இந்தியாவின் புதுடில்லியில் நடைபெற்ற இந்து சமுத்திர விளிம்பு நாடுகள் சங்கத்தின் (IORA) 25ஆவது அமைச்சர்கள் கூட்டத்தில், அமைப்பிற்குள் வலுவானதும் பயனுள்ளதுமான ஒத்துழைப்பை ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தை இலங்கை வலியுறுத்தியுள்ளது.
கடந்த நவம்பர் 27ஆம் திகதி நடைபெற்ற இக்கூட்டத்தில் இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் கலந்துகொண்டு உரையாற்றியபோது இந்தக் கருத்தை முன்வைத்துள்ளார்.
IORA அமைப்பின் முன்னாள் தலைவராகவும், அதன் முக்கூட்டு (Troika) உறுப்பினராகவும் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி உரையாற்றிய அமைச்சர், கடல்சார் பாதுகாப்பு, மீன்பிடித்துறை, நீலக் காபன் (Blue Carbon), அனர்த்தங்களுக்கான தயார்நிலை மற்றும் நீலப் பொருளாதாரம் உள்ளிட்ட முக்கிய துறைகளில் நடைமுறை ரீதியான ஒத்துழைப்பை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தைச் சுட்டிக்காட்டினார்.
மேலும், இந்த ஒத்துழைப்புகள் வெறுமனே கலந்துரையாடல்களுடன் மட்டுப்படுத்தப்படாமல், கரையோரப் பகுதிகளில் வாழும் மக்களுக்கு நேரடியான மற்றும் பயனுள்ள நன்மைகளை வழங்கக்கூடிய வகையில் அமைய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இந்தியாவின் தலைமையின் கீழ் முன்னெடுக்கப்படும் இவ்வாண்டுக்கான IORA செயற்பாடுகள், “இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் புத்தாக்கம், திறந்தநிலை, மீள்தன்மை மற்றும் தகவமைத்தல்” (Innovation, Openness, Resilience and Adaptability in the Indian Ocean Region) என்ற தொனிப்பொருளை அடிப்படையாகக் கொண்டுள்ளன.
இந்நிலையில், IORA அமைப்பின் கூட்டுக் குரலை மேலும் வலுப்படுத்துவதற்கும், ஏற்கனவே இணக்கம் காணப்பட்ட முன்னுரிமைகளை நடைமுறைச் செயற்பாடுகளாக மாற்றுவதற்கும் இலங்கை தனது உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
இந்தியப் பெருங்கடல் பிராந்திய நாடுகளுக்கு இடையிலான உறவுகளை வலுப்படுத்துவதிலும், கடல்சார் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்துவதிலும் இக்கூட்டம் முக்கியத்துவம் பெறுகின்றது.
சம்மாந்துறை TREND





