ஐரோப்பிய நாடுகளில் விமானப் போக்குவரத்தைக் குறிவைத்து விடுக்கப்பட்ட தொடர் வெடிகுண்டு மிரட்டல்களால் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், இந்தச் சம்பவங்களின் பின்னணியில் யார் உள்ளனர் என்பது தொடர்பில் அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கடந்த வியாழக்கிழமை மாத்திரம் ஐரோப்பா முழுவதும் குறைந்தது 21 விமானங்களும் பல விமான நிலையங்களும் வெடிகுண்டு மிரட்டல்களால் பாதிக்கப்பட்டதாக BBC தெரிவித்துள்ளது.
பெரும்பாலான மிரட்டல்கள் நம்பகத்தன்மை கொண்டவையாகக் கருதப்பட்டதால், சில விமானங்கள் அவசரமாக வேறு விமான நிலையங்களுக்கு திருப்பிவிடப்பட்டன. இத்தாலியில் ஒரு விமானத்தைப் பாதுகாப்பாக அழைத்துச் செல்வதற்காக போர் விமானங்களும் அனுப்பப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. எனினும், குறித்த மிரட்டல்கள் அனைத்தும் போலியானவை என பின்னர் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
இந்தச் சம்பவங்களின் ஒருங்கிணைந்த தன்மை மற்றும் ஐரோப்பாவில் அண்மைக்காலமாக இடம்பெற்றுவரும் ஏனைய சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகள் காரணமாக, ரஷ்யாவுக்குத் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகங்கள் எழுந்துள்ளன.
குறிப்பாக, இணையவழித் தாக்குதல்கள், முக்கிய இடங்களுக்கு அருகில் ஆளில்லா விமானங்கள் காணப்பட்ட சம்பவங்கள் மற்றும் பல்வேறு உட்கட்டமைப்புகளை இலக்காகக் கொண்ட தாக்குதல்கள் தொடர்பில் ஏற்கனவே விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
இருப்பினும், இந்தப் போலி வெடிகுண்டு மிரட்டல்களுக்கும் ரஷ்யா, ஈரான் அல்லது அவற்றுடன் தொடர்புடைய குழுக்களுக்கும் இடையில் நேரடியான தொடர்பு இருப்பதற்கான உறுதியான ஆதாரங்கள் இதுவரை கிடைக்கவில்லை என BBC சுட்டிக்காட்டியுள்ளது.
இதற்கிடையில், ரோமில் உள்ள விமான நிலைய அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சல் ஒன்றில் “Fighters of the Male State” என்ற குழுவின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தப் பெயர் ரஷ்யாவின் தீவிர வலதுசாரிக் குழுவான “Muzhskoi Legion” அல்லது “Male Legion” அமைப்பைக் குறிக்கக்கூடும் எனக் கருதப்படுகிறது. குறித்த அமைப்பு 2021ஆம் ஆண்டு மொஸ்கோ நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்டிருந்தது.
எனினும், அந்தப் பெயரைப் பயன்படுத்தி வேறு தரப்பினரும் மிரட்டல் விடுத்திருக்கலாம் என்பதால், மின்னஞ்சலை மட்டும் அடிப்படையாகக் கொண்டு சம்பவத்தின் பின்னணியை உறுதிப்படுத்த முடியாது எனக் கூறப்படுகிறது.
இதனால், ஐரோப்பிய நாடுகளின் பொலிஸார், விமான நிலைய அதிகாரிகள் மற்றும் போக்குவரத்து அமைச்சுகள், இந்த மிரட்டல்களின் பின்னணியில் இருப்பவர்களைக் கண்டறிய உறுதியான ஆதாரங்களைத் திரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளன





