ஐரோப்பிய நாடுகளில் இந்த வாரம் விடுக்கப்பட்ட தொடர் போலி வெடிகுண்டு மிரட்டல்களால் குறைந்தது 34 விமானங்களின் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், சில விமானங்கள் அவசரமாகத் தரையிறக்கப்பட்டும் வேறு விமான நிலையங்களுக்குத் திருப்பிவிடப்பட்டும் உள்ளன.
கடந்த வியாழக்கிழமை மாத்திரம் இத்தாலி, அயர்லாந்து, பிரித்தானியா, ஸ்பெயின், பல்கேரியா, ருமேனியா, போலந்து, பின்லாந்து, ஒஸ்திரியா, டென்மார்க், பெல்ஜியம், போர்த்துக்கல், பிரான்ஸ், கிரீஸ், செர்பியா மற்றும் செக் குடியரசு உள்ளிட்ட நாடுகளுக்கு இடையிலான விமானப் போக்குவரத்தைக் குறிவைத்து குறைந்தது 25 வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த மிரட்டல்கள் காரணமாக விமானப் பயணிகளின் பயணங்கள் தாமதமடைந்ததுடன், விமான நிறுவனங்களும் விமான நிலைய அதிகாரிகளும் பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இரண்டு நாட்களுக்கு முன்னரும் ஐரோப்பிய விமானப் போக்குவரத்தைக் குறிவைத்து போலி வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டிருந்த நிலையில், மீண்டும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றுள்ளமை அதிகாரிகளிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவங்கள் ஒருங்கிணைக்கப்பட்ட முறையில் முன்னெடுக்கப்படும் சதிச் செயல்களாக இருக்கலாம் என்றும், ஐரோப்பிய நாடுகளின் பாதுகாப்பு மற்றும் உட்கட்டமைப்புகளைப் பாதிக்கும் வகையிலான ‘Hybrid Warfare’ எனப்படும் கலப்புப் போர் நடவடிக்கைகளுடன் தொடர்புடையதாக இருக்கக்கூடும் என்றும் அச்சங்கள் எழுந்துள்ளன.
எனினும், இந்த மிரட்டல்களின் பின்னணியில் யார் உள்ளனர் என்பது இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. குறிப்பிட்ட நாடு அல்லது அமைப்பின் தொடர்பு குறித்தும் உறுதியான ஆதாரங்கள் வெளியாகவில்லை.
விமானப் போக்குவரத்துப் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், இந்தத் தொடர் மிரட்டல்களின் பின்னணியில் இருப்பவர்களைக் கண்டறியவும் ஐரோப்பிய நாடுகளின் அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்





