ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் உள்ள ஃபிட்ஸ்ராய் நதி, 2032 பிரிஸ்பேன் ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளின் படகோட்டம் மற்றும் கேனோ ஸ்பிரிண்ட் போட்டிகளுக்கான இடமாக அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
ராக்ஹாம்ப்டன் வழியாக செல்லும் இந்த நதியில் சுமார் 500 உவர்நீர் முதலைகள் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. சில முதலைகள் 4 மீற்றர் வரை வளரக்கூடியவை. எனினும், கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலான பதிவுகளில் இப்பகுதியில் முதலை தாக்குதலால் மனித உயிரிழப்பு ஏற்பட்டதாக பதிவுகள் இல்லை.
ஆனால், ஒலிம்பிக் போட்டி ஏற்பாட்டாளர்களின் முக்கிய கவலை முதலைகள் அல்ல என தெரிவிக்கப்படுகிறது. நதியின் இயற்கையான வளைவுகள், அலைச்சல்கள் மற்றும் நீரோட்டங்கள் காரணமாக அனைத்து வீரர்களுக்கும் சமமான போட்டிச் சூழலை வழங்க முடியுமா என்பதே முக்கிய கேள்வியாக இருந்தது.
மேலும், வெள்ள அபாயம், போட்டி உள்கட்டமைப்பு மற்றும் ஆயிரக்கணக்கான பார்வையாளர்களை பிராந்திய நகரமான ராக்ஹாம்ப்டன் சமாளிக்குமா என்பது தொடர்பிலும் முன்னதாக கேள்விகள் எழுப்பப்பட்டிருந்தன.
இந்த விவகாரம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட தொழில்நுட்ப மதிப்பீட்டில் நதியின் நீர்ப்பாதை, நீரோட்டம், நீர்மட்டம் மற்றும் போட்டி காலநிலை உள்ளிட்ட அம்சங்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. அதன் பின்னர் சர்வதேச ஒலிம்பிக் குழுவும், உலக ரோயிங் அமைப்பும் இந்த இடத்திற்கு அனுமதி வழங்கியுள்ளன.
இதற்கிடையில், நதியில் முதலை காணப்பட்டால் போட்டியை உடனடியாக நிறுத்தி, வீரர்களை கரைக்கு அழைக்கும் வகையில் பாதுகாப்பு நடைமுறைகளும் உள்ளூர் போட்டிகளுக்காக வகுக்கப்பட்டுள்ளன.
தற்போது நடைபெறும் குயின்ஸ்லாந்து பள்ளிகளுக்கான படகோட்டப் போட்டியில் 600-க்கும் மேற்பட்ட இளம் வீரர்கள் பங்கேற்கின்றனர். இந்தப் போட்டி, எதிர்கால ஒலிம்பிக் போட்டிகளுக்கான இடத்தின் நடைமுறைச் சூழலை மீண்டும் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளது.
2032 ஒலிம்பிக் போட்டிகளுக்கான ஃபிட்ஸ்ராய் நதியின் ஏற்பாடுகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படவுள்ள நிலையில், முதலைகளை விட போட்டியின் நியாயம், வெள்ள அபாயம் மற்றும் உள்கட்டமைப்பு தொடர்பான கேள்விகளே அதிக கவனத்தைப் பெற்றுள்ளன.





