போலிச் சான்றிதழ்கள் தயாரித்த மையம் முற்றுகை – 27 வயது இளைஞர் கைது

கம்பஹா, இம்புல்கொட பகுதியில் போலிப் பட்டச் சான்றிதழ்கள், அரச ஆவணங்கள் மற்றும் நிறுவனங்களின் உத்தியோகபூர்வ முத்திரைகளை தயாரித்து வந்ததாகக் கூறப்படும் நிலையமொன்று பொலிஸாரால் முற்றுகையிடப்பட்டுள்ளது.

ராஜசிங்க மாவத்தையில் வாடகைக்கு பெறப்பட்ட வீடொன்றில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாகவும், சம்பவம் தொடர்பில் தங்காலையைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முற்றுகையின்போது 2 மடிக்கணினிகள், 2 ஸ்மார்ட்போன்கள், வர்ண அச்சுப்பொறி, 35 போலிச் சான்றிதழ்கள், 51 உத்தியோகபூர்வ முத்திரைகள் மற்றும் 3 எம்போஸ் முத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

பல்கலைக்கழகங்கள், அரச மற்றும் தனியார் நிறுவனங்கள், வங்கிகள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் உத்தியோகபூர்வ முத்திரைகள் மற்றும் கடிதத் தலைப்புகளும் அங்கு தயாரிக்கப்பட்டிருந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குறிப்பாக, உள்நாட்டு இறைவரித் திணைக்களம், பரீட்சைத் திணைக்களம் மற்றும் பல அரச பல்கலைக்கழகங்களின் முத்திரைகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் ஒரு வருடமாக இந்த நடவடிக்கை இடம்பெற்று வந்ததாகவும், சாதாரண போலிச் சான்றிதழ்கள் ரூ.25,000 முதல் ரூ.50,000 வரையிலும், வெளிநாடுகளுக்குச் செல்வதற்காக பயன்படுத்தப்படும் போலிச் சான்றிதழ்கள் ரூ.4 இலட்சம் வரை விற்பனை செய்யப்பட்டதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேலும், இவ்வாறு தயாரிக்கப்பட்ட போலி ஆவணங்களைப் பயன்படுத்தி சுமார் 200 பேர் வெளிநாடுகளுக்குச் சென்றிருக்கலாம் என சந்தேகநபர் வாக்குமூலம் வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யக்கல பொலிஸார் முன்னெடுத்து வருவதுடன், சந்தேகநபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore