பலஸ்தீன மனித உரிமை விவகாரங்களுக்கான ஐ.நா. சிறப்பு அறிக்கையாளருக்கு கோஸ்டா ரிக்கா நாட்டுக்குள் நுழையத் தடை!

“பயங்கரவாதச் செயல்களுடனான தொடர்பு” குறித்த சர்வதேச எச்சரிக்கையை காரணம் காட்டி நடவடிக்கை – குற்றச்சாட்டுக்கு ஆதாரம் வெளியிடப்படவில்லை; ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் கவலை!

பலஸ்தீனப் பிரதேசங்களின் மனித உரிமைகள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் (ஐ.நா.) சிறப்பு அறிக்கையாளர் பிரான்செஸ்கா அல்பனீஸை (Francesca Albanese) நாட்டுக்குள் அனுமதிக்க கோஸ்டா ரிக்கா மறுத்துள்ளது. தேசிய பாதுகாப்பு தொடர்பான காரணங்களையும், பயங்கரவாதச் செயல்களுடனான தொடர்பு குறித்த சர்வதேச எச்சரிக்கையையும் சுட்டிக்காட்டி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு குடிவரவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இத்தாலியைச் சேர்ந்த சட்டத்தரணியான பிரான்செஸ்கா அல்பனீஸ், பலஸ்தீனப் பிரதேசங்களில் மனித உரிமைகள் நிலைமை தொடர்பில் கண்காணித்து அறிக்கையிடுவதற்காக ஐக்கிய நாடுகள் சபையினால் நியமிக்கப்பட்ட சுயாதீன நிபுணராவார்.

கோஸ்டா ரிக்காவின் தலைநகர் சான் ஜோஸுக்கு அருகிலுள்ள ஜுவான் சாந்தமரியா சர்வதேச விமான நிலையத்தைச் சென்றடைந்த அவர், நாட்டுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து விமான நிலையத்தின் சர்வதேசப் பகுதியில் தங்கியிருந்ததாக இத்தாலி வெளிவிவகார அமைச்சு வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

நுழைவுத் தடைக்கான காரணம் என்ன?

கோஸ்டா ரிக்கா குடிவரவு அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் ஓமர் படில்லா, கடந்த வியாழக்கிழமை வெளியிட்ட காணொளி அறிக்கையில், அல்பனீஸுக்கு எதிராக “பயங்கரவாதச் செயல்களுடனான தொடர்பு குறித்த சர்வதேச எச்சரிக்கை” இருப்பதாகக் குறிப்பிட்டு, அதன் அடிப்படையில் நாட்டுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.

எனினும், இந்த எச்சரிக்கையை எந்த அமைப்பு அல்லது நாடு வெளியிட்டது என்பது தொடர்பான விபரங்களையும், குற்றச்சாட்டை உறுதிப்படுத்தும் ஆதாரங்களையும் அவர் வெளியிடவில்லை.

தேசிய பாதுகாப்பு பாதிக்கப்படும் சூழ்நிலையில், நாட்டின் சட்ட விதிகளுக்கு அமைவாக பாதுகாப்புத் தரப்பினர் நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதற்குப் பதிலளித்த பிரான்செஸ்கா அல்பனீஸ், “மனித உரிமைகளைப் பாதுகாப்பது பயங்கரவாதம் அல்ல” எனத் தனது சமூக ஊடகப் பதிவில் தெரிவித்துள்ளார்.

மேலும், கோஸ்டா ரிக்காவின் La Nación செய்தித்தாளுக்கு வழங்கிய நேர்காணலில், தமக்கு எதிராக ஆதாரங்கள் இருந்தால் அவற்றை அதிகாரிகள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும், ஆதாரங்கள் இல்லாவிட்டால் தமது குற்றச்சாட்டுகளுக்குப் பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கௌரவப் பட்டம் வழங்கும் நிகழ்வில் விமான நிலையத்திலிருந்து பங்கேற்பு

கோஸ்டா ரிக்கா பல்கலைக்கழகத்தினால் (University of Costa Rica) வழங்கப்படவிருந்த கௌரவ கலாநிதிப் பட்டத்தைப் பெற்றுக்கொள்வதற்காகவே அல்பனீஸ் அந்நாட்டுக்குப் பயணம் மேற்கொண்டிருந்தார்.

எனினும், நாட்டுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டதால், விமான நிலையத்தின் சர்வதேசப் பகுதியில் இருந்தவாறே காணொளி அழைப்பு மூலம் கௌரவப் பட்டம் வழங்கும் நிகழ்வில் அவர் பங்கேற்றார்.

குறித்த பல்கலைக்கழகம் தனது நிகழ்வைத் திட்டமிட்டபடி நடத்தியதுடன், குடிவரவு அதிகாரிகளும் வெளிவிவகார அமைச்சும் இந்த முடிவுக்கான சட்ட அடிப்படையை விளக்க வேண்டும் என முன்னதாகக் கோரியிருந்தது.

ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு அறிக்கையாளர் ஒருவருக்கு கல்விசார் கௌரவத்தைப் பெற்றுக்கொள்வதற்காக நாட்டுக்குள் நுழைய முடியாத நிலை ஏற்பட்டிருப்பது மிகவும் பாரதூரமான விடயம் எனப் பல்கலைக்கழகம் சுட்டிக்காட்டியிருந்தது.

தனது ஏற்புரையில், கோஸ்டா ரிக்கா அரசாங்கத்தின் குற்றச்சாட்டுகளை அல்பனீஸ் நிராகரித்ததுடன், அமெரிக்க நிதியமைச்சினால் தமக்கு விதிக்கப்பட்ட தடைகளுக்கும் கோஸ்டா ரிக்காவுக்குள் நுழைய மறுக்கப்பட்டதற்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் கவலை

இந்தச் சம்பவம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் (Volker Türk) ஆழ்ந்த கவலை வெளியிட்டுள்ளார்.

தேசிய பாதுகாப்பு காரணங்களை முன்வைத்து அல்பனீஸுக்கு நுழைவு அனுமதி மறுக்கப்பட்ட தீர்மானம், மனித உரிமைகளுக்கான நீண்டகால அர்ப்பணிப்பைக் கொண்ட கோஸ்டா ரிக்காவின் நிலைப்பாட்டுடன் ஒத்துப்போகவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், குறித்த தீர்மானத்தை மீள்பரிசீலனை செய்து, பிரான்செஸ்கா அல்பனீஸை நாட்டுக்குள் அனுமதிக்குமாறு கோஸ்டா ரிக்கா அதிகாரிகளை அவர் வலியுறுத்தியுள்ளார்.

இத்தாலி வெளிவிவகார அமைச்சின் தகவலின்படி, அல்பனீஸ் விமான நிலையத்தின் சர்வதேசப் பகுதியில் தங்கியிருந்ததால், அவர் சட்டரீதியாக கோஸ்டா ரிக்கா நாட்டுக்குள் நுழைந்ததாகக் கருதப்படவில்லை.

அமெரிக்காவின் தடைகளும் பின்னணியும்

2022ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் பலஸ்தீனப் பிரதேசங்களுக்கான சிறப்பு அறிக்கையாளராக நியமிக்கப்பட்ட பிரான்செஸ்கா அல்பனீஸ், காஸா மீதான இஸ்ரேலிய இராணுவ நடவடிக்கைகளைத் தொடர்ந்து விமர்சித்து வந்துள்ளார்.

பலஸ்தீன மக்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்பில் இஸ்ரேல் மீது இனப்படுகொலை குற்றச்சாட்டுகளையும் அவர் முன்வைத்திருந்தார். இவை தொடர்பான அவரது கருத்துக்கள் சர்வதேச அரசியல் மற்றும் மனித உரிமைகள் விவாதங்களில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளன.

2025ஆம் ஆண்டு, அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய பிரஜைகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துடன் (ICC) இணைந்து செயற்பட்டதாக அவர் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து அமெரிக்கா அவருக்கு எதிராகத் தடைகளை அறிவித்தது.

அப்போது அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோ, அல்பனீஸ் மீது யூத எதிர்ப்பு மற்றும் பயங்கரவாதத்திற்கு ஆதரவளித்தல் தொடர்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார். எனினும், அந்தக் குற்றச்சாட்டுகளை அல்பனீஸ் நிராகரித்துள்ளார்.

அமெரிக்க நிதியமைச்சின் தடைகள் காரணமாக, கடந்த மாதம் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் தனது சமீபத்திய அறிக்கையை நேரடியாகச் சமர்ப்பிக்க அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொள்ள முடியாமல் போனதாகவும், காணொளி ஊடாகவே பங்கேற்க வேண்டியிருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச அரசியல் விவாதத்தை ஏற்படுத்திய சம்பவம்

கோஸ்டா ரிக்காவின் வலதுசாரி ஜனாதிபதி லோரா பெர்னாண்டஸின் அரசாங்கம், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்துடன் நெருங்கிய உறவுகளைப் பேணி வருகின்றது. பாதுகாப்பு மற்றும் குடிவரவு விவகாரங்களில் இரு நாடுகளுக்கும் இடையில் ஒத்துழைப்பும் காணப்படுகின்றது.

இதற்கிடையில், இஸ்ரேலின் ஐக்கிய நாடுகள் சபைக்கான தூதர் டேனி டனோன், கோஸ்டா ரிக்காவின் தீர்மானத்தை வரவேற்று அல்பனீஸ் மீது விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

எனினும், இந்த விவகாரத்தில் கோஸ்டா ரிக்கா அரசாங்கம் முன்வைத்துள்ள தேசிய பாதுகாப்பு குறித்த குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்கள் இதுவரை பொதுவெளியில் வெளியிடப்படவில்லை.

ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு அறிக்கையாளருக்கு நாட்டுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளமை, மனித உரிமைப் பாதுகாப்பு, தேசிய பாதுகாப்பு மற்றும் சர்வதேச அமைப்புகளின் சுயாதீனப் பணிகள் தொடர்பான புதிய விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore