உலகின் மிகச்சிறிய மற்றும் மிகவும் அரிதான தவளை இனங்களில் ஒன்றான ‘அஃபியா பிராகோவின் குட்டைக் குளத் தவளை’ (Afia Birago’s Puddle Frog) அழிவடையும் அபாயத்தை எதிர்கொண்டுள்ள நிலையில், அதனைப் பாதுகாப்பதற்காக கானா மற்றும் பிரித்தானியாவைச் சேர்ந்த பாதுகாப்பு அமைப்புகள் இணைந்து தீவிர நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றன.
மேற்கு ஆபிரிக்க நாடான கானாவின் தென்கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள Atewa மலைத்தொடர் வனப் பாதுகாப்புப் பகுதியில் மட்டுமே இந்தத் தவளை இனம் காணப்படுகிறது. முழுமையாக வளர்ந்த தவளையின் நீளம் சுமார் இரண்டு சென்டிமீற்றர்கள் மட்டுமே என்பதுடன், அதன் எடை 1.75 கிராமுக்கும் குறைவாகும். குஞ்சு நிலையில் அதன் அளவு சுமார் 5 மில்லிமீற்றர் மட்டுமே எனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தத் தவளை உலகில் வேறு எந்தப் பகுதியிலும் காணப்படவில்லை. குறிப்பாக, Atewa வனப் பகுதியில் அமைந்துள்ள ஆண்டு முழுவதும் நீர் காணப்படும் இரண்டு சிறிய குளங்களில் மட்டுமே இவை உயிர்வாழ்கின்றன.
தாயின் பெயரைச் சூட்டிய விஞ்ஞானி
கானாவைச் சேர்ந்த வனவிலங்கு பாதுகாப்பு உயிரியல் ஆய்வாளரான கலேப் ஓஃபோரி-போட்டெங் (Caleb Ofori-Boateng), தனது தாயாரான அஃபியா பிராகோவின் பெயரை இந்தத் தவளைக்கு சூட்டியுள்ளார்.
2018ஆம் ஆண்டு இந்தத் தவளை இனம் விஞ்ஞான ரீதியாக அறிமுகப்படுத்தப்பட்டது. அஃபியா என்ற பெயர் கானாவில் பேசப்படும் அகான் மொழியில் வெள்ளிக்கிழமை பிறந்தவர் என்ற பொருளைக் கொண்டுள்ளது.
கலேப் ஓஃபோரி-போட்டெங்கின் தந்தை, அவர் சிறுவனாக இருந்தபோது உயிரிழந்ததைத் தொடர்ந்து, எட்டு பிள்ளைகளையும் அவரது தாயார் தனியாக வளர்த்துள்ளார். பயன்படுத்தப்பட்ட ஆடைகளைத் தலையில் சுமந்து சந்தைகளில் விற்பனை செய்து கிடைத்த வருமானத்தின் பெரும்பகுதியை தனது பிள்ளைகளின் கல்விக்காக அவர் செலவிட்டுள்ளார்.
தனது தாயாரின் தியாகத்தை நினைவுகூரும் வகையில் இந்த அரிய தவளை இனத்திற்கு அவரது பெயரைச் சூட்டியதாக கலேப் தெரிவித்துள்ளார்.
அழிவின் அச்சுறுத்தலில் தவளை இனம்
உலகில் அழிவை எதிர்கொள்ளும் முதுகெலும்புள்ள உயிரினங்களில் நீர்நில வாழ்வன்கள் (Amphibians) மிகவும் பாதிக்கப்பட்ட குழுவாக உள்ளன. உலகளவில் இவ்வகை உயிரினங்களில் ஐந்தில் இரண்டு இனங்கள் அழிவின் அபாயத்தை எதிர்கொள்வதாக சர்வதேச இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் (IUCN) தகவல்கள் தெரிவிக்கின்றன.
கானாவில் காடுகள் அழிக்கப்படுதல், விவசாயத்தில் பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லிகள், தவளைகளை உணவுக்காகப் பிடித்தல் போன்ற காரணிகள் அவற்றின் வாழ்விடங்களையும் எண்ணிக்கையையும் பாதித்து வருகின்றன.
கலேப் ஓஃபோரி-போட்டெங், 2005ஆம் ஆண்டு பல்கலைக்கழகப் படிப்பை முடித்த பின்னர், சுமார் நான்கு தசாப்தங்களாக அழிந்துவிட்டதாகக் கருதப்பட்ட Togo Slippery Frog என்ற தவளை இனத்தை மீண்டும் கண்டறிய உதவியுள்ளார். இதனைத் தொடர்ந்து 2006ஆம் ஆண்டு Herp Conservation Ghana என்ற இலாப நோக்கற்ற அமைப்பையும் அவர் நிறுவினார்.
அந்த அமைப்பின் பாதுகாப்பு நடவடிக்கைகளால், கானா–டோகோ எல்லைப் பகுதியில் காணப்படும் மிகவும் ஆபத்தான நிலையில் இருந்த அந்தத் தவளையின் எண்ணிக்கை சுமார் 100இலிருந்து 800க்கும் அதிகமாக உயர்ந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
சட்டவிரோத சுரங்க நடவடிக்கைகளால் அச்சுறுத்தல்
அஃபியா பிராகோ தவளையின் வாழ்விடமாக விளங்கும் Atewa வனப் பகுதியும் பல்வேறு அச்சுறுத்தல்களை எதிர்கொள்கிறது.
இந்தப் பகுதியில் பாக்சைட் கனிம அகழ்வுக்கான அனுமதிகளை வழங்கிய சட்ட நடவடிக்கைகள், பாதுகாப்பு அமைப்புகளின் அழுத்தத்தைத் தொடர்ந்து 2025 டிசம்பரில் ரத்து செய்யப்பட்டன.
எனினும், சட்டவிரோத சிறிய அளவிலான தங்க அகழ்வுப் பணிகள் (Galamsey) தொடர்ந்து கவலையை ஏற்படுத்தி வருகின்றன. இத்தகைய நடவடிக்கைகளால் வனப்பகுதிகள் அழிக்கப்படுவதுடன், நீர்நிலைகளும் மாசுபடுகின்றன.
இந்தச் சுரங்க நடவடிக்கைகள் காரணமாக உருவாகும் சுற்றுச்சூழல் பாதிப்புகளை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டுவருவது மிகவும் கடினம் என கலேப் எச்சரித்துள்ளார்.
லண்டன் மிருகக்காட்சிசாலையில் வெற்றிகரமான இனப்பெருக்கம்
இந்த அரிய தவளை இனத்தைப் பாதுகாப்பதற்காக, கடந்த ஆண்டு 20 வளர்ந்த தவளைகள் பிரித்தானியாவின் லண்டன் மிருகக்காட்சிசாலைக்கு (London Zoo) கொண்டு செல்லப்பட்டன.
Zoological Society of London (ZSL), Herp Conservation Ghana மற்றும் கானாவின் CSIR-Forestry Research Institute of Ghana ஆகிய அமைப்புகள் இணைந்து இந்தப் பாதுகாப்புத் திட்டத்தை முன்னெடுத்தன.
சிறைச்சூழலில் இதற்கு முன்னர் இனப்பெருக்கம் செய்யப்படாத இந்தத் தவளையின் இனப்பெருக்க முறைகள் குறித்து ஆராய்ச்சியாளர்களுக்கு ஆரம்பத்தில் போதிய தகவல்கள் இருக்கவில்லை.
லண்டன் மிருகக்காட்சிசாலையின் நீர்நில வாழ்வன்கள் மற்றும் ஊர்வன உயிரினங்களுக்கான பொறுப்பாளர் பென் டாப்லி (Ben Tapley), இந்தத் தவளைகளின் உணவுப் பழக்கம், இனப்பெருக்க முறை மற்றும் தலைப்பிரட்டைகளின் வளர்ச்சிக்குத் தேவையான சூழல் குறித்து ஆய்வுகளை மேற்கொண்டார்.
சிறிய ஆறு கால்களைக் கொண்ட Springtails என்ற உயிரினங்களை இந்தத் தவளைகள் விரும்பி உண்பது கண்டறியப்பட்டது. மேலும், மழைப்பொழிவு அவற்றின் இனப்பெருக்கத்தைத் தூண்டும் முக்கிய காரணியாக இருப்பதும் ஆய்வுகள் மூலம் தெரியவந்தது.
இதனை அடிப்படையாகக் கொண்டு அவற்றின் வாழ்விடத்தில் ஈரப்பதம் படிப்படியாக அதிகரிக்கப்பட்டது. இதன் பின்னர் 15 தலைப்பிரட்டைகள் (Tadpoles) உருவாகியுள்ளன. இந்த வெற்றி, சிறைச்சூழலில் இந்தத் தவளை இனத்தை இனப்பெருக்கம் செய்ய முடியும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.
தலைப்பிரட்டைகளும் புதிதாக உருவான சிறிய தவளைகளும் மிகவும் நுண்ணிய அளவில் இருந்ததால், அவற்றுக்குப் பாதிப்பு ஏற்படக்கூடும் என்பதைக் கருத்தில் கொண்டு ஆராய்ச்சியாளர்கள் அவற்றை நேரடியாகக் கையாள்வதையும் தவிர்த்துள்ளனர்.
கானாவிலும் புதிய இனப்பெருக்க மையம்
லண்டனில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் மூலம் கிடைத்த தகவல்கள் கானாவின் CSIR-FORIG நிறுவனத்துடன் பகிரப்பட்டுள்ளன.
இதனடிப்படையில், கானாவின் குமாசி (Kumasi) பகுதியில் அமைக்கப்படவுள்ள சிறப்பு நீர்நில வாழ்வன்கள் இனப்பெருக்க மையத்தில் அஃபியா பிராகோ தவளைகளுக்கான புதிய இனப்பெருக்கத் திட்டத்தை முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், Atewa வனப் பாதுகாப்புப் பகுதியின் எல்லையோரத்தில் ஒரு நிலப்பகுதியைக் கொள்வனவு செய்வதற்கான நிதியுதவியை வழங்க நெதர்லாந்தின் IUCN தேசியக் குழு முன்வந்துள்ளதாக கலேப் தெரிவித்துள்ளார்.
அங்கு அடர்ந்த வனப்பகுதியால் சூழப்பட்ட குளம் ஒன்று காணப்படுவதால், இனப்பெருக்க மையத்தில் வளர்க்கப்படும் தவளைகளை மீண்டும் இயற்கைச் சூழலில் அறிமுகப்படுத்துவதற்கு அந்த இடம் பொருத்தமானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலகின் மிகச்சிறிய தவளைகளில் ஒன்றான இந்த உயிரினத்தை அழிவிலிருந்து காப்பாற்றுவதற்கான முயற்சிகள் தற்போது நம்பிக்கையளிக்கும் கட்டத்தை எட்டியுள்ளன. இருப்பினும், அதன் இயற்கையான வாழ்விடங்களைப் பாதுகாப்பதும் சட்டவிரோத சுரங்க நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதும் இந்த அரிய உயிரினத்தின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானதாகக் கருதப்படுகிறது.





