மன்னார் பொது வைத்தியசாலையில் முதன்முறையாக மூளைச்சாவடைந்தவரின் உறுப்புகள் தானம்!

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் வரலாற்றில் முதன்முறையாக, அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த மூளைச்சாவடைந்த நோயாளி ஒருவரின் உறுப்புகள் தானம் செய்யப்பட்டுள்ளன.

உயிரிழந்த பின்னரும் தமது உறுப்புகள் மூலம் மற்றவர்களின் வாழ்க்கைக்கு ஒளியேற்ற வேண்டும் என்ற மனிதநேய நோக்கத்துடன், குறித்த நோயாளியின் குடும்பத்தினர் உறுப்பு தானத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர்.

இதன்படி தானமாகப் பெறப்பட்ட இரு சிறுநீரகங்களும், நீண்டகாலமாக சிறுநீரக பாதிப்பால் அவதிப்பட்டு வந்த இருவருக்கு வெற்றிகரமாக பொருத்தப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ஆஷாத் எம். கனீபா தெரிவித்துள்ளார்.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க உறுப்பு மாற்று நடவடிக்கை நேற்று (02) மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவிக்கையில், உறுப்பு தானம் என்பது பல உயிர்களுக்கு வாழ்வளிக்கக்கூடிய உன்னதமான மனிதநேயச் செயலாகும் என குறிப்பிட்டுள்ளார்.

மன்னாரில் இடம்பெற்றுள்ள இந்த நிகழ்வு, சமூகத்தில் உறுப்பு தானம் தொடர்பான விழிப்புணர்வை மேலும் அதிகரிப்பதற்கு முக்கிய பங்களிப்பாக அமையும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், உறுப்பு தானத்திற்கு சம்மதம் தெரிவித்த நோயாளியின் குடும்பத்தினருக்கு வைத்தியசாலை நிர்வாகம் தனது நன்றியைத் தெரிவித்துள்ளது.

அத்துடன், இந்த நடவடிக்கையை வெற்றிகரமாக முன்னெடுக்க பங்களித்த வைத்திய நிபுணர்கள், யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர், சத்திர சிகிச்சையை மேற்கொண்ட யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை விசேட வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள், தாதியர்கள் உள்ளிட்ட அனைத்து சுகாதாரப் பணியாளர்களுக்கும் வைத்தியசாலை பணிப்பாளர் தனது பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்துள்ளார்.

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் வரலாற்றில் முதன்முறையாக இடம்பெற்றுள்ள இந்த உறுப்பு தானம், ஒருவரின் இழப்புக்குப் பின்னரும் மற்றவர்களுக்கு வாழ்வதற்கான புதிய வாய்ப்பை வழங்கக்கூடிய மனிதநேயத்தின் சிறப்பான எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore