இலங்கையில் பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடையதாக இதுவரை 208 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகருமான எஃப். யூ. வூட்லர் தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள் தொடர்பான குற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களின் அடிப்படையில் இந்தக் கைது நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடையதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள சுமார் 1,500 பொலிஸ் உத்தியோகத்தர்கள் இதுவரை சேவையிலிருந்து பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத தெரண தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டபோதே அவர் இந்தத் தகவல்களைத் தெரிவித்தார்.
பொலிஸ் திணைக்களத்திற்குள் ஊழல் மற்றும் தகுதியற்ற உத்தியோகத்தர்கள் இருப்பதை ஏற்றுக்கொண்ட அவர், அவ்வாறானவர்களை அடையாளம் கண்டு சேவையிலிருந்து நீக்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், அவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.
“எங்களுக்குள் தகுதியற்றவர்கள் இல்லை என்று கூறவில்லை. அவர்களை அடையாளம் கண்டு நீக்குவதற்கான நடவடிக்கைகளை நாம் மேற்கொண்டு வருகிறோம்” என அவர் மேலும் தெரிவித்தார்.





