மரண தண்டனை விதிக்கப்பட்ட 548 கைதிகளின் தண்டனைகள் ஆயுள் தண்டனையாகக் குறைப்பு!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 548 கைதிகளின் தண்டனைகளையும் ஆயுள் தண்டனையாகக் குறைத்து ஆளுநர் கவின் நியூசம் உத்தரவிட்டுள்ளார்.

இதன்படி, குறித்த கைதிகளுக்கு இனி மரண தண்டனை நிறைவேற்றப்படாது. அதற்குப் பதிலாக, பரோல் வாய்ப்பின்றி வாழ்நாள் முழுவதும் சிறையில் தடுத்து வைக்கப்படும் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தீர்மானம் தொடர்பாக கருத்துத் தெரிவித்த ஆளுநர் கவின் நியூசம், அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் மரண தண்டனை கலிபோர்னியா மாநிலத்தின் விழுமியங்களுக்கு முரணானது என்றும், அது நீதித்துறை கட்டமைப்பின் அடிப்படைகளையே பாதிக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மரண தண்டனை முறையை நியாயமான முறையில் நடைமுறைப்படுத்துவதில் பல குறைபாடுகள் காணப்படுவதாகவும், தவறான தீர்ப்புகளால் நிரபராதிகள் தண்டிக்கப்படும் அபாயம் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கலிபோர்னியா மாநிலத்தில் 2006ஆம் ஆண்டுக்குப் பின்னர் எந்தவொரு கைதிக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்படவில்லை. 1978ஆம் ஆண்டு வாக்கெடுப்பின் மூலம் மரண தண்டனை மீண்டும் அமுல்படுத்தப்பட்டதிலிருந்து இதுவரை 13 கைதிகளுக்கு மாத்திரமே அந்தத் தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர், 2019ஆம் ஆண்டில் ஆளுநர் நியூசம் மாநிலத்தில் மரண தண்டனை நிறைவேற்றுவதற்குத் தடை விதித்திருந்தார். தற்போது அவர் தனது அரசியலமைப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி 548 கைதிகளின் தண்டனைகளையும் குறைத்துள்ளார்.

இந்தத் தீர்மானம் மனித உரிமை அமைப்புகளிடமிருந்து வரவேற்பைப் பெற்றுள்ள அதேவேளை, சில அரசியல் மற்றும் சட்டத்துறைப் பிரதிநிதிகள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க சிவில் சுதந்திர ஒன்றியத்தின் (ACLU) நிறைவேற்றுப் பணிப்பாளர் அந்தோனி ரொமேரோ இந்த முடிவை வரவேற்றுள்ளார். மறுபுறம், லொஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டியின் தலைமை வழக்கறிஞர் நாதன் ஹோச்மன், மரண தண்டனையை முழுமையாக நீக்குவதற்கான அதிகாரம் ஆளுநருக்கு இல்லை என்றும், அதனை மாநில சட்டமன்றம் அல்லது வாக்காளர்களே தீர்மானிக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் தற்போது 27 மாநிலங்களில் மரண தண்டனை சட்டபூர்வமாக நடைமுறையில் உள்ளதுடன், 23 மாநிலங்களிலும் வாஷிங்டன் DCயிலும் அது நீக்கப்பட்டுள்ளது.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore