நாய்களுக்கு ரேபிஸ் (Rabies) தடுப்பூசி செலுத்துதல் மற்றும் அவற்றைப் பதிவு செய்வது தொடர்பாக அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய சட்டமூலத்தின் சில சரத்துக்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த GMOA ஊடகப் பேச்சாளர் வைத்தியர் லசித கன்னங்கர, குறித்த சட்டமூலத்தின் சில ஏற்பாடுகள் தொடர்பில் சங்கத்தின் கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.
ரேபிஸ் நோயை நாட்டில் முற்றாக ஒழிப்பதுடன், நாய்களின் பதிவை ஒழுங்குபடுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் இந்த புதிய சட்டமூலம் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் கீழ் நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்துதல், நாய்களின் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்துதல் மற்றும் வர்த்தக நோக்கில் நாய்களை இனப்பெருக்கம் செய்வதை ஒழுங்குபடுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
மேலும், உள்ளூராட்சி நிர்வாக எல்லைக்குள் உள்ள ஒவ்வொரு நாய்க்கும் வருடாந்தம் ரேபிஸ் தடுப்பூசி செலுத்துவதும், அதனைப் பதிவு செய்வதும் கட்டாயமாக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், சட்டமூலத்தின் 4ஆம் சரத்தின்படி, நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசியை கால்நடை மருத்துவர் ஒருவரால் அல்லது அவரது நேரடி கண்காணிப்பின் கீழ் மட்டுமே செலுத்த முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளதாக GMOA சுட்டிக்காட்டியுள்ளது.
நாட்டில் தற்போது கால்நடை மருத்துவர்களுக்கு பற்றாக்குறை நிலவுவதாகவும், இந்நிலையில் குறித்த நிபந்தனை நடைமுறைப்படுத்தப்பட்டால், அனைத்து நாய்களுக்கும் உரிய காலத்தில் ரேபிஸ் தடுப்பூசி செலுத்துவதில் நடைமுறைச் சிக்கல்கள் ஏற்படக்கூடும் எனவும் GMOA தெரிவித்துள்ளது.
இதனால், ரேபிஸ் நோயை கட்டுப்படுத்தி அதனால் ஏற்படும் உயிரிழப்புகளை குறைப்பதற்காக அரசாங்கம் முன்னெடுத்து வரும் தேசிய வேலைத்திட்டத்துக்கும் பாதிப்பு ஏற்படக்கூடும் என சங்கம் எச்சரித்துள்ளது.
எனவே, சட்டமூலத்தின் தொடர்புடைய சரத்துக்களை நடைமுறைச் சாத்தியமான வகையில் மறுபரிசீலனை செய்து தேவையான திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்பதே GMOA-வின் நிலைப்பாடாகும்.
ரேபிஸ் என்பது மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் ஆபத்தான வைரஸ் நோயாகும். குறிப்பாக நாய் கடியினால் மனிதர்களுக்கு ரேபிஸ் பரவும் அபாயம் உள்ளதால், நாய்களுக்கு முறையாக தடுப்பூசி செலுத்துதல் நோய் தடுப்பு நடவடிக்கைகளில் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.





