நீதிமன்ற உத்தரவையும் மீறி ருவன்வெலிசாய பகுதியில் சத்தியாக்கிரகப் போராட்டம் தொடர்கிறது – கூடாரங்களை அகற்ற உத்தரவு!

அநுராதபுர புனித நகர அபிவிருத்தித் திட்டத்திற்கு எதிராக ருவன்வெலிசாய மற்றும் ஜய ஸ்ரீ மகா போதி உள்ளிட்ட புனிதப் பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டு வரும் சத்தியாக்கிரகப் போராட்டம், நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பின்னரும் தொடர்வதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட பிக்குகள் மற்றும் பொதுமக்கள் இணைந்து, கடந்த நவம்பர் 07ஆம் திகதி காலை ருவன்வெலிசாய விகாரைக்கு அருகில் இந்தப் போராட்டத்தை ஆரம்பித்தனர்.

இதன்போது போராட்டக்காரர்கள் அப்பகுதியில் தற்காலிகக் கூடாரமொன்றை அமைக்க முயன்றுள்ளனர். இதனைத் தடுக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்தபோது, இரு தரப்பினருக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டு அப்பகுதியில் பதற்றமான சூழல் உருவானது.

இதனைத் தொடர்ந்து, அநுராதபுரம் தலைமையகப் பொலிஸ் பரிசோதகர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த தகவல்களின் அடிப்படையில், அநுராதபுரம் நீதவான் நீதிமன்றம் உத்தரவொன்றைப் பிறப்பித்துள்ளது.

அந்த உத்தரவின்படி, ருவன்வெலிசாய மற்றும் ஜய ஸ்ரீ மகா போதி உள்ளிட்ட புனிதப் பகுதிகளில் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் அங்கிருந்து உடனடியாக வெளியேற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், அப்பகுதியில் அமைந்துள்ள தொல்பொருள் சின்னங்களுக்கு எவ்வித சேதமும் ஏற்படுத்தக்கூடாது என்றும், போராட்டக்காரர்களால் அமைக்கப்பட்டுள்ள தற்காலிகக் கூடாரங்களை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எனினும், நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பின்னரும் பிக்குகள் உள்ளிட்ட போராட்டக்காரர்கள் அப்பகுதியிலிருந்து வெளியேறாமல் இரவையும் அங்கேயே கழித்து போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.

இதற்கிடையில், அரசாங்கம் அநுராதபுர புனித நகரத் திட்டம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை மீளப்பெறும் வரை தமது போராட்டம் தொடரும் என பலாங்கொட கஸ்ஸப தேரர் தெரிவித்துள்ளார்.

இதனால், அநுராதபுர புனிதப் பகுதியில் நிலவும் சூழ்நிலை தொடர்ந்து கவனத்தை ஈர்த்துள்ளது.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore