அமெரிக்காவின் வடகிழக்கு பகுதிகளை கடுமையாக தாக்கிய ‘Nor’easter’ புயல் காரணமாக கடலோர வெள்ளம், மின்சாரத் துண்டிப்பு, போக்குவரத்து பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதுடன், நியூயோர்க் நகரில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நியூயோர்க் மற்றும் நியூ ஜெர்சி மாநிலங்களில் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், விர்ஜீனியா முதல் மைன் வரையிலான பகுதிகளில் பலத்த காற்று மற்றும் கனமழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
நியூயோர்க் நகரின் புரூக்ளின் பகுதியில் மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் 56 வயதான லெய்டன் பிரவுன் உயிரிழந்தார். அவர் நியூயோர்க் நகர வீட்டுவசதி அதிகாரசபையின் (NYCHA) பணியாளராக இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புயல் காரணமாக அமெரிக்காவின் வடகிழக்கு பகுதிகளில் 160,000-க்கும் மேற்பட்ட வீடுகள் மின்சாரத்தை இழந்துள்ளன. மேலும், சனிக்கிழமை மட்டும் 2,400-க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாகியதுடன், 1,199 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக FlightAware தகவல்கள் தெரிவிக்கின்றன.
முழு நிலவு காரணமாக கடலோரப் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. நியூ ஜெர்சியின் Surf City மற்றும் Manasquan உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் வீதிகள் மற்றும் வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்துள்ளது.
நியூயோர்க் நகரில் மணிக்கு 86 கிலோமீட்டர் (55 மைல்) வரை காற்று வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளதுடன், மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் முறிந்து விழும் அபாயமும் காணப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
“அவசியமில்லையெனில் பயணம் செய்ய வேண்டாம். வெள்ளநீரில் வாகனங்களை செலுத்தவோ நடந்து செல்லவோ வேண்டாம்” என நியூயோர்க் நகர மேயர் சோஹ்ரான் மம்தானி பொதுமக்களை எச்சரித்துள்ளார்.
கடும் வானிலை காரணமாக பல்வேறு விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு நிகழ்வுகளும் ரத்து அல்லது ஒத்திவைக்கப்பட்டுள்ளன. Boston Red Sox அணியின் போட்டி ஒத்திவைக்கப்பட்டதுடன், Red Bull New York மற்றும் St Louis City SC அணிகளுக்கிடையிலான கால்பந்து போட்டியும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
மேலும், நியூயோர்க் Central Park-இல் நடைபெறவிருந்த Global Citizen Festival மற்றும் பாடகர் Ed Sheeran-ன் Boston இசை நிகழ்ச்சியும் பாதுகாப்பு காரணங்களுக்காக ரத்து செய்யப்பட்டுள்ளன.
வடகிழக்கு அமெரிக்காவின் பல பகுதிகளில் கடலோர வெள்ளம் மற்றும் பலத்த காற்றின் தாக்கம் தொடரும் நிலையில், பொதுமக்கள் அவசியமான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.





