உலகப் புகழ்பெற்ற மல்யுத்தப் போட்டி நிறுவனமான WWE இன் நட்சத்திர வீரர் பிரான்சன் ரீட் (Bronson Reed), தனது 38ஆவது வயதில் உயிரிழந்துள்ளதாக WWE நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அவரது உண்மையான பெயர் ஜெர்மைன் ஹேலி (Jermaine Haley) என்பதுடன், மருத்துவச் சிக்கல்கள் காரணமாக அவர் உயிரிழந்துள்ளதாக WWE நிறுவனம் கடந்த வெள்ளிக்கிழமை (27) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அவரது மறைவு தொடர்பான மேலதிக மருத்துவ விபரங்களையோ அல்லது உயிரிழப்புக்கான குறிப்பிட்ட காரணத்தையோ WWE நிறுவனம் வெளியிடவில்லை.
WWE நிறுவனத்தின் இரங்கல்
பிரான்சன் ரீட்டின் மறைவு குறித்து WWE நிறுவனம் வெளியிட்ட இரங்கல் செய்தியில், அவர் WWE அரங்கில் மிகப்பெரிய ஆளுமையாக விளங்கியவர் என்றும், அதற்கு அப்பால் சிறந்த மனிதராகவும், அர்ப்பணிப்புமிக்க குடும்பத் தலைவராகவும், சக ஊழியர்களால் பெரிதும் நேசிக்கப்பட்டவராகவும் இருந்தார் என்றும் குறிப்பிட்டுள்ளது.
அவரது மறைவு மல்யுத்த ரசிகர்கள் மற்றும் WWE வட்டாரத்தினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Crown Jewel போட்டியில் ஏற்பட்ட காயம்
பிரான்சன் ரீட்டின் மறைவுக்கு முன்னதாக, இம்மாதம் நடைபெற்ற WWE Crown Jewel போட்டியின்போது அவர் காயமடைந்திருந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த போட்டியின்போது ஏற்பட்ட காயம் காரணமாக அவருக்கு பல விலா எலும்பு முறிவுகளும், சிறுநீரகத்தில் கிழிவும் ஏற்பட்டதாக பல்வேறு ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இதனைத் தொடர்ந்து மேலதிக மருத்துவ சிகிச்சைகளுக்காக அவர் சவூதி அரேபியாவில் தங்கியிருந்ததாகவும் அந்த அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.
எனினும், WWE நிறுவனம் அவரது உயிரிழப்புக்கான காரணமாக மருத்துவச் சிக்கல்களையே குறிப்பிட்டுள்ளதுடன், Crown Jewel போட்டியில் ஏற்பட்ட காயங்களுக்கும் அவரது மரணத்திற்கும் இடையிலான தொடர்பு குறித்து அதிகாரப்பூர்வமாக எந்தத் தகவலையும் வெளியிடவில்லை.
இரண்டு முறை WWE நிறுவனத்தில் இணைந்த வீரர்
அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த பிரான்சன் ரீட், 2019ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரை WWE நிறுவனத்தில் பணியாற்றியிருந்தார்.
பின்னர் 2022ஆம் ஆண்டு மீண்டும் WWE நிறுவனத்துடன் இணைந்த அவர், தனது மறைவு வரை அந்நிறுவனத்தின் முக்கிய மல்யுத்த வீரர்களில் ஒருவராகத் திகழ்ந்தார்.
அவரது உடல் வலிமை, போட்டிகளில் வெளிப்படுத்திய திறமை மற்றும் தனித்துவமான மல்யுத்தப் பாணி காரணமாக உலகளாவிய ரசிகர்களிடையே பிரபலமடைந்திருந்தார்.
மல்யுத்த உலகில் தொடரும் மரணச் செய்திகள்
கடந்த சில மாதங்களுக்குள் உயிரிழந்த இரண்டாவது மல்யுத்த வீரராக பிரான்சன் ரீட் குறிப்பிடப்படுகிறார்.
இதற்கு முன்னதாக, இங்கிலாந்தைச் சேர்ந்த மல்யுத்த வீரர் பெஞ்சமின் சாட்டர்லி (Benjamin Satterley) கடந்த செப்டம்பர் மாதம் தனது 40ஆவது வயதில் உயிரிழந்திருந்தார்.
அவரது உயிரிழப்புக்கான காரணம் குறித்த விபரங்களும் அப்போது வெளியிடப்படவில்லை.
38 வயதிலேயே பிரான்சன் ரீட் உயிரிழந்துள்ளமை மல்யுத்த ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.





