வெள்ளை மாளிகையின் ஊடகப் பேச்சாளராகப் பொறுப்பேற்க டானா வைட்டிற்கு ட்ரம்ப் அழைப்பு – திங்கட்கிழமை முக்கிய சந்திப்பு!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், Ultimate Fighting Championship (UFC) அமைப்பின் தலைமை நிறைவேற்று அதிகாரியான டானா வைட்டை (Dana White), வெள்ளை மாளிகையின் ஊடகப் பேச்சாளராகப் (White House Press Secretary) பொறுப்பேற்குமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

ட்ரம்ப் தனது Truth Social சமூக ஊடகப் பதிவில் இந்த அழைப்பை விடுத்துள்ளார்.

“டானா, வேறு எவரையும் போலல்லாத ஒரு ஊடகப் பேச்சாளராக இருப்பார். டானா, தயவுசெய்து இந்தப் பொறுப்பை ஏற்றுக்கொள்ளுங்கள்” என அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், ட்ரம்பின் இந்த அறிவிப்பு உண்மையான வேலைவாய்ப்பு அழைப்பா அல்லது நகைச்சுவையாக வெளியிடப்பட்டதா என்பது தொடர்பில் தெளிவான தகவல்கள் வெளியாகவில்லை.

இந்நிலையில், சனிக்கிழமை லண்டனில் நடைபெற்ற குத்துச்சண்டைப் போட்டிக்குப் பின்னர் ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவித்த டானா வைட், திங்கட்கிழமை ட்ரம்பைச் சந்திப்பதற்காக வாஷிங்டனுக்குச் செல்வதாகக் கூறியுள்ளார்.

தமக்கு ஏற்கனவே பல பொறுப்புகள் இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், இந்தச் சந்திப்புக்குப் பின்னர் என்ன முடிவு எடுக்கப்படும் என்பது குறித்து பின்னர் தெரியவரும் எனவும் தெரிவித்துள்ளார்.

ஊடகப் பேச்சாளர் பதவி காலியாக உள்ளது

வெள்ளை மாளிகையின் ஊடகப் பேச்சாளர் பதவி கடந்த ஒக்டோபர் மாதம் முதல் காலியாக உள்ளது. முன்னதாக அந்தப் பொறுப்பை ஏற்றிருந்த கேட்டி சக்காரியா (Katie Zacharia), பதவியேற்ற ஐந்து நாட்களுக்குள் அதிலிருந்து விலகியிருந்தார்.

இதற்கிடையில், ட்ரம்பின் அறிவிப்பைத் தொடர்ந்து டானா வைட், வெள்ளை மாளிகையின் ஊடக விளக்க அறையில் உள்ள மேடைக்குப் பின்னால் நிற்பது போன்ற புகைப்படமொன்றை Instagram இல் வெளியிட்டு, “அடுத்த அத்தியாயத்தை நோக்கி” எனக் குறிப்பிட்டுள்ளார்.

வெள்ளை மாளிகையின் தொடர்பாடல் பணிப்பாளர் ஸ்டீவன் சியுங் (Steven Cheung) உள்ளிட்டோரும் ட்ரம்பின் பதிவைப் பகிர்ந்து ஆதரவு தெரிவித்துள்ளனர்.

டானா வைட்டிற்கு ஏற்கனவே பல பொறுப்புகள்

டானா வைட் தற்போது UFC அமைப்பை வழிநடத்துவதுடன், Power Slap என்ற போட்டி அமைப்பையும் நிர்வகித்து வருகிறார். மேலும், அண்மையில் Zuffa Boxing என்ற தொழில்முறை குத்துச்சண்டை நிறுவனத்தையும் ஆரம்பித்துள்ளார்.

அத்துடன், Facebook, Instagram மற்றும் WhatsApp ஆகியவற்றின் தாய் நிறுவனமான Meta நிறுவனத்தின் நிர்வாக சபை உறுப்பினர்களில் ஒருவராகவும் அவர் உள்ளார்.

டானா வைட் மற்றும் டொனால்ட் ட்ரம்ப் நீண்டகால நண்பர்களாகவும் அரசியல் ஆதரவாளர்களாகவும் இருந்து வருகின்றனர். 2016, 2020 மற்றும் 2024ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற குடியரசுக் கட்சியின் தேசிய மாநாடுகளில் ட்ரம்பிற்கு ஆதரவாக டானா வைட் உரையாற்றியிருந்தார்.

மேலும், 2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ட்ரம்ப் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து இடம்பெற்ற வெற்றிக் கொண்டாட்டத்திலும் அவர் பங்கேற்றிருந்தார்.

இதற்கிடையில், CNN செய்தி நிறுவனம் மேற்கோள் காட்டிய தகவலின்படி, டானா வைட் இந்தப் பொறுப்பை ஏற்கும் யோசனையை ஏற்கனவே நிராகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், திங்கட்கிழமை நடைபெறவுள்ள ட்ரம்ப் – டானா வைட் சந்திப்புக்குப் பின்னரே இந்த விவகாரம் தொடர்பில் தெளிவான முடிவு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore