மூளையதிர்ச்சி காரணமாக இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து விலகிய டெவான் கான்வே!

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வரும் நியூசிலாந்து அணிக்கு மற்றுமொரு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அணியின் நட்சத்திர ஆரம்பத் துடுப்பாட்ட வீரரும் விக்கெட் காப்பாளருமான டெவான் கான்வே, மூளையதிர்ச்சி (Concussion) காரணமாக எஞ்சிய போட்டிகளிலிருந்து விலகியுள்ளார்.

ஆக்லாந்தின் ஈடன் பார்க் மைதானத்தில் நடைபெற்ற களத்தடுப்புப் பயிற்சியின்போது இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. பந்தைப் பிடிக்க முயன்றபோது வேகப்பந்து வீச்சாளர் மேட் ஹென்றியும் டெவான் கான்வேயும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டனர்.

இதில் மேட் ஹென்றி காயமின்றித் தப்பிய நிலையில், கான்வேயின் தலையில் பலத்த அடி ஏற்பட்டுள்ளது. மருத்துவப் பரிசோதனைகளுக்குப் பின்னர் அவருக்கு மூளையதிர்ச்சி ஏற்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து, இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரின் எஞ்சிய நான்கு போட்டிகளிலிருந்தும் அவர் விலகியுள்ளார்.

கான்வே விலகியதைத் தொடர்ந்து, கடைசி இரண்டு போட்டிகளுக்காகத் தேர்வு செய்யப்பட்டிருந்த இடதுகைத் துடுப்பாட்ட வீரர் நிக் கெல்லி உடனடியாக வெலிங்டனில் அணியுடன் இணையுமாறு அழைக்கப்பட்டுள்ளார்.

இந்தத் தொடரின் முதல் போட்டியில் கான்வே விளையாடாததால் டிம் சீஃபர்ட் ஆரம்பத் துடுப்பாட்ட வீரராகக் களமிறங்கியிருந்தார். அந்தப் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்டுகளால் வெற்றிபெற்று தொடரில் 1–0 என முன்னிலை பெற்றுள்ளது.

ஏற்கனவே ரச்சின் ரவீந்திரா தோள்பட்டை காயம் காரணமாகவும், மார்க் சாப்மேன் தொடைத் தசைப்பிடிப்பு காரணமாகவும் தொடரிலிருந்து விலகியிருந்தனர். தற்போது கான்வேயும் விலகியுள்ளமை நியூசிலாந்து அணிக்குப் பெரும் சவாலாக அமைந்துள்ளது.

இதற்கிடையில், இந்தியா A அணிக்கு எதிரான மூன்றாவது பயிற்சி டெஸ்ட் போட்டியிலிருந்து நியூசிலாந்து A அணியின் சைமன் கீன், பென் லிஸ்டர் மற்றும் பிரேசர் ஷீட் ஆகியோரும் காயங்கள் காரணமாக விலகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore