போதைப்பொருளை ஊசி மூலம் பயன்படுத்துவோரிடையே காணப்படும் ‘ப்ளூடூத்திங்’ (Bluetoothing) எனப்படும் ஆபத்தான நடைமுறை, ஹெச்ஐவி உள்ளிட்ட பல்வேறு தொற்றுநோய்கள் பரவும் அபாயத்தை அதிகரிப்பதாக சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
இந்த நடைமுறையில், ஏற்கனவே போதைப்பொருளை நரம்பு வழியாக செலுத்திக்கொண்ட ஒருவரின் உடலில் இருந்து ரத்தத்தை எடுத்து, அதனை மற்றொருவருக்கு ஊசி மூலம் செலுத்துகின்றனர். இதன் மூலம் மீதமுள்ள போதைப்பொருளின் தாக்கத்தையும் பெற முயற்சிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
குறைந்த அளவிலான போதைப்பொருளை பலர் பகிர்ந்து பயன்படுத்துவதன் மூலம் செலவை குறைக்கும் ஒரு முறையாக சிலர் இதனைப் பயன்படுத்துவதாக கூறப்படுகிறது.
ஹெச்ஐவி உள்ளிட்ட தொற்றுகளின் அபாயம்
ரத்தத்தின் மூலம் ஹெச்ஐவி பரவக்கூடிய நிலையில், இவ்வாறு ரத்தத்தை ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு செலுத்துவது மிகவும் ஆபத்தானதாகும்.
உலக சுகாதார நிறுவனம் (WHO) இந்த நடைமுறை மிக அதிக ஆபத்தை ஏற்படுத்தக்கூடியது எனக் குறிப்பிடுகிறது. ஹெச்ஐவிக்கு மேலதிகமாக ஹெபடைட்டிஸ் B, ஹெபடைட்டிஸ் C மற்றும் தீவிரமான பாக்டீரியா தொற்றுகளும் பரவக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பசிபிக் தீவு நாடான ஃபிஜியில் போதைப்பொருளை ஊசி மூலம் பயன்படுத்துவோரிடையே ஊசிகளைப் பகிர்ந்து கொள்வது ஏற்கனவே காணப்படும் நிலையில், ‘ப்ளூடூத்திங்’ தொடர்பான தகவல்களும் கவனத்தைப் பெற்றுள்ளன.
ஃபிஜியில் அதிகரிக்கும் ஹெச்ஐவி பாதிப்பு
ஃபிஜியில் ஹெச்ஐவி பாதிப்பு வேகமாக அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த நாட்டின் சுகாதார அமைச்சகம் 2024ஆம் ஆண்டிலேயே ‘ப்ளூடூத்திங்’ நடைமுறையை பாதிப்பு அதிகரிப்பதற்கான சாத்தியமான காரணிகளில் ஒன்றாக அடையாளம் கண்டிருந்தது.
எனினும், இந்த நடைமுறை ஃபிஜியில் எந்த அளவுக்கு பரவியுள்ளது என்பது தொடர்பாக தெளிவான ஆதாரங்கள் குறைவாக இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
2025ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மதிப்பீட்டில், போதைப்பொருளை ஊசி மூலம் பயன்படுத்தும் 56 பேரிடம் நடத்தப்பட்ட நேர்காணலில், இருவர் மட்டுமே தாங்கள் ‘ப்ளூடூத்திங்’ நடைமுறையில் ஈடுபட்டதாகவும், நான்கு பேர் அதை நேரடியாகப் பார்த்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
இதனால், ஃபிஜியில் அதிகரித்து வரும் ஹெச்ஐவி பாதிப்புக்கு இந்த நடைமுறையே முக்கிய காரணம் என உறுதியாகக் கூற முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேறு நாடுகளிலும் பதிவுகள்
லெசோதோ, ஜிம்பாப்வே மற்றும் தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட சில ஆப்பிரிக்க நாடுகளிலும் இதுபோன்ற ரத்தப் பகிர்வு நடைமுறைகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தான்சானியாவில் இதுபோன்ற நடைமுறை ‘Flashblood’ என அழைக்கப்படுவதாக ஐ.நா. எய்ட்ஸ் அமைப்பு தெரிவித்துள்ளது. இருப்பினும், இது உலகளவில் பரவலான போக்கு அல்ல என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சுகாதார அமைப்புகள், போதைப்பொருளை ஊசி மூலம் பயன்படுத்துவோர் பாதுகாப்பற்ற முறையில் ஊசிகளைப் பகிர்வதைத் தவிர்த்து, தொற்று நோய்களுக்கான பரிசோதனை மற்றும் சிகிச்சை சேவைகளைப் பெறுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகின்றன.
உலகளவில் ஹெச்ஐவி பாதிப்பை கட்டுப்படுத்துவதில் சிகிச்சை முறைகள் முன்னேற்றமடைந்துள்ள போதிலும், புதிய மற்றும் ஆபத்தான போதைப்பொருள் பயன்பாட்டு முறைகள் உருவாகுவது சுகாதாரத்துறைக்கு புதிய சவால்களை ஏற்படுத்துவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.





