- – ஷாதிர் ஏ ஜப்பார் –
வீடியோ பார்வையிட : CLICK_HERE
சம்மாந்துறை பிரதேசத்தில் மீன் விற்பனையாளர்கள் எதிர்கொண்டு வரும் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வொன்றை பெற்றுக்கொள்வது தொடர்பில், மீனவர் அமைப்பின் பிரதிநிதிகள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
அம்பாறை மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனை சந்தித்த மீனவர் பிரதிநிதிகள், குறிப்பாக பாதையோரங்களில் மீன் விற்பனை செய்வது தொடர்பில் அண்மைக்காலமாக மேற்கொள்ளப்பட்டு வரும் சட்ட நடவடிக்கைகள் காரணமாக தாம் எதிர்கொள்ளும் சிரமங்கள் குறித்து எடுத்துரைத்துள்ளனர்.
கடந்த 17ஆம் திகதி சம்மாந்துறை பகுதியில் பாதையோர மீன் விற்பனைக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின்போது, 12 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வழக்குகள் தொடரப்பட்டதாகவும் மீனவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதையோரங்களில் மீன் விற்பனை செய்வதால் பொதுமக்களுக்கு ஏற்படும் போக்குவரத்து மற்றும் சுகாதார ரீதியான அசௌகரியங்கள் தொடர்பில் தொடர்ச்சியாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதைத் தொடர்ந்து, சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம், பொலிஸ், வீதி அபிவிருத்தி அதிகார சபை மற்றும் பிரதேச சபை உள்ளிட்ட நிறுவனங்கள் இணைந்து பல்வேறு சந்தர்ப்பங்களில் சோதனை மற்றும் சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தன.
எனினும், மீன் விற்பனையாளர்களின் வாழ்வாதாரத்தையும் கருத்திற்கொண்டு, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் மாற்று இடமொன்றை ஏற்பாடு செய்து வழங்குவதன் மூலம் இப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டும் என மீனவர் பிரதிநிதிகள் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதனையடுத்து, பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்களின் அதிகாரிகளை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு, மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினை மற்றும் அதற்கான சாத்தியமான தீர்வுகள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளார்.
இதன்போது, பொதுமக்களுக்கு அசௌகரியம் ஏற்படாத வகையிலும் மீன் விற்பனையாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாத வகையிலும் பொருத்தமான இடமொன்றை அடையாளம் கண்டு மீன் விற்பனை நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், குறித்த இடத்தை சுத்தமாகவும் ஒழுங்காகவும் பராமரித்து, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் பொறுப்புடன் வியாபார நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு மீன் விற்பனையாளர்களுக்கு அறிவுறுத்துவதற்கும் இணக்கம் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சந்திப்பில் சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் ஐ. எல்.எம் மாஹிர் பிரதேச சபை செயலாளர் ஐ.எல்.ஏ மஜீட், பாராளுமன்ற உறுப்பினரின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எம். எம். ஏ காதர் சம்மாந்துறை பிரதேச மீனவர் அமைப்பின் பிரதிநிதிகள் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்





