மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை அதிகரித்துள்ளதால், இலங்கையிலும் எரிபொருள் விலையை உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டதாக வலுசக்தி அமைச்சர் அநுர கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், இவ்வாண்டு எரிபொருள் இறக்குமதிக்காக அரசாங்கம் செலவிட வேண்டிய தொகை சுமார் 50 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நேற்று (02) இரவு ஒளிபரப்பான ‘தெரண 360’ அரசியல் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது, எரிபொருள் விலை தொடர்பில் எதிர்க்கட்சியினர் முன்வைக்கும் சில யோசனைகள் நடைமுறைக்குச் சாத்தியமற்றவை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, துறைமுகத்திற்கு எரிபொருளைக் கொண்டுவரும் விலைக்கே நுகர்வோருக்கு அதனை வழங்க வேண்டும் என்ற எதிர்க்கட்சியின் கோரிக்கை குறித்து கருத்துத் தெரிவித்த அமைச்சர், உலகில் எந்தவொரு நாட்டிலும் இத்தகைய விலை நிர்ணய முறைமை நடைமுறையில் இல்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், எரிபொருள் விலை அதிகரிப்பினால் பொதுமக்களுக்கு ஏற்படும் சுமையைக் குறைப்பதற்காக அரசாங்கம் 57 பில்லியன் ரூபாயை எரிபொருள் மானியமாக ஒதுக்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனினும், எரிபொருள் இறக்குமதிச் செலவு கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் சுமார் 50 சதவீதத்தால் அதிகரித்துள்ள நிலையில், எரிபொருள் விலையை முழுமையாகக் குறைப்பதற்கோ அல்லது மேலதிகமாகப் பெருமளவு நிவாரணங்களை வழங்குவதற்கோ தற்போதைய சூழலில் அரசாங்கத்தால் முடியாது எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.





