பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்லஸின் முன்னாள் சகோதரர் ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்ட்சர் (Andrew Mountbatten-Windsor), வின்ட்சரில் உள்ள ரோயல் லோட்ஜ் (Royal Lodge) வளாகத்திலுள்ள மூன்று குடியிருப்புகளைத் தனியாருக்கு உள்வாடகைக்கு வழங்கி, மாதம் £2,000க்கும் அதிகமான வருமானம் ஈட்டியுள்ளதாக மன்னரின் பொருளாளர் ஜேம்ஸ் சால்மர்ஸ் தெரிவித்துள்ளார்.
மன்னர் குடும்பத்தினரின் நிதி விவகாரங்கள் தொடர்பாக விசாரணை மேற்கொண்டுவரும் நாடாளுமன்றத்தின் பொதுக் கணக்குக் குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்ட கடிதத்தில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
ஆண்ட்ரூ, ரோயல் லோட்ஜில் வாடகையின்றி வசித்து வந்ததுடன், அதன் வளாகத்திலிருந்த மூன்று மேலதிக குடியிருப்புகளையும் தனியாருக்கு வாடகைக்கு வழங்கியுள்ளார். ஆரம்பத்தில் மூன்று குடியிருப்புகளும் ஒரே நேரத்தில் வாடகைக்கு விடப்படவில்லை. எனினும், 2021ஆம் ஆண்டிலிருந்து மூன்றும் ஒரே நேரத்தில் வாடகைக்கு விடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் பராமரிப்பு மற்றும் பொதுச் செலவுகளைக் கழிப்பதற்கு முன்னர் மாதம் £2,000க்கும் அதிகமான மொத்த வருமானம் கிடைத்துள்ளதாக மன்னரின் பொருளாளர் குறிப்பிட்டுள்ளார். இந்த வருமானம் தொடர்பான தகவல் ஆரம்பத்தில் அரச குடும்ப நிர்வாகத்திற்குத் தெரியாமல் இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நார்மன் பேக்கர் உள்ளிட்டோர், இந்த வருமானத்தை மீளச் செலுத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர். முன்னாள் பொதுக் கணக்குக் குழுத் தலைவி பரோனஸ் மார்கரெட் ஹோட்ஜ், இந்த வருமான விவரங்கள் முன்னதாக வெளிப்படுத்தப்படாதது அதிர்ச்சியளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், Crown Estate தொடர்பான நாடாளுமன்றக் குழுவின் விசாரணையில், அரச குடும்பத்தைச் சேர்ந்த சிலர் பொதுச் சொத்துகளுடன் தொடர்புடைய குடியிருப்புகளில் சந்தை விலையைவிடக் குறைந்த வாடகையில் வசிப்பதும், வாடகை நிர்ணயத்தில் ஒரே மாதிரியான நடைமுறை பின்பற்றப்படாமையும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
மே மாத நிலவரப்படி, அரச குடும்பத்தின் பணியில் உள்ள ஏழு உறுப்பினர்கள் ஏழு குடியிருப்புகளில் வாடகையின்றி வசித்து வந்ததாகவும், பணியில் இல்லாத மூன்று உறுப்பினர்கள் சந்தை வாடகையின் சுமார் 60 சதவீதத்தைச் செலுத்தி வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் £14.5 பில்லியன் மதிப்பிலான நிலங்கள், கட்டடங்கள் மற்றும் கடலடிப் பகுதிகளை நிர்வகிக்கும் Crown Estate, தனது நிகர இலாபத்தை அரச திறைசேரிக்கு வழங்குகிறது. எனவே, பொதுமக்களின் நலனைப் பாதுகாக்கும் வகையில் அரச குடும்பத்தினரின் வாடகை ஒப்பந்தங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என நாடாளுமன்றக் குழு பரிந்துரைத்துள்ளது.





