25 பயிலுநர்களுக்கு மூன்றாவது நாள் நடைமுறைப் பயிற்சி
அம்பாறை மாவட்டத்தில் நீர்சார் அனர்த்தங்கள் மற்றும் அவசரகால நிலைமைகளின்போது உயிர்களைக் காப்பாற்றக்கூடிய திறமையான உயிர்காக்கும் மற்றும் மீட்புப் பணியாளர்களை உருவாக்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டு வரும் அம்பாறை மாவட்ட உயிர்காக்கும் மற்றும் அவசரகால மீட்புக் குழுவின் இரண்டாம் கட்ட பயிற்சித் திட்டம் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரதிப் பணிப்பாளர் எம்.ஏ.சீ.எம். றியாஸ் அவர்களின் நேரடி கண்காணிப்பின் கீழ் இடம்பெறும் இப்பயிற்சித் திட்டத்தின் கீழ், பயிலுநர்களுக்கான மூன்றாவது நாள் நடைமுறை நீச்சல் பயிற்சி இன்று (19) சனிக்கிழமை சம்மாந்துறை ஜனாதிபதி விளையாட்டுக் கட்டடத் தொகுதியில் அமைந்துள்ள நீச்சல் தடாகத்தில் நடைபெற்றது.
அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தெரிவுசெய்யப்பட்ட 25 பயிலுநர்கள் இந்நடைமுறைப் பயிற்சியில் கலந்துகொண்டனர்.
இதன்போது, அம்பாறை மாவட்ட உயிர்காக்கும் மற்றும் அவசரகால மீட்புக் குழுவில் ஏற்கனவே பயிற்சி பெற்ற எம்.டி.எம். றிசாட், எம்.டி.எம். இஸ்காத், எஸ்.என். தில்சாத் பர்வீஸ் மற்றும் எஸ்.ஐ.எம். பிறோஸ் ஆகியோரால் பயிலுநர்களுக்கு நடைமுறைப் பயிற்சிகள் வழங்கப்பட்டன.
நீச்சல் தடாகத்தில் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு விதிமுறைகள், நீச்சலின் அடிப்படை நுட்பங்கள், நீரில் பாதுகாப்பாகச் செயற்படும் முறைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் பயிற்சிகள் வழங்கப்பட்டன.
அத்துடன், நீரில் ஏற்படும் அவசரநிலைகளின்போது துரிதமாகவும் பாதுகாப்பாகவும் செயற்பட்டு உயிர்களைக் காப்பாற்றுவதற்கான ஆரம்பகட்ட மீட்பு நடவடிக்கைகள் மற்றும் அவசரகால சூழ்நிலைகளில் மேற்கொள்ள வேண்டிய நடைமுறைச் செயற்பாடுகள் தொடர்பிலும் பயிலுநர்களுக்கு வழிகாட்டல்கள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில், அம்பாறை மாவட்ட உயிர்காக்கும் மற்றும் அவசரகால மீட்புக் குழுவில் பயிற்சி பெற்ற உறுப்பினர்களான ஏ.ஆர்.எம். மஜீட், எம்.டி. பைசல் முகம்மட், எம்.எம். சதாத் மற்றும் என்.டி.எம். ஜெமீன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
ஒரு உயிரைக் காப்பாற்றும் திறன் ஒரு நாளில் உருவாகாது; தொடர்ச்சியான பயிற்சியும் நடைமுறை அனுபவமும் அவசியம். அந்த வகையில், அம்பாறை மாவட்டத்தில் ஏற்படக்கூடிய நீர்சார் அனர்த்தங்கள் மற்றும் அவசரகால நிலைமைகளின்போது துரிதமாகச் செயற்பட்டு உயிர்களைக் காப்பாற்றக்கூடிய திறமையான உயிர்காக்கும் மற்றும் மீட்புப் பணியாளர்களை உருவாக்கும் நோக்கில் இப்பயிற்சித் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.





