சோமாவதிய தேசிய பூங்காவிற்குள் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியை அழித்து, இரண்டு இடங்களில் சட்டவிரோதமாக கஞ்சா பயிரிட்டதாகச் சந்தேகிக்கப்படும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் தகவலின்படி, கடந்த நவம்பர் 02ஆம் திகதி சோமாவதிய தேசிய பூங்காவின் டோசர் பிடிய பகுதிக்கு மேலுள்ள பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட கூட்டு சுற்றிவளைப்பின்போது இந்தக் கஞ்சா பயிர்ச்செய்கைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
குறித்த சுற்றிவளைப்பு கந்தளாய் வனஜீவராசிகள் அலுவலகம், கவுடுல்ல தேசிய பூங்கா அதிகாரிகள் மற்றும் இலங்கை இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் இணைந்து முன்னெடுத்துள்ளனர்.
இதன்போது சுமார் ஒன்றரை ஏக்கர் நிலப்பரப்பில் கஞ்சா பயிரிடப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டுள்ளது. ஒரு இடத்தில் அரை ஏக்கர் வனப்பகுதியும், மற்றொரு இடத்தில் ஒரு ஏக்கர் வனப்பகுதியும் அழிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சுற்றிவளைப்பின்போது மேலும் இருவர் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கடந்த நவம்பர் 04ஆம் திகதி ஹிங்குராங்கொட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, நவம்பர் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் முன்னெடுத்து வருகின்றது





