கோவை சாரமேடு பகுதியில் இஸ்லாமிய பெண்களுக்காக பிரத்யேகமாக நடத்தப்படும் உடற்பயிற்சி கூடம், அப்பகுதி பெண்களிடையே கவனம் பெற்றுள்ளது.
சுமார் 9 மாதங்களாக இந்த உடற்பயிற்சி கூடத்தை ஷபானா என்பவர் நடத்தி வருகிறார். திருமணத்திற்குப் பின்னர் உடல் எடையை குறைப்பதற்காக உடற்பயிற்சியில் ஈடுபட்ட அவர், பின்னர் பயிற்றுநராக மாறி, தமது பகுதியில் பெண்களுக்கென தனியாக இந்த உடற்பயிற்சி கூடத்தை ஆரம்பித்ததாக தெரிவித்துள்ளார்.
தற்போது இங்கு 300க்கும் மேற்பட்ட இஸ்லாமிய பெண்கள் தினமும் பயிற்சி பெறுகின்றனர். காலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை பல பிரிவுகளாக பயிற்சிகள் நடைபெறுகின்றன. பள்ளி மாணவிகள் முதல் 60 வயது வரையிலான பெண்கள் வரை இதில் பங்கேற்கின்றனர்.
பல பெண்கள் ஆரம்பத்தில் உடல் எடையை குறைப்பதற்காக வந்ததாகவும், தற்போது உடலை வலுப்படுத்துதல், உடற்பயிற்சி பழக்கம் மற்றும் உணவுமுறை குறித்த விழிப்புணர்விலும் கவனம் செலுத்துவதாகவும் தெரிவிக்கின்றனர்.
இந்த உடற்பயிற்சி கூடத்தை ஆரம்பித்தபோது சில எதிர்ப்புகள் மற்றும் சமூக விமர்சனங்களை எதிர்கொண்டதாக ஷபானா கூறியுள்ளார். ஆரம்பத்தில் சுமார் 20 பெண்கள் மட்டுமே பயிற்சிக்கு வந்த நிலையில், பின்னர் குடும்பங்களின் ஆதரவும் பெண்களின் நம்பிக்கையும் அதிகரித்ததால் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
பெண்கள் மட்டுமே பயிற்சி பெறும் சூழல் காரணமாக, தங்களுக்கு வசதியான முறையில் உடற்பயிற்சி செய்ய முடிவதாக அங்கு பயிற்சி பெறும் பெண்கள் கூறுகின்றனர். பெரும்பாலானோர் ஹிஜாப் அல்லது புர்கா அணிந்த நிலையிலும், பெண்களுக்கு ஏற்ற தனிப்பட்ட சூழலிலும் பயிற்சிகளை மேற்கொள்கின்றனர்.
இங்கு பயிற்சி பெற்ற சில பெண்கள் 7 முதல் 13 கிலோ வரை உடல் எடையை குறைத்துள்ளதாகவும், உடல் வலிமை மற்றும் அன்றாட செயல்பாடுகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் தங்களது அனுபவங்களை பகிர்ந்துள்ளனர்.
பெரிய அளவிலான நவீன உடற்பயிற்சி உபகரணங்கள் இல்லாவிட்டாலும், டிரெட்மில், ஸ்டேஷனரி பைக், டம்பள்ஸ் உள்ளிட்ட அடிப்படை உபகரணங்களுடன், தரையில் மேற்கொள்ளக்கூடிய பல்வேறு உடற்பயிற்சிகளையும் பயிற்றுநர் கற்றுக்கொடுத்து வருகிறார்.
எதிர்காலத்தில் பெரிய இடத்தில் அதிக உபகரணங்களுடன் உடற்பயிற்சி கூடத்தை விரிவுபடுத்த விரும்புவதாகவும், இதன் மூலம் மேலும் பல பெண்களுக்கு உடற்பயிற்சி வாய்ப்புகளை ஏற்படுத்த முடியும் என நம்புவதாகவும் ஷபானா தெரிவித்துள்ளார்.





