அமெரிக்காவின் டென்னசி மாநிலத்தில் மரணதண்டனை விதிக்கப்பட்டிருந்த கிறிஸ்டா பைக் (Christa Pike), மரண ஊசி மூலம் தண்டனையை நிறைவேற்ற முயற்சித்தும் உயிரிழக்காத நிலையில், தற்போது சுயநினைவற்ற நிலையில் செயற்கை சுவாசக் கருவியின் உதவியுடன் தீவிர சிகிச்சை பெற்று வருவதாக அவரது சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.
50 வயதான கிறிஸ்டா பைக்கிற்கு கடந்த புதன்கிழமை மரணதண்டனையை நிறைவேற்றுவதற்காக pentobarbital என்ற மருந்தின் இரண்டு அளவுகள் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், அவர் உயிரிழக்காத நிலையில், பின்னர் அவசரமாக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
தற்போது நாஷ்வில் பகுதியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும், சுயநினைவின்றி இருப்பதுடன், சுவாசத்திற்கு செயற்கை சுவாசக் கருவி பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் அவரது சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஆவணங்களில் குறிப்பிட்டுள்ளனர்.
மரணதண்டனை நிறைவேற்றப்பட்ட போது, கிறிஸ்டா பைக்கின் உடலில் நரம்பு வழியாக மருந்தை செலுத்துவதற்கான IV வழியை ஏற்படுத்துவதற்கு குறைந்தது ஏழு முறை ஊசி பயன்படுத்தப்பட்டதாக அவரது சட்டத்தரணிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
அவர்களின் கூற்றுப்படி, ஒரு கட்டத்தில் ஊசி அகற்றப்பட்டபோது அது 90 பாகை கோணத்தில் வளைந்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மருந்து செலுத்தப்பட்டுக் கொண்டிருந்தபோது அவர் அழுததாகவும், முனகல் மற்றும் அதிக சத்தத்துடன் சுவாசித்ததாகவும் சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.
மரணதண்டனை முயற்சியின் போது செலுத்தப்பட்ட pentobarbital மருந்து எதிர்பார்த்த வகையில் இரத்த ஓட்டத்துக்குள் சென்றிருக்காமல், தோலுக்குக் கீழுள்ள திசுக்களில் பரவியிருக்கலாம் என கிறிஸ்டா பைக்கின் பாதுகாப்பு தரப்புக்கு ஆலோசனை வழங்கும் மயக்கவியல் நிபுணர் டாக்டர் ஜோயல் ஸிவோட் தெரிவித்துள்ளார்.
இரண்டு அளவு pentobarbital மருந்தும் சாதாரணமாக இரத்த ஓட்டத்தில் சென்றிருந்தால் அது உயிரிழப்பை ஏற்படுத்துவதற்கு போதுமானதாக இருந்திருக்கும் என அவர் கூறியுள்ளார்.
மேலும், கிறிஸ்டா பைக்கிற்கு thrombocytosis எனப்படும் இரத்த உறைதலுடன் தொடர்புடைய மருத்துவ நிலை இருப்பதாகவும், சிறிய நரம்புகள் காரணமாக மருந்தை நரம்புக்குள் செலுத்துவதில் சிக்கல் ஏற்படும் அபாயம் குறித்து அவரது சட்டத்தரணிகள் ஏற்கனவே எச்சரித்திருந்ததாகவும் BBC தெரிவித்துள்ளது.
இதனிடையே, இந்த தோல்வியடைந்த மரணதண்டனை முயற்சி தொடர்பான அனைத்து உடல், எழுத்து மற்றும் மின்னணு ஆதாரங்களையும் பாதுகாக்குமாறு அவரது சட்டத்தரணிகள் அவசர மனுவொன்றை தாக்கல் செய்துள்ளனர்.
கிறிஸ்டா பைக்கின் மரணதண்டனை தோல்வியடைந்த சம்பவம் தொடர்பில் சுயாதீன விசாரணைக்கு டென்னசி ஆளுநர் பில் லீ உத்தரவிட்டுள்ளார். மேலும், இந்த ஆண்டின் எஞ்சிய காலப்பகுதியில் மாநிலத்தில் மரணதண்டனைகளை நிறுத்தி வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், டென்னசி சிறைச்சாலைத் துறை பயன்படுத்திய மரணதண்டனை நடைமுறையை பாதுகாத்துள்ளதுடன், நடைமுறையில் குறிப்பிடப்பட்டுள்ள நடவடிக்கைகளுக்கு அப்பால் கூடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்ள அனுமதி இல்லை எனத் தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக அடுத்ததாக கிறிஸ்டா பைக்கிற்கு மீண்டும் மரணதண்டனை நிறைவேற்றப்படுமா என்பது குறித்து அதிகாரிகள் இதுவரை எந்த முடிவையும் அறிவிக்கவில்லை.
1995ஆம் ஆண்டு கொலை வழக்கு
கிறிஸ்டா பைக் 1995ஆம் ஆண்டு டென்னசி மாநிலத்தின் நாக்ஸ்வில்லில் 19 வயதான கொலீன் ஸ்லெம்மர் என்பவரை கொலை செய்த வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.
அப்போது 18 வயதாக இருந்த பைக், தனது அப்போதைய காதலர் டடரியல் ஷிப் உடன் இணைந்து கொலீன் ஸ்லெம்மரை தாக்கி கொலை செய்ததாக வழக்கில் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கில் கிறிஸ்டா பைக்கிற்கு 1996ஆம் ஆண்டு மரணதண்டனை விதிக்கப்பட்டது. அவருடன் குற்றஞ்சாட்டப்பட்ட டடரியல் ஷிப் அப்போது 17 வயதுடையவராக இருந்ததால் மரணதண்டனையிலிருந்து விலக்கப்பட்டு, பரோல் பெறுவதற்கான வாய்ப்புடன் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதாக BBC தெரிவித்துள்ளது.
மரணதண்டனை நிறைவேற்றுவதற்கு முன்னதாக கிறிஸ்டா பைக்கின் சட்டத்தரணிகள் பல்வேறு சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்த போதிலும், அமெரிக்க உச்ச நீதிமன்றம் மரணதண்டனையைத் தடுக்க மேற்கொள்ளப்பட்ட இரண்டு முயற்சிகளையும் நிராகரித்திருந்தது.
அத்துடன், டென்னசி ஆளுநரிடமும் கருணை மனு தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில் அது நிராகரிக்கப்பட்ட பின்னரே மரண ஊசி மூலம் தண்டனையை நிறைவேற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
தற்போது தோல்வியடைந்த இந்த மரணதண்டனை முயற்சி தொடர்பான விசாரணையும், கிறிஸ்டா பைக்கின் அடுத்தகட்ட சட்ட நிலையும் கவனத்தைப் பெற்றுள்ளது.





