இஸ்ரேலில் புதிய அரசை அமைக்க காடி ஐசென்கோட்டுக்கு சவால் – அரபுக் கட்சிகளின் ஆதரவைப் பெறுவதில் அரசியல் நெருக்கடி!

இஸ்ரேலில் அடுத்த அரசாங்கத்தை அமைப்பதற்கான பொறுப்பு முன்னாள் இராணுவத் தளபதி காடி ஐசென்கோட்டிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், புதிய கூட்டணியை உருவாக்குவதில் அவர் பல்வேறு அரசியல் சவால்களை எதிர்கொள்வதாக அரபு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இஸ்ரேல் ஜனாதிபதி ஐசக் ஹெர்சோக் எடுத்துள்ள இந்த முடிவு தொடர்பாக, நவம்பர் 7 மற்றும் 8ஆம் திகதிகளில் அரபு உலகின் முன்னணி தொலைக்காட்சி ஊடகங்கள் விரிவான செய்திகளை வெளியிட்டுள்ளன.

காடி ஐசென்கோட்டுக்கு இஸ்ரேலிய நாடாளுமன்றத்தின் 67 உறுப்பினர்களின் ஆதரவு கிடைத்துள்ளதாக அரபு ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. எனினும், இந்த ஆதரவை அடிப்படையாகக் கொண்டு நிலையான அரசாங்கக் கூட்டணியை உருவாக்குவது அவருக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, எதிர்க்கட்சிகளுக்கிடையே காணப்படும் கருத்தியல் வேறுபாடுகளைக் கடந்து, அரபுக் கட்சிகளின் ஆதரவுடன் சிறுபான்மை அரசாங்கம் ஒன்றை அமைக்கும் சாத்தியக்கூறுகள் குறித்தே அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

அரபுக் கட்சிகளின் ஆதரவு முக்கியத்துவம்

கத்தாரைச் சேர்ந்த அல் ஜசீரா தொலைக்காட்சி, புதிய அரசாங்கத்தை அமைக்கும் நடவடிக்கையில் அரபுக் கட்சிகள் செலுத்தக்கூடிய செல்வாக்கை முக்கியமாக எடுத்துரைத்துள்ளது.

ஐசென்கோட்டுக்கு அரசாங்கக் கூட்டணியை அமைப்பதற்காக 28 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும், தேவைப்பட்டால் அதனை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்க முடியும் என்றும் அந்தச் சேனல் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், ஜாயின்ட் லிஸ்ட் தலைவர் அகமது திபி, அரபுக் கட்சிகளின் வெளிப்புற ஆதரவுடன் சிறுபான்மை அரசாங்கத்தை அமைக்குமாறு ஐசென்கோட்டுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பெஞ்சமின் நெதன்யாகுவை ஆட்சியிலிருந்து அகற்றுவதே இத்தகைய அரசாங்கத்தின் முக்கிய நோக்கமாக இருக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். இந்த முயற்சிக்கு அரசியல் துணிச்சல் அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சவூதி அரேபியாவைச் சேர்ந்த அல் அரேபியா தொலைக்காட்சியும், நெதன்யாகுவுக்கு எதிரான அரசாங்கத்தை அமைப்பதற்கு அரபுக் கட்சிகள் ஆதரவளிக்கத் தயாராக இருப்பதாக வெளியிட்டுள்ள சமிக்ஞைகள் குறித்து செய்தி வெளியிட்டுள்ளது.

மன்சூர் அப்பாஸ் தலைமையிலான யுனைடெட் அரப் லிஸ்ட் கட்சி, முறையான கூட்டணி ஒப்பந்தம் இல்லாவிட்டாலும் ஐசென்கோட் தலைமையிலான அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கத் தயாராக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஐசென்கோட் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் யாயிர் லபிட் ஆகியோருடன் மன்சூர் அப்பாஸ் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் அந்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

கூட்டணிக்குள் கருத்து வேறுபாடுகள்

ஐக்கிய அரபு எமிரேட்ஸைச் சேர்ந்த ஸ்கை நியூஸ் அரேபியா, அரபுக் கட்சிகளின் ஆதரவைப் பெறுவது தொடர்பாக இஸ்ரேலின் எதிர்க்கட்சிகளுக்குள் காணப்படும் கருத்து வேறுபாடுகளைச் சுட்டிக்காட்டியுள்ளது.

குறிப்பாக, அரபுக் கட்சிகளின் ஆதரவைச் சார்ந்திருக்கும் எந்தவொரு அரசாங்கத்தையும் இஸ்ரேல் பெய்தெய்னு கட்சியின் தலைவர் அவிக்டோர் லிபர்மேன் எதிர்ப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, தீவிரப் பழமைவாத யூதக் கட்சிகளுடன் இணைந்து கூட்டணி அமைப்பது அல்லது நெதன்யாகு அணியின் சில பிரிவுகளையும் உள்ளடக்கிய தேசிய ஒற்றுமை அரசாங்கத்தை உருவாக்குவது உள்ளிட்ட மாற்று வழிகளும் ஆராயப்படுவதாகக் கூறப்படுகிறது.

ஐசென்கோட் – நெதன்யாகு இடையிலான அரசியல் முரண்பாடு

இதற்கிடையில், நெதன்யாகு இஸ்ரேலிய சமூகத்தில் பிளவுகளை ஏற்படுத்துவதாக ஐசென்கோட் குற்றம்சாட்டியிருந்ததாக லெபனானைச் சேர்ந்த அல்-மயாதீன் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.

அரபுக் கட்சிகள் ஐசென்கோட் தலைமையிலான அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பது இஸ்ரேலை உள்ளிருந்து அழித்துவிடும் என நெதன்யாகு தெரிவித்திருந்ததாகவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், நெதன்யாகுவுடன் கூட்டணி அமைக்கும் சாத்தியத்தை ஐசென்கோட் முற்றாக நிராகரித்துள்ளதாக ஈரானின் அல்-ஆலம் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

இவ்வாறான சூழலில், இஸ்ரேலின் எதிர்க்கட்சிகள் தங்களுக்கிடையிலான அரசியல் வேறுபாடுகளைக் கடந்து ஒருமித்த முடிவை எடுக்குமா என்பதும், அரபுக் கட்சிகளின் ஆதரவுடன் புதிய அரசாங்கத்தை அமைக்க முடியுமா என்பதும் அடுத்த சில வாரங்களில் தீர்மானிக்கப்படவுள்ள முக்கிய அரசியல் விடயங்களாகக் காணப்படுகின்றன.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore