ரஷ்யாவின் பிளேக் ஆய்வகத்தில் மர்ம தொற்று – ஆய்வாளர் உயிரிழப்பு

ரஷ்யாவின் சைபீரியா பகுதியில் அமைந்துள்ள பிளேக் எதிர்ப்பு ஆராய்ச்சி நிறுவனத்தில் ஏற்பட்டதாகக் கூறப்படும் ஆய்வக விபத்தைத் தொடர்ந்து, அடையாளம் காணப்படாத தொற்றால் ஆய்வகப் பணியாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் இர்குட்ஸ்க் நகருக்கு அருகிலுள்ள ஷெலெகோவ் (Shelekhov) பகுதியில் அமைந்துள்ள Anti-Plague Research Institute-இல் இடம்பெற்றுள்ளதாக ரஷ்ய அரச ஊடகமான TASS தெரிவித்துள்ளது.

எனினும், ஆய்வகத்தில் இருந்து உண்மையில் எந்த வகையான தொற்று வெளியேறியது என்பது இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. உயிரிழந்த பெண் பணியாளருக்கு காரணம் கண்டறியப்படாத நிமோனியா (pneumonia of unknown etiology) ஏற்பட்டிருந்ததாக ரஷ்யாவின் நுகர்வோர் உரிமைகள் மற்றும் மனித நலக் கண்காணிப்பு அமைப்பான Rospotrebnadzor தெரிவித்துள்ளது.

உயிரிழந்தவர் 28 வயதுடைய பெண் எனவும், அவர் பிளேக் நோயால் பாதிக்கப்பட்டிருக்கலாம் எனவும் அண்டை பிராந்தியமான புரியாத்தியாவின் தலைவர் அலெக்ஸி சிடெனோவ் முன்னதாக தெரிவித்திருந்தார். எனினும், இது அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.

இதனிடையே, இர்குட்ஸ்க் பிராந்தியத்தில் தற்போது பிளேக் நோய் பரவல் எதுவும் இல்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தைத் தொடர்ந்து, இர்குட்ஸ்க் மற்றும் ஷெலெகோவ் பகுதிகளில் சுகாதார மற்றும் தொற்றுநோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆய்வகப் பணியாளருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் இதுவரை தொற்று அறிகுறிகள் எதுவும் கண்டறியப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஆய்வகத்திற்கு அருகிலுள்ள இர்குட்ஸ்க் அலுமினிய ஆலையில் பணியாற்றும் ஊழியர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முகக்கவசம் அணியுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அதேவேளை, அதிகாரப்பூர்வமற்ற தகவல்களின்படி, உயிரிழந்த ஆய்வகப் பணியாளர் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்ட வைத்தியசாலையில் சுமார் 200 பேர் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இந்த எண்ணிக்கை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.

முன்னாள் Rospotrebnadzor தலைவர் ஜென்னடி ஒனிஷ்செங்கோ, குறித்த தொற்று பிளேக் நோயாக இருப்பதற்கான வாய்ப்பு குறைவு எனக் குறிப்பிட்டுள்ளதுடன், அது பிளேக் என உறுதிப்படுத்தப்பட்டாலும் பரவல் ஏற்படுவதற்கான சாத்தியம் குறைவாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, நுரையீரல் பிளேக் (Pneumonic plague) என்பது Yersinia pestis எனும் பாக்டீரியாவால் ஏற்படும் பிளேக் நோயின் ஒரு வகையாகும். இது சுவாசத் துகள்கள் மூலம் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவக்கூடியது.

அமெரிக்க நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (CDC) இந்த நிலைமை தொடர்பாகக் கண்காணித்து வருவதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேவேளை, இந்தச் சம்பவம் தொடர்பான பல முக்கிய தகவல்கள் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

உலக சுகாதார நிறுவனம் (WHO) பிளேக் நோய் தீவிரமானதாக இருந்தாலும், உரிய நுண்ணுயிர்க்கொல்லி மருந்துகள் மற்றும் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் மூலம் சிகிச்சையளிக்கக்கூடியது எனத் தெரிவித்துள்ளது.

தற்போதைய நிலையில், ஆய்வகத்தில் ஏற்பட்டதாகக் கூறப்படும் தொற்று பிளேக் நோயா அல்லது வேறு தொற்றா என்பது தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore