மஸ்ஜித் நிர்வாகம் மற்றும் இமாம்களின் ஆற்றல் மேம்பாட்டிற்காக ACJU – ஸம்-ஸம் நிறுவனம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து!

மஸ்ஜித் நிர்வாகத்தை வலுப்படுத்துவதுடன், மஸ்ஜித் இமாம்களின் ஆற்றல்களையும் திறன்களையும் மேம்படுத்தும் நோக்கில், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா (ACJU) மற்றும் ஸம்-ஸம் நிறுவனம் ஆகியவற்றுக்கிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று (MoU) கைச்சாத்திடப்பட்டுள்ளது.

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிறைவேற்றுக் குழுவின் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கான திட்டமிடல் கூட்டம், 2026 நவம்பர் 07 மற்றும் 08ஆம் திகதிகளில் கண்டி – ஹெந்தஸ்ஸ, இனாயா கார்டனில் (G’CEC) நடைபெற்று வருகிறது. இதனிடையே குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இரு நிறுவனங்களுக்கிடையிலான பரஸ்பர புரிந்துணர்வு மற்றும் நீண்டகாலத் திட்டமிடலின் அடிப்படையில், மஸ்ஜித் இமாம்களின் திறன்களை மேம்படுத்தும் வகையில் தேசிய மட்டத்திலான வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்காக இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வேலைத்திட்டத்தின் முக்கிய நோக்கங்கள்

இந்தத் திட்டத்தின் ஊடாகப் பின்வரும் மூன்று முக்கிய நோக்கங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.

  1. இமாம்களின் ஆற்றல்களை மேம்படுத்துதல்

திறமையும் தன்னம்பிக்கையும் கொண்டவர்களாகவும், மக்களுடன் சிறந்த தொடர்பைப் பேணுபவர்களாகவும் இமாம்களை உருவாக்குவதே இதன் முதன்மை நோக்கமாகும். அத்துடன், தேவையான நிறுவனங்களுடன் இணைந்து செயற்படக்கூடியவர்களாகவும், சமூகத்தின் அங்கீகாரத்தையும் கண்ணியத்தையும் பெற்றவர்களாகவும் அவர்களை மேம்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

  1. மஸ்ஜித் நிர்வாகக் கட்டமைப்பை வலுப்படுத்துதல்

சிறந்த நிர்வாகக் கட்டமைப்பு, தெளிவான நடைமுறைகள், முறையான ஒருங்கிணைப்பு மற்றும் கிடைக்கக்கூடிய வளங்களைச் சிறப்பாகப் பயன்படுத்தும் ஆற்றல் ஆகியவற்றைக் கொண்ட மஸ்ஜித்களை உருவாக்குவது மற்றுமொரு நோக்கமாகும்.

  1. சமூக மேம்பாட்டில் மஸ்ஜித்களின் பங்களிப்பை அதிகரித்தல்

மஸ்ஜித்களுடன் சமூக மக்கள் அதிகளவில் இணைந்து செயற்படுவதற்கும், உள்ளூர் தேவைகளை அடிப்படையாகக் கொண்ட சமூக முயற்சிகளில் பங்கேற்பதற்கும் ஊக்கமளிக்கப்படவுள்ளது. இதன் மூலம் சமூகப் பிரச்சினைகளைக் குறைப்பதில் மஸ்ஜித்களும் பொதுமக்களும் கூட்டாகப் பங்களிப்பதை உறுதிப்படுத்துவதே திட்டத்தின் நோக்கமாகும்.

நிகழ்வில் கலந்துகொண்டோர்

இந்த நிகழ்வில் ஸம்-ஸம் நிறுவனம் சார்பில் அதன் தலைவர் எம்.எச்.எம். முஃப்தி யூசுப், திட்ட ஆலோசகர் நவாஸ் உள்ளிட்ட நிறுவனப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சார்பில் அதன் தலைவர் முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி, பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எம். அக்ரம் நூராமித், நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் மற்றும் ஜம்இய்யாவின் பணியாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இமாம்களின் ஆற்றல் மேம்பாடு, மஸ்ஜித் நிர்வாகத்தின் முன்னேற்றம் மற்றும் சமூக நலச் செயற்பாடுகளில் மஸ்ஜித்களின் பங்களிப்பை வலுப்படுத்துதல் ஆகியவற்றை மையமாகக் கொண்டு இந்த தேசிய வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தெரிவித்துள்ளது.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore