தென் கொரியாவின் கியோங்கி மாகாணத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு இலங்கைத் தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சுமார் 30 வயது மதிக்கத்தக்க இரு இலங்கையர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். தமது பணிகளை முடித்துக்கொண்டு தங்குமிடத்திற்கு நடந்து சென்றுகொண்டிருந்தபோதே அவர்கள் இந்த விபத்துக்கு முகங்கொடுத்துள்ளனர்.
கடந்த நவம்பர் 26ஆம் திகதி இரவு சுமார் 9.10 மணியளவில், கியோங்கி மாகாணத்தின் ஹ்வாசோங் (Hwaseong) நகரிலுள்ள ஜங்கன்-மியோன் (Jangan-myeon) பகுதியில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, வீதியோரமாக நடந்து சென்றுகொண்டிருந்த இரு இலங்கையர்களும், 7.5 தொன் எடையுடைய லொறி ஒன்றின் பின்பகுதியிலுள்ள சரக்குப் பெட்டியிலிருந்து வெளியே நீட்டிக்கொண்டிருந்த பாகமொன்றில் மோதியுள்ளனர். இதனையடுத்தே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த இருவரும் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கைத் தொழிலாளர்களின் பாதுகாப்பு தொடர்பில் இச்சம்பவம் மீண்டும் கவலைகளை ஏற்படுத்தியுள்ளது.





