தூய்மைக்குப் பெயர் பெற்ற ஜப்பானில், பொது இடங்களில் குப்பைத்தொட்டிகளைக் காண்பது மிகவும் அரிதாக இருப்பது பல சுற்றுலாப் பயணிகளுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. ஆனால் குப்பைத்தொட்டிகள் குறைவாக இருந்தும் ஜப்பான் நகரங்கள் எவ்வாறு தூய்மையாக உள்ளன என்பதற்கு வரலாறு, பாதுகாப்பு நடவடிக்கைகள், அரசின் கொள்கைகள் மற்றும் சமூகப் பழக்கவழக்கங்கள் என பல காரணங்கள் உள்ளன.
1995ஆம் ஆண்டு தாக்குதல் முக்கிய திருப்புமுனை
1995ஆம் ஆண்டு மார்ச் மாதம், Aum Shinrikyo என்ற மதக்குழுவைச் சேர்ந்தவர்கள் டோக்கியோ மெட்ரோவின் மூன்று வழித்தடங்களில் சரின் நச்சு வாயுவை வெளியிட்டனர். இந்த தாக்குதலில் 14 பேர் உயிரிழந்ததுடன், ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர்.
இதற்குப் பின்னர் பாதுகாப்பு காரணங்களுக்காக பல பொது குப்பைத்தொட்டிகள் அகற்றப்பட்டன அல்லது மூடப்பட்டன. பின்னர் உலகின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களும் இந்த நடைமுறையைத் தொடர்வதற்கு காரணமாக அமைந்தன.
🗑️ குப்பைத்தொட்டிகளை குறைத்த நகராட்சிகள்
பாதுகாப்பு மட்டும் குப்பைத்தொட்டிகள் குறைவதற்கான காரணம் அல்ல என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
2000ஆம் ஆண்டுக்குப் பின்னர் சில ஜப்பானிய நகராட்சிகள், மக்கள் தங்களது குப்பைகளை வீட்டிற்கே எடுத்துச் செல்லும் வகையில் தெருக்களில் உள்ள குப்பைத்தொட்டிகளின் எண்ணிக்கையைக் குறைத்துள்ளன.
உதாரணமாக, கியோட்டோவில் 2011ஆம் ஆண்டுக்குப் பின்னர் தெருவோர குப்பைத்தொட்டிகளின் எண்ணிக்கை பாதிக்கும் மேல் குறைக்கப்பட்டுள்ளது. வீட்டு குப்பைகளை பொது குப்பைத்தொட்டிகளில் கொட்டுதல் மற்றும் அவற்றைச் சுற்றி குப்பைகள் குவிதல் போன்ற பிரச்சினைகளால் பராமரிப்பு செலவுகள் அதிகரித்ததே இதற்கான காரணங்களில் ஒன்றாகக் குறிப்பிடப்படுகிறது.
🌱 தூய்மைக்கு சமூக பழக்கங்களும் காரணம்
ஜப்பானின் தூய்மையான தெருக்களுக்கு குப்பைத்தொட்டிகள் அதிகமாக இருப்பதே காரணம் அல்ல.
பல தசாப்தங்களாக உள்ளாட்சி அமைப்புகள் பொதுவெளியில் குப்பை கொட்டுவதைத் தவிர்ப்பது தொடர்பான பிரசாரங்கள், பொதுக் கல்வி மற்றும் சுற்றுச்சூழல் திட்டங்களில் முதலீடு செய்து வந்துள்ளன.
மேலும், “Meiwaku o kakenai” எனப்படும் பிறருக்கு அசௌகரியம் ஏற்படுத்துவதைத் தவிர்க்கும் சமூக நெறிமுறையும் முக்கிய பங்கு வகிப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
ஜப்பானில் நடந்து செல்லும்போதோ அல்லது ரயிலில் பயணம் செய்யும்போதோ உணவு உட்கொள்வது பொதுவாக அதிகம் காணப்படாததால், பயணத்தின்போது உருவாகும் குப்பையின் அளவும் குறைவாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
🧳 சுற்றுலாப் பயணிகளுக்கு சற்று வித்தியாசமான அனுபவம்
உள்ளூர் மக்களை விட சுற்றுலாப் பயணிகளுக்கு இந்த நிலைமை சிரமமாக இருக்கலாம். நாள் முழுவதும் நகரைச் சுற்றிப்பார்க்கும் போது குடிநீர் போத்தல்கள் மற்றும் உணவுப் பொதிகள் போன்ற குப்பைகள் உருவாகினாலும், அவற்றை உடனடியாகக் கொட்டுவதற்கான இடம் கிடைப்பது கடினமாக இருக்கலாம்.
இருப்பினும், ஜப்பானில் குப்பைத்தொட்டிகள் முற்றிலும் இல்லாமல் போகவில்லை. ரயில் நிலையங்கள் உள்ளிட்ட சில பொது இடங்களில் அவை தொடர்ந்து காணப்படுகின்றன.
டோக்கியோவின் ஷின்ஜுகு ரயில் நிலையத்தில், பயணிகளிடமிருந்து குப்பைகளைச் சேகரிப்பதற்காக நகரும் குப்பைத்தொட்டி ரோபோக்கள் கூட சோதனை செய்யப்பட்டு வருகின்றன.
இதனால், ஜப்பானில் தெருக்கள் தூய்மையாக இருப்பதற்கு குப்பைத்தொட்டிகளின் எண்ணிக்கையை விட சமூக பழக்கவழக்கங்கள், அரசின் நீண்டகால கொள்கைகள், பொதுக் கல்வி மற்றும் தனிநபர்கள் தங்களது குப்பைகளை பொறுப்புடன் கையாளும் நடைமுறை ஆகியவை முக்கிய காரணிகளாகக் கருதப்படுகின்றன.





