விமானப் பயணங்களின்போது பெற்றோர் தங்களது குழந்தைகளுக்கு அருகில் அமருவதற்காக கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டிய நிலையை முடிவுக்குக் கொண்டுவர பிரிட்டன் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்கான புதிய விதிமுறைகள், முன்மொழியப்பட்டுள்ள Civil Aviation Bill நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு சட்டமாக்கப்பட்ட பின்னர் நடைமுறைக்கு கொண்டுவரப்படும் என பிரிட்டன் போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.
புதிய சட்டத்தின் கீழ், 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு அருகில் பெற்றோர் அமருவதற்காக விமான நிறுவனங்கள் தனியான கட்டணம் வசூலிப்பதை நீக்குவது தொடர்பில் ஆலோசனை நடத்தப்படவுள்ளது.
குடும்பங்கள் விமானப் பயணங்களை முன்பதிவு செய்யும்போது ஏற்படும் சிறிய அளவிலான கூடுதல் கட்டணங்கள் மற்றும் நிர்வாகச் செலவுகளை குறைப்பதே இந்த மாற்றங்களின் நோக்கம் என பிரிட்டன் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
தற்போதைய நிலையில், ஒரு பெற்றோரும் குழந்தையும் திரும்பும் பயணத்தில் ஒன்றாக அமருவதற்கான இருக்கைத் தேர்வு கட்டணம் சில சந்தர்ப்பங்களில் £104 வரை செலவாகக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று, விமான முன்பதிவில் இடம்பெறும் சிறிய பெயர் அல்லது நிர்வாகப் பிழைகளை திருத்துவதற்கும் பயணிகளிடம் £40 வரை கட்டணம் வசூலிக்கப்படக்கூடும் என கூறப்பட்டுள்ளது.
பிரிட்டன் போக்குவரத்துத் துறை செயலாளர் ஹெய்டி அலெக்சாண்டர், குழந்தைகளுடன் பயணம் செய்யும் பெற்றோர் தங்களது குழந்தைக்கு அருகில் அமருவதற்காக கூடுதல் செலவை ஏற்க வேண்டிய நிலை இருக்கக்கூடாது என தெரிவித்துள்ளார்.
எனினும், இந்த அறிவிப்புக்கு விமான நிறுவனங்களின் வர்த்தக அமைப்பான Airlines UK மற்றும் சில விமான நிறுவனங்கள் மாறுபட்ட கருத்துகளை வெளியிட்டுள்ளன.
பெரும்பாலான பிரிட்டன் விமான நிறுவனங்கள் ஏற்கனவே குழந்தைகள் தொடர்பான இருக்கை ஏற்பாடுகள் குறித்து சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி வருவதாக Airlines UK தெரிவித்துள்ளது.
மேலும், சிறிய பெயர் எழுத்துப் பிழைகளை இலவசமாகத் திருத்துவதற்கான வசதிகள் ஏற்கனவே உள்ளதாகவும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
Ryanair விமான நிறுவனம், பெற்றோர் மற்றும் குழந்தைகள் ஒன்றாக அமர்வதற்காக தற்போது தனியான கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை எனத் தெரிவித்துள்ளது. அத்துடன், அரசாங்கத்தின் புதிய அறிவிப்பு நடைமுறையில் புதிதாக எதையும் மாற்றாது என விமான நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மைக்கேல் ஓ’லியரி விமர்சித்துள்ளார்.
அதேபோன்று easyJet நிறுவனமும், எழுத்துப் பிழைகளுக்கான சிறிய திருத்தங்களை இலவசமாக மேற்கொண்டு வருவதாகவும், பெற்றோர் மற்றும் குழந்தைகள் ஒன்றாக அமருவதற்காக கட்டணம் செலுத்த கட்டாயப்படுத்தியதில்லை என்றும் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், நுகர்வோர் அமைப்பான Which? Travel சார்பில், சிறு குழந்தைகளுடன் பயணம் செய்யும் பெற்றோர் ஒன்றாக அமர்வதற்காக கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை நியாயமற்றது என கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, பிரிட்டன் அரசாங்கம் முன்மொழிந்துள்ள Civil Aviation Bill-ல் விமானப் பயணங்களுடன் தொடர்புடைய மேலும் சில மாற்றங்களும் இடம்பெற்றுள்ளன.
குறிப்பாக, விமானங்களில் தொடர்ச்சியாக ஒழுங்கீனமான அல்லது இடையூறு ஏற்படுத்தும் பயணிகளின் தகவல்களை விமான நிறுவனங்கள், தொழிற்சங்கங்கள் உள்ளிட்ட தரப்புகளின் உதவியுடன் பகிர்ந்து கொள்ளும் புதிய முறைமை ஒன்றை உருவாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
2025ஆம் ஆண்டில் மட்டும் விமான நிறுவனங்களால் 1,000க்கும் மேற்பட்ட தீவிரமான ஒழுங்கீன பயணி சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பிரிட்டன் அரசாங்கம் தெரிவித்துள்ளது. அவற்றில் விமானம் ஒன்றை திசைமாற்றி தரையிறக்க வேண்டிய நிலையை ஏற்படுத்திய நடுவானில் ஏற்பட்ட மோதல் சம்பவமும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முன்மொழியப்பட்ட மாற்றங்கள் அனைத்தும் நாடாளுமன்றத்தின் ஒப்புதலையும் பின்னர் Royal Assent எனப்படும் அரச ஒப்புதலையும் பெற்ற பின்னரே சட்டரீதியாக நடைமுறைக்கு வரும்.
அடுத்த ஆண்டு கோடை விடுமுறை காலம் ஆரம்பிக்கும் முன்னர் இந்த மாற்றங்களை நடைமுறைப்படுத்த அரசாங்கம் முயற்சி செய்து வருவதாக BBC செய்தி வெளியிட்டுள்ளது.





