இலங்கை மற்றும் தாய்லாந்து ஆகிய இரு நாடுகளுக்கும் இடையில் சாதாரண கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் விசா இன்றி பயணம் செய்வதற்கான 30 நாட்கள் விசா விலக்கு ஒப்பந்தத்தின் வரைவு முன்மொழிவுக்கு தாய்லாந்து அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதன் மூலம் இரு நாடுகளினதும் சாதாரண கடவுச்சீட்டு வைத்திருக்கும் குடிமக்கள், எதிர்காலத்தில் சுற்றுலா நோக்கங்களுக்காக மற்றைய நாட்டிற்குச் செல்லும்போது முன்கூட்டியே விசா பெற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லாத நிலை உருவாகவுள்ளது.
தாய்லாந்து அமைச்சரவை கடந்த நவம்பர் 17ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் இந்த ஒப்பந்தத்தின் வரைவு முன்மொழிவுக்கு அங்கீகாரம் வழங்கியதாக அந்நாட்டு அரசாங்கத்தின் பிரதி ஊடகப் பேச்சாளர் ப்லோய்தலாய் லக்சமீசேங்ஜன் தெரிவித்துள்ளார்.
30 நாட்கள் விசா இன்றி தங்க அனுமதி
இந்த ஒப்பந்தத்தின் பிரகாரம், இலங்கை மற்றும் தாய்லாந்து ஆகிய இரு நாடுகளினதும் செல்லுபடியாகும் சாதாரண கடவுச்சீட்டுகளை வைத்திருப்பவர்கள், மற்றைய நாட்டிற்குள் நுழையவும், அங்கிருந்து வெளியேறவும் அல்லது அந்நாட்டின் ஊடாகப் பயணிக்கவும் முன்கூட்டிய விசா அனுமதி தேவைப்படாது.
இதன்படி, ஒவ்வொரு பயணத்தின்போதும் அதிகபட்சமாக 30 நாட்கள் வரை விசா இன்றி தங்குவதற்கு அனுமதி வழங்கப்படவுள்ளது.
அதேவேளை, 180 நாட்கள் கொண்ட காலப்பகுதியில் மொத்தமாக 90 நாட்கள் வரை மட்டுமே இந்த விசா விலக்கின் கீழ் தங்க முடியும் என ஒப்பந்த வரைவு குறிப்பிடுகிறது.
இந்த நடைமுறை இரு நாடுகளின் சாதாரண கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கும் சமமாகப் பொருந்தும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.
வேலை, கல்வி நடவடிக்கைகளுக்கு விசா அவசியம்
எனினும், இந்த விசா விலக்கு அனைத்து பயண நோக்கங்களுக்கும் பொருந்தாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
30 நாட்களுக்கு மேல் மற்றைய நாட்டில் தங்க விரும்புவோர், வேலைவாய்ப்பைப் பெறுவதற்காகப் பயணம் செய்வோர், கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் அல்லது அந்நாட்டு அதிகாரிகளின் முன் அனுமதி தேவைப்படும் ஏனைய நடவடிக்கைகளில் ஈடுபட விரும்புவோர் உரிய விசாவைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
குறித்த பயணிகள் தங்களது பயணத்திற்கு முன்னரே பொருத்தமான விசாவைப் பெற்றிருக்க வேண்டும் என ஒப்பந்த வரைவு நிபந்தனை விதிக்கிறது.
எனவே, இந்த ஒப்பந்தம் பிரதானமாக சுற்றுலா மற்றும் குறுகியகாலப் பயணங்களை இலகுபடுத்தும் நோக்கத்தைக் கொண்டுள்ளது.
ஒப்பந்தத்தில் கையெழுத்திட அதிகாரம்
தாய்லாந்து அமைச்சரவை இந்த ஒப்பந்த வரைவை அங்கீகரித்துள்ளதுடன், அதில் கையெழுத்திடுவதற்கான அதிகாரத்தையும் அந்நாட்டு வெளிவிவகார அமைச்சருக்கு அல்லது அவரால் நியமிக்கப்படும் பிரதிநிதிக்கு வழங்கியுள்ளது.
மேலும், ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் பிரதிநிதிக்கு முழு அதிகாரத்தை வழங்கும் ஆவணத்தை வெளியிடுவதற்கும், ஒப்பந்தம் நடைமுறைக்கு வருவதற்குத் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் வெளிவிவகார அமைச்சுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்ட அடிப்படைக் கொள்கைகளுக்கு முரணாக இல்லாத வகையில், ஒப்பந்த வரைவில் தேவையான திருத்தங்களை மேற்கொள்ளவும் அமைச்சுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அவ்வாறு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டால், அதற்கான காரணங்கள் மற்றும் தாய்லாந்துக்கு கிடைக்கும் நன்மைகள் தொடர்பாக அமைச்சரவைக்கு அறிவிக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எப்போது நடைமுறைக்கு வரும்?
இந்த ஒப்பந்தம் தொடர்பில் முக்கியமாகக் கவனிக்க வேண்டிய விடயம், தாய்லாந்து அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ள போதிலும், விசா விலக்கு நடைமுறை உடனடியாக அமுலுக்கு வராது என்பதாகும்.
இரு நாடுகளும் தத்தமது உள்நாட்டு நடைமுறைகளை நிறைவு செய்த பின்னர், அவை தொடர்பான இறுதி எழுத்துமூல அறிவித்தல்கள் இராஜதந்திர வழிமுறைகள் ஊடாகப் பரிமாறிக்கொள்ளப்பட வேண்டும்.
இறுதி அறிவித்தல் கிடைத்த நாளிலிருந்து 60ஆவது நாளில் இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வரும் என ஒப்பந்த வரைவு குறிப்பிடுகிறது.
எனவே, ஒப்பந்தம் முழுமையாக நடைமுறைக்கு வரும் திகதி தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை, பயணிகள் தற்போதுள்ள விசா நடைமுறைகளைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
மேலும், பொதுமக்கள் பாதுகாப்பு, பொது சுகாதாரம் அல்லது தேசிய பாதுகாப்பு போன்ற காரணங்களுக்காக ஒப்பந்தத்தின் முழுமையான அல்லது ஒரு பகுதியான நடைமுறையை இடைநிறுத்துவதற்கும் இரு தரப்பினருக்கும் உரிமை வழங்கப்பட்டுள்ளது.
அத்தகைய இடைநிறுத்தம் அல்லது ரத்துச் செய்வது தொடர்பாக மற்றைய தரப்புக்கு குறைந்தது 30 நாட்களுக்கு முன்னர் இராஜதந்திர வழிமுறைகள் ஊடாக எழுத்துமூலமாக அறிவிக்க வேண்டும்.
அதேபோன்று, இரு நாடுகளில் ஏதேனும் ஒன்று ஒப்பந்தத்திலிருந்து விலக விரும்பினால், எழுத்துமூல அறிவித்தலை வழங்க முடியும். அவ்வாறு அறிவிக்கப்பட்ட பின்னர் 90ஆவது நாளில் ஒப்பந்தம் நிறைவுக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலாத்துறைக்கும் இருதரப்பு உறவுகளுக்கும் நன்மை
இலங்கைக்கும் தாய்லாந்துக்கும் இடையிலான நெருங்கிய பௌத்த மற்றும் கலாசாரத் தொடர்புகளை மேலும் வலுப்படுத்துவதற்கு இந்த ஒப்பந்தம் உதவும் என தாய்லாந்து அரசாங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
இரு நாடுகளின் மக்களுக்கும் இடையிலான தொடர்புகளை மேம்படுத்துவதுடன், சுற்றுலாப் பயணங்களை இலகுபடுத்தி தாய்லாந்தின் சுற்றுலாத்துறையின் வளர்ச்சிக்கும் இந்த ஒப்பந்தம் பங்களிக்கும் என தாய்லாந்து அரசாங்கத்தின் பிரதி ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, கலாசாரச் சுற்றுலா மற்றும் மதம் சார்ந்த பயண நடவடிக்கைகளை ஊக்குவிப்பதில் இந்த ஒப்பந்தம் முக்கிய பங்காற்றும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, கடந்த ஒக்டோபர் மாதம் 6ஆம் திகதி இலங்கை அமைச்சரவையும் தாய்லாந்துடனான சாதாரண கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கான விசா விலக்கு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கான முன்மொழிவுக்கு அங்கீகாரம் வழங்கியிருந்தது.
தற்போது தாய்லாந்து அமைச்சரவையும் ஒப்பந்த வரைவை அங்கீகரித்துள்ள நிலையில், இரு நாடுகளினதும் உள்நாட்டு நடைமுறைகள் நிறைவடைந்து இறுதி அறிவித்தல்கள் பரிமாறப்பட்ட பின்னரே இந்த விசா விலக்கு நடைமுறைக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.





