காட்டுத்தீயால் பரவும் நச்சுப் புகை மூட்டம் – அண்டை நாடுகளுக்கு அரசியல் நெருக்கடி!

இந்தோனேசியாவின் கலிமந்தான், பப்புவா மற்றும் சுமத்ரா பகுதிகளில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயால் உருவாகும் நச்சுப் புகை மூட்டம் சிங்கப்பூர் மற்றும் மலேசியா உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கும் பரவி, பெரும் சுகாதார மற்றும் அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில வாரங்களாக தென்கிழக்காசியாவின் கடல் பிராந்திய நாடுகளில் இந்தப் புகை மூட்டம் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது. இதனால் பொதுமக்களுக்கு சுவாசப் பிரச்சினைகள், தலைவலி உள்ளிட்ட உடல்நலப் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தோனேசியாவில் ஆண்டுதோறும் ஏற்படும் காட்டுத்தீ, பெரும்பாலும் எண்ணெய்ப்பனை போன்ற பயிர்ச்செய்கைகளுக்காக பெருமளவிலான நிலங்களைத் துப்புரவு செய்யும் நடவடிக்கைகளுடன் தொடர்புடையதாகக் கூறப்படுகிறது. இவ்வாண்டு வலுவடைந்துள்ள எல் நினோ (El Niño) காலநிலை நிகழ்வினால் வறட்சி தீவிரமடைந்து, காடுகள் மற்றும் கரி நிலப்பகுதிகளில் தீயைக் கட்டுப்படுத்துவது கடினமாகியுள்ளது.

இதற்கு முன்னர் சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் ஏற்பட்ட புகை மூட்டப் பாதிப்புகள் சில நாட்களில் முடிவடைந்திருந்த போதிலும், இம்முறை பல வாரங்களாக நீடித்து வருகின்றது.

மலேசியாவில் இந்தப் புகை மூட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து சிலர் இந்தோனேசியப் பொருட்களைப் புறக்கணிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். மேலும், காட்டுத்தீயுடன் தொடர்புடைய நிறுவனங்களுக்கு எதிராகத் தடைகள் விதிக்கப்பட வேண்டும் என மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர் சையத் சாதிக் கோரிக்கை விடுத்துள்ளார்.

சிங்கப்பூரிலும் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் தொடர்பில் பொதுமக்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர். புகை மூட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் போதுமானதாக இருக்கவில்லை என்ற விமர்சனங்களும் எழுந்துள்ளன.

இதற்கிடையில், சிங்கப்பூர் அரசாங்கம் தீவிர நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது. தீங்கு விளைவிக்கும் புகை மூட்டத்திலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்காக நூற்றுக்கணக்கான பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன், சிறுவர்கள், முதியவர்கள் மற்றும் பாதிப்புக்குள்ளாகக்கூடிய மக்களுக்கு முகக்கவசங்களும் விநியோகிக்கப்படுகின்றன.

மேலும், இந்தோனேசிய காட்டுத்தீயுடன் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட 10 நிறுவனங்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

கடந்த வாரம் சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன், ஜகார்த்தாவில் இந்தோனேசிய ஜனாதிபதி பிரபோவோ சுபியாந்தோவைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இதன் தொடர்ச்சியாக, புகை மூட்டப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக இரு நாடுகளும் கூட்டுப் பணிக்குழுவொன்றை அமைக்க இணக்கம் தெரிவித்துள்ளன.

எனினும், சிங்கப்பூரின் விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும் வகையில் இந்தோனேசியா சிங்கப்பூருக்கான இயற்கை எரிவாயு ஏற்றுமதியைக் குறைக்கப்போவதாக அறிவித்துள்ளது. இது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

மறுபுறம், மலேசியா இந்த விவகாரத்தில் இந்தோனேசியாவுடன் நேரடி மோதலைத் தவிர்க்கும் வகையில் அணுகுமுறையைக் கடைப்பிடித்து வருகின்றது. இந்தோனேசியாவுக்கு எதிராக உத்தியோகபூர்வ இராஜதந்திர எதிர்ப்பை வெளியிடுவதோ அல்லது சட்ட நடவடிக்கை எடுப்பதோ இரு நாடுகளுக்கும் இடையிலான உறவைப் பாதிக்கக்கூடும் என மலேசிய வெளிவிவகார அமைச்சர் மொஹமட் ஹசன் தெரிவித்துள்ளார்.

ஆசியான் (ASEAN) நாடுகளுக்கு இடையிலான எல்லை தாண்டிய புகை மாசுபாட்டைக் கட்டுப்படுத்தும் ஒப்பந்தம் 2003ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்திருந்தாலும், காட்டுத்தீயுடன் தொடர்புடைய நிறுவனங்களுக்கு எதிராகத் தண்டனை நடவடிக்கைகளை எடுக்க முடியாத அதன் வரையறைகள் காரணமாக, அந்த ஒப்பந்தத்தின் செயல்திறன் குறித்தும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.

தற்போதைக்கு, காட்டுத்தீயைக் கட்டுப்படுத்துவதற்கும் புகை மூட்டப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கும் இந்தோனேசியா, சிங்கப்பூர் மற்றும் மலேசியா ஆகிய நாடுகள் இராஜதந்திர ரீதியிலான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றன.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore