெளியிட்டுள்ளார்.

மேலும், எந்தவொரு குற்றச்சாட்டும் உரிய ஆதாரங்களின் அடிப்படையில் விசாரிக்கப்பட வேண்டும் என்றும், ஊடகச் செய்திகள் அல்லது சரிபார்க்கப்படாத பிரசாரங்களை அடிப்படையாகக் கொண்டு ஒருவரை குற்றவாளியாகக் கருதுவது பொருத்தமற்றது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தன்னை தொடர்புபடுத்தி குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டதாகவும், அந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட பின்னர் நீதிமன்ற நடவடிக்கைகள் மூலம் விடுவிக்கப்பட்டதாகவும் றிஷாட் பதியுதீன் குறிப்பிட்டுள்ளார்.

தான் எந்தவொரு தீவிரவாத அல்லது பயங்கரவாத நடவடிக்கைக்கும் ஆதரவளித்ததில்லை என தெரிவித்த அவர், எந்தவொரு சட்டபூர்வமான விசாரணைக்கும் முழுமையாக ஒத்துழைக்கத் தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார்.

ஆதாரமின்றி தமது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சிப்பவர்களுக்கு எதிராக சட்டத்தின் ஊடாக தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore