தென்னாப்பிரிக்காவில் சில மணி நேர இடைவெளியில் இரு துப்பாக்கிச்சூடுகள் – 27 பேர் உயிரிழப்பு

தென்னாப்பிரிக்காவில் சில மணி நேர இடைவெளியில் இடம்பெற்ற இரண்டு வெவ்வேறு துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களில் 27 பேர் உயிரிழந்துள்ளதுடன், 26 பேர் காயமடைந்துள்ளனர்.

ஜோகன்னஸ்பர்க் அருகே சனிக்கிழமை இரவு மதுபான விடுதி ஒன்றில் புகுந்த 8 துப்பாக்கிதாரிகள் நடத்திய தாக்குதலில் 17 பேர் உயிரிழந்ததுடன், மேலும் 15 பேர் காயமடைந்தனர்.

துப்பாக்கிதாரிகள் மதுபான விடுதிக்கு வெளியே இருந்தவர்கள் மீது முதலில் துப்பாக்கிச்சூடு நடத்திய பின்னர், கட்டிடத்திற்குள் சென்று தாக்குதல் நடத்தியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவர்கள் தப்பிச் செல்லும் போது இரண்டு வாகனங்களுக்கும் தீ வைத்துள்ளனர்.

இந்தச் சம்பவத்தில் 13 ஆண்களும் 4 பெண்களும் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் எத்தியோப்பியா மற்றும் லெசோதோவைச் சேர்ந்தவர்களும் இருந்ததாக கவுதெங் மாகாண பொலிஸ் ஆணையர் லெப்டினன்ட் ஜெனரல் டொமி ம்தொம்பெனி தெரிவித்துள்ளார்.

தாக்குதலுக்கான காரணம் தொடர்பில் பொலிஸார் உறுதியான தகவலை வெளியிடவில்லை. எனினும், பாதிக்கப்பட்டவர்களின் தனிப்பட்ட பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டிருந்ததால், கொள்ளை நோக்கமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். சட்டவிரோத சுரங்கக் குழுக்களுக்கு இடையிலான மோதலையும் நிராகரிக்க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், கேப் டவுன் அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இடம்பெற்ற மற்றொரு துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் உயிரிழந்ததுடன், 11 பேர் காயமடைந்துள்ளனர்.

அவர்களில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், மேலும் 5 பேர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தபோது உயிரிழந்தனர்.

இரு சம்பவங்களிலும் ஞாயிற்றுக்கிழமை காலை வரை எவரும் கைது செய்யப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தென்னாப்பிரிக்காவில் சட்டவிரோத ஆயுதப் பயன்பாடு மற்றும் துப்பாக்கிச்சூட்டு வன்முறை நீண்டகாலமாக பிரச்சினையாக இருந்து வருகிறது. குறிப்பாக போதைப்பொருள் கடத்தல் மற்றும் சட்டவிரோத சுரங்க நடவடிக்கைகளுடன் தொடர்புடைய குழுக்களுக்கு இடையிலான மோதல்கள் வன்முறைக்கு காரணமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த இரு துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களும் டர்பன் நகரில் 11 பேர் கொல்லப்பட்ட சம்பவம் இடம்பெற்ற சில நாட்களிலேயே நடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆதாரம்: BBC

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore