இங்கிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை வெற்றியுடன் ஆரம்பிக்க எதிர்பார்ப்பதாக இலங்கை ஒருநாள் அணித் தலைவர் குசல் மெண்டிஸ் தெரிவித்துள்ளார்.
இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி இன்று செப்டெம்பர் 22ஆம் தேதி டர்ஹாமில் உள்ள Chester-le-Street மைதானத்தில் நடைபெறவுள்ளது.
தொடைத் தசை காயம் காரணமாக அண்மையில் நடைபெற்ற T20 தொடரில் பங்கேற்காத குசல் மெண்டிஸ், தற்போது குணமடைந்து மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டுக்கு திரும்பியுள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான T20 தொடரை 3-0 என்ற கணக்கில் இழந்த நிலையில், ஒருநாள் தொடரில் சிறப்பான ஆரம்பத்தை பெற இலங்கை அணி தயாராக இருப்பதாக குசல் மெண்டிஸ் தெரிவித்துள்ளார்.
அவரது மீள்வரவு இலங்கையின் துடுப்பாட்ட வரிசைக்கு வலுசேர்க்கும் என எதிர்பார்க்கப்படுவதுடன், வேகப்பந்து வீச்சாளர் அசித பெர்னாண்டோவும் ஒருநாள் தொடருக்கான அணியில் இணைந்துள்ளார்.
முதலாவது ஒருநாள் போட்டி இலங்கை நேரப்படி இன்று மாலை 5.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
தொடரின் இரண்டாவது போட்டி எதிர்வரும் வியாழக்கிழமை Headingley மைதானத்திலும், மூன்றாவது போட்டி ஞாயிற்றுக்கிழமை The Oval மைதானத்திலும் நடைபெறவுள்ளன.





