அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அதிரடி உத்தரவு – வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தை தேசிய நினைவுச் சின்னமாக அறிவிப்பு!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், வெள்ளை மாளிகையில் அமைந்துள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ அலுவலகமான ஓவல் அலுவலகத்தை (Oval Office) தேசிய நினைவுச் சின்னமாகப் பாதுகாக்கும் வகையில் புதிய நிறைவேற்று உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார்.

எதிர்காலத்தில் பதவியேற்கும் ஜனாதிபதிகள் இந்த அலுவலகத்தின் வரலாற்று அமைப்பையும் கட்டடக்கலைத் தன்மையையும் பாதிக்கும் வகையில் மாற்றங்களைச் செய்வதைத் தடுப்பதே இந்த உத்தரவின் நோக்கம் என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

வியாழக்கிழமை ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவித்த அவர், ஓவல் அலுவலகம் அமெரிக்காவின் அடையாளங்களில் ஒன்றாக இருப்பதாகவும், எதிர்காலத்தில் எவராலும் அதனை இடித்தழிக்கவோ அல்லது அதன் அடிப்படை அமைப்பை மாற்றவோ முடியாத வகையில் பாதுகாக்க விரும்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், இந்த உத்தரவு எதிர்கால ஜனாதிபதிகள் அலுவலகத்தின் அலங்காரங்கள், தளபாடங்கள் மற்றும் உபகரணங்களை மாற்றுவதைத் தடை செய்யவில்லை. அலுவலகத்தின் வரலாற்று அமைப்பு மற்றும் கட்டடக்கலைத் தன்மையைப் பாதிக்காத சாதாரண மாற்றங்களைச் செய்வதற்கு ஜனாதிபதிகளுக்கு அதிகாரம் இருக்கும் என உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ட்ரம்ப் தனது இரண்டாவது பதவிக்காலத்தில் ஓவல் அலுவலகத்தில் பல அலங்கார மாற்றங்களைச் செய்துள்ளார். குறிப்பாக, தங்க நிற அலங்காரங்கள், ஓவியங்கள் மற்றும் புதிய பெயர்ப்பலகை உள்ளிட்ட மாற்றங்கள் கவனத்தை ஈர்த்துள்ளன.

இதற்கிடையில், வெள்ளை மாளிகையின் கிழக்குப் பகுதியான East Wing முழுமையாக இடிக்கப்பட்டு, அப்பகுதியில் புதிய விருந்தினர் மண்டபம் (Ballroom) அமைக்கும் திட்டமும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் திட்டத்திற்கு அமெரிக்க காங்கிரஸின் அனுமதி பெறப்படவில்லை எனவும், அது தொடர்பாக சட்டரீதியான சவால்கள் எழுந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஓவல் அலுவலகத்தை தேசிய நினைவுச் சின்னமாக அறிவித்துள்ள இந்த உத்தரவை எதிர்கால ஜனாதிபதியால் மாற்ற முடியுமா என்பது தொடர்பிலும் தெளிவான சட்ட விளக்கம் இல்லை. அமெரிக்காவில் பெரும்பாலான நிறைவேற்று உத்தரவுகளை அடுத்தடுத்த ஜனாதிபதிகள் ரத்து செய்ய முடியும் என்றாலும், தேசிய நினைவுச் சின்ன அந்தஸ்தை ரத்து செய்வது தொடர்பான சட்ட நடைமுறை இதுவரை நீதிமன்றத்தில் முழுமையாகப் பரிசோதிக்கப்படவில்லை என சட்ட நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

மேலும், இந்த உத்தரவின் மூலம் ஓவல் அலுவலகத்தைப் பாதுகாக்கும் பொறுப்பு தேசிய பூங்காக்கள் சேவைக்கு (National Park Service) வழங்கப்பட்டுள்ளது.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore