கொழும்பு நகரம் முழுவதும் மெட்ரோ பஸ் (Metro Bus) சேவையை நாளை (29) முதல் விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் தலைமையில் முன்னெடுக்கப்படும் இந்த வேலைத்திட்டத்தின் கீழ் 121 பேருந்துகள் சேவையில் இணைக்கப்படவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
தனியார் வாகனங்களின் பயன்பாட்டைக் குறைத்து, பொதுப் போக்குவரத்து சேவைகளை அதிகளவில் பயன்படுத்துவதற்கு மக்களை ஊக்குவிப்பதே இந்த வேலைத்திட்டத்தின் முக்கிய நோக்கம் என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், பேருந்துகளுக்கான முன்னுரிமை ஒழுங்கு (Bus Priority Lane) முறைமையை நடைமுறைப்படுத்துவதற்கும் மெட்ரோ பஸ் சேவை ஊடாக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட நேர அட்டவணைக்கு அமைய இயங்கும், அனைத்து இடங்களிலும் நிறுத்தப்படாத, சட்ட விதிகளைப் பின்பற்றும் சாரதிகள் மற்றும் நடத்துநர்களைக் கொண்ட ஒழுங்கமைக்கப்பட்ட பேருந்து சேவையை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, காலை 6.00 மணி முதல் 9.00 மணி வரை ஒரு திசையிலும், பிற்பகல் 4.00 மணி முதல் இரவு 7.00 மணி வரை எதிர்த் திசையிலும், மூன்று வழித்தடங்களில் ஒரு வழித்தடத்தை பொதுப் போக்குவரத்து பேருந்துகளுக்காக ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு நகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைத்து, பொதுப் போக்குவரத்து சேவையை மேலும் திறன்மிக்கதாக மாற்றும் நோக்கில் இந்த திட்டம் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.





