இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது மகனும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ சிறைச்சாலையிலிருந்து உருக்கமான வாழ்த்துச் செய்தியொன்றை வெளியிட்டுள்ளார்.
தனது தந்தையின் பிறந்தநாளில் நேரில் சென்று வாழ்த்துத் தெரிவிக்க முடியாத சூழ்நிலையில் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ள நாமல் ராஜபக்ஷ, சிறைச்சாலையின் சுவர்களால் தமது தந்தை மீதான அன்பையும் மரியாதையையும் ஒருபோதும் தடுக்க முடியாது எனத் தெரிவித்துள்ளார்.
தனது தந்தையின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிட்டுள்ள செய்தியில், குடும்பத்தினரிடமிருந்தும் அன்புக்குரியவர்களிடமிருந்தும் பிரிந்து கடினமான காலகட்டத்தை எதிர்கொண்டு வருவதால், இந்த முக்கியமான நாளில் தந்தையுடன் நேரில் இருக்க முடியவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
“தந்தைக்கும் மகனுக்கும் இடையிலான பிணைப்பு என்பது தூரத்தினாலும் உடைக்க முடியாத ஒன்றாகும்” என அவர் தனது செய்தியில் தெரிவித்துள்ளார்.
தனது வாழ்நாள் முழுவதும் பல்வேறு சவால்களை எதிர்கொள்ளும்போது, தந்தை தனக்குக் கற்றுக்கொடுத்த பாடங்கள், அவர் வெளிப்படுத்திய துணிச்சல் மற்றும் அவரது முன்மாதிரியான வாழ்க்கை ஆகியவையே தனக்கு மனவலிமையை வழங்கியதாகவும் நாமல் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் வரலாற்றில் மிகவும் இருண்ட காலகட்டங்களில் ஒன்றாகக் கருதப்படும் காலப்பகுதியில் மஹிந்த ராஜபக்ஷ ஆற்றிய தலைமைத்துவப் பங்களிப்பையும் அவர் தனது வாழ்த்துச் செய்தியில் நினைவுகூர்ந்துள்ளார்.
அச்சமின்றி உறுதியுடன் செயற்பட்டு, எண்ணற்ற குடும்பங்களுக்கு அமைதியைப் பெற்றுக்கொடுத்தவர் தனது தந்தை என நாமல் தெரிவித்துள்ளார்.
மேலும், உண்மைக்காகப் போராடும் போது தானும் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்ட அனுபவங்கள், தனது தந்தை பெரும் பொறுப்புகளைச் சுமந்துகொண்டு செயற்பட்டபோது வெளிப்படுத்திய பொறுமை, துணிச்சல் மற்றும் விடாமுயற்சி ஆகியவற்றை மேலும் ஆழமாகப் புரிந்துகொள்ள உதவியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
தந்தையின் பிறந்தநாளில் நேரில் சென்று அவரைச் சந்திக்க முடியாத போதிலும், தனது பிள்ளைகள் தமது தாத்தாவைச் சந்தித்து, அவரைத் தழுவி வாழ்த்துகளைத் தெரிவிப்பார்கள் என்றும் நாமல் குறிப்பிட்டுள்ளார்.
மஹிந்த ராஜபக்ஷவின் பின்னணி மற்றும் வாழ்க்கைப் பயணத்தை நினைவுகூர்ந்த நாமல், அவரை கிருவாப்பத்துவ மண்ணில் ஆழமாக வேரூன்றியவராகவும், பல்வேறு கஷ்டங்கள், அரசியல் அழுத்தங்கள் மற்றும் அவமதிப்புகளைத் தாங்கி வந்தவராகவும் வர்ணித்துள்ளார்.
தனது தந்தைக்கு நல்ல உடல்நலம், மனவலிமை மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கை கிடைக்க வேண்டும் எனவும் அவர் வாழ்த்தியுள்ளார்.
குடும்பத்தினரிடமிருந்து பிரிந்து இருந்தாலும், தந்தை மீதான தனது அன்பும் மரியாதையும் எவ்விதத்திலும் குறையவில்லை எனக் குறிப்பிட்டுள்ள நாமல், சிறைச்சாலையின் சுவர்களால் தந்தை – மகன் இடையிலான உறவைப் பலவீனப்படுத்த முடியாது என்றும் தனது செய்தியில் உணர்வுபூர்வமாகத் தெரிவித்துள்ளார்.
நாமல் ராஜபக்ஷ வெளியிட்டுள்ள இந்தப் பிறந்தநாள் வாழ்த்துச் செய்தி தற்போது அரசியல் மற்றும் சமூக வலைத்தளங்களில் கவனம் பெற்றுள்ளது.





