2027ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஐசிசி ஆடவர் கிரிக்கெட் உலகக் கிண்ணப் போட்டிகளுக்கான டிக்கெட் முன்பதிவு குலுக்கல் (Ticket Ballot) விண்ணப்பங்கள் உலகளவில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. இதுவரை 193 நாடுகளைச் சேர்ந்த 2.8 மில்லியன் தனிப்பட்ட ரசிகர்கள் தங்களது ஆர்வத்தைப் பதிவு செய்துள்ளதுடன், 120 மில்லியனுக்கும் அதிகமான டிக்கெட் கோரிக்கைகள் கிடைத்துள்ளதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை (ICC) தெரிவித்துள்ளது.
2027 உலகக் கிண்ணப் போட்டிகள் தென்னாபிரிக்கா, சிம்பாப்வே மற்றும் நமீபியா ஆகிய மூன்று நாடுகளில் நடைபெறவுள்ளன. 24 ஆண்டுகளுக்குப் பின்னர் ஆபிரிக்கக் கண்டத்தில் மீண்டும் ஆடவர் கிரிக்கெட் உலகக் கிண்ணம் நடைபெறவுள்ளமை இந்தத் தொடரின் மீதான ஆர்வத்தை மேலும் அதிகரித்துள்ளது.
இந்தத் தொடரில் 14 அணிகள் பங்கேற்கவுள்ளதுடன், 12 நகரங்களில் மொத்தம் 57 போட்டிகள் நடைபெறவுள்ளன. இதுவரை 32 மில்லியனுக்கும் அதிகமான போட்டிகளுக்கான பதிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஆபிரிக்க நாடுகளில் அதிகரிக்கும் டிக்கெட் கேள்வி
டிக்கெட் விண்ணப்பங்களில் ஆபிரிக்கக் கண்டம் மாத்திரம் 14.9 மில்லியனுக்கும் அதிகமான கோரிக்கைகளைப் பெற்றுள்ளது. தென்னாபிரிக்கா, ஐக்கிய இராச்சியம், இந்தியா, அமெரிக்கா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் அதிகளவில் விண்ணப்பங்களைப் பதிவு செய்துள்ள நாடுகளாக முன்னிலையில் உள்ளன.
தென்னாபிரிக்காவில் நடைபெறவுள்ள 41 போட்டிகளுக்காக எட்டு மைதானங்களில் 105 மில்லியனுக்கும் அதிகமான டிக்கெட் கோரிக்கைகள் கிடைத்துள்ளன. தென்னாபிரிக்க அணி விளையாடவுள்ள 11 போட்டிகளுக்காக மாத்திரம் சுமார் 26 மில்லியன் கோரிக்கைகள் பதிவாகியுள்ளன.
சிம்பாப்வேயில் நடைபெறவுள்ள போட்டிகளுக்கான டிக்கெட் கோரிக்கைகள் 13 மில்லியனைக் கடந்துள்ளன. குறிப்பாக, ஒக்டோபர் 24ஆம் திகதி விக்டோரியா நீர்வீழ்ச்சி பகுதியில் உள்ள மோசி-ஓ-துன்யா சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ள சிம்பாப்வே – இந்தியா போட்டிக்காக 3.3 மில்லியனுக்கும் அதிகமான கோரிக்கைகள் கிடைத்துள்ளன.
நமீபியாவில் விண்ட்ஹோக் நகரிலுள்ள நமீபியா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ள ஆறு போட்டிகளுக்காக இரண்டு மில்லியனுக்கும் அதிகமான டிக்கெட் கோரிக்கைகள் பதிவாகியுள்ளன. இதில் ஒக்டோபர் 8ஆம் திகதி நடைபெறவுள்ள இங்கிலாந்து – பங்களாதேஷ் போட்டிக்காக சுமார் 900,000 கோரிக்கைகள் கிடைத்துள்ளன.
இந்தியா – பாகிஸ்தான் போட்டிக்கு அதிக வரவேற்பு
உலகக் கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்தியா – பாகிஸ்தான் மோதலுக்கான டிக்கெட் கோரிக்கைகள் 8,397,294 ஆகப் பதிவாகியுள்ளன.
ஒக்டோபர் 10ஆம் திகதி வாண்டரர்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ள இந்தப் போட்டிக்கே இதுவரை அதிகளவிலான டிக்கெட் கோரிக்கைகள் கிடைத்துள்ளன.
அதே மைதானத்தில் நவம்பர் 21ஆம் திகதி நடைபெறவுள்ள உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்காகவும் 7,900,944 டிக்கெட் கோரிக்கைகள் பதிவாகியுள்ளன.
நவம்பர் 21ஆம் திகதி வரை விண்ணப்பிக்கலாம்
டிக்கெட் குலுக்கல் விண்ணப்பங்களைப் பதிவு செய்வதற்கான இறுதித் திகதி 2026 நவம்பர் 21ஆம் திகதி ஆகும். தென்னாபிரிக்க நேரப்படி (CAT) இரவு 11.59 மணிக்கு விண்ணப்பப் பதிவு நிறைவடையும் என ஐசிசி அறிவித்துள்ளது.
இந்தக் குலுக்கலில் பங்கேற்பதற்கு எவ்வித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை. மேலும், முதலில் விண்ணப்பிப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படாது. விண்ணப்பக் காலப்பகுதியில் எந்த நேரத்திலும் ரசிகர்கள் தங்களது விருப்பமான போட்டிகளுக்காகப் பதிவு செய்யலாம்.
ஒருவர் ஒவ்வொரு போட்டிக்கும் ஒரு விண்ணப்பத்தை மாத்திரமே சமர்ப்பிக்க முடியும். பல்வேறு போட்டிகளுக்கும் தனித்தனியாக விண்ணப்பிக்கலாம். ஒரு போட்டிக்கான கேள்வி கிடைக்கும் டிக்கெட்டுகளின் எண்ணிக்கையை விட அதிகமாக இருந்தால், சீரற்ற முறையிலான குலுக்கல் மூலம் டிக்கெட் வாங்குவதற்கான வாய்ப்பு வழங்கப்படும்.
தெரிவுசெய்யப்பட்ட மற்றும் தெரிவுசெய்யப்படாத விண்ணப்பதாரர்களுக்கு அவர்கள் பதிவு செய்த மின்னஞ்சல் முகவரியின் ஊடாக அறிவிக்கப்படும். குலுக்கல் விண்ணப்பப் பதிவின்போது எந்தவொரு டிக்கெட்டும் கொள்வனவு செய்யப்படுவதில்லை; பணமும் செலுத்த வேண்டியதில்லை.
விண்ணப்பிப்பது எப்படி?
- அதிகாரப்பூர்வ டிக்கெட் இணையத்தளத்திற்குச் செல்லவும்.
- கணக்கொன்றை உருவாக்கவும்.
- விருப்பமான போட்டிகள், அணிகள் அல்லது மைதானங்களைத் தெரிவுசெய்யவும்.
- 2026 நவம்பர் 21ஆம் திகதி இரவு 11.59 மணிக்கு முன்னர் விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கவும்.
அதிகாரப்பூர்வ டிக்கெட் பதிவு:
ICC உலகக் கிண்ண டிக்கெட் பதிவு
டிக்கெட் விண்ணப்பக் காலம் நிறைவடைந்த பின்னர் இந்தக் குலுக்கல் மூலம் டிக்கெட் பெறுவதற்கான வாய்ப்பு கிடைக்காது எனவும் ஐசிசி ரசிகர்களுக்கு நினைவூட்டியுள்ளது.





