உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான என்விடியாவின் (Nvidia) தலைமை நிர்வாக அதிகாரி ஜென்சன் ஹுவாங், சீன உளவாளி எனச் சந்தேகிக்கப்படும் பெண் ஒருவருடன் தொடர்பில் இருந்ததாக வெளியாகியுள்ள தகவல்கள் தொடர்பில் அமெரிக்காவின் மத்திய புலனாய்வுப் பிரிவான FBI விசாரணை நடத்தி வருவதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பு மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பப் போட்டி தொடர்பான முக்கியத்துவத்தைப் பெற்றுள்ள நிலையில், என்விடியா நிறுவனத்தின் பங்குச் சந்தை மதிப்பிலும் குறிப்பிடத்தக்க சரிவு ஏற்பட்டுள்ளது.
வெள்ளை மாளிகையில் திங்கட்கிழமை செய்தியாளர்களிடம் கருத்துத் தெரிவித்த ட்ரம்ப், என்விடியா தலைமை நிர்வாக அதிகாரி ஜென்சன் ஹுவாங்குடன் தொலைபேசியில் உரையாடியதாகக் குறிப்பிட்டார்.
அப்போது, சீன உளவாளி எனச் சந்தேகிக்கப்படும் பெண்ணின் பின்னணி குறித்து அவருக்குத் தெரியுமா எனத் தாம் நேரடியாகக் கேட்டதாகவும், அதற்கு ஹுவாங் தனக்கு எதுவும் தெரியாது எனப் பதிலளித்ததாகவும் ட்ரம்ப் தெரிவித்தார்.
“அவர் ஓர் உளவாளி என்பது எனக்குத் தெரியாது” என ஹுவாங் கூறியதாகத் தெரிவித்த ட்ரம்ப், அவருடைய விளக்கத்தைத் தாம் நம்புவதாகவும் குறிப்பிட்டார்.
மேலும், ஜென்சன் ஹுவாங் ஒரு கௌரவமான மனிதர் எனக் குறிப்பிட்ட ட்ரம்ப், இந்த விசாரணைகளுக்குப் பின்னர் அவர் நலமாக இருப்பார் எனத் தாம் நம்புவதாகவும் தெரிவித்தார்.
எனினும், FBI விசாரணை எப்போது ஆரம்பிக்கப்பட்டது, அதன் நோக்கம் மற்றும் விசாரணையின் தற்போதைய நிலை என்ன என்பது தொடர்பில் ட்ரம்ப் மேலதிக விபரங்களை வெளியிடவில்லை. இது தொடர்பாக BBC தொடர்புகொண்டபோது FBI கருத்துத் தெரிவிக்க மறுத்துள்ளது.
சீன உளவாளி எனச் சந்தேகிக்கப்படும் அலிஸ் ஹுவாங் யார்?
அமெரிக்காவின் உளவுத்துறை அதிகாரிகள், அலிஸ் ஹுவாங் (Alice Huang) எனப்படும் பெண் ஒருவர் சீன அரசாங்கத்துக்காக உளவு நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகச் சந்தேகிப்பதாக நியூயோர்க் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹுவாங் லீ (Huang Le) என்ற பெயராலும் அறியப்படும் குறித்த பெண், சிங்கப்பூரைத் தளமாகக் கொண்ட மெகாஸ்பீட் (Megaspeed) நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராகப் பணியாற்றியுள்ளார். அந்த நிறுவனம் என்விடியாவுடன் வர்த்தகத் தொடர்புகளைக் கொண்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க வெளியுறவுத்துறைச் செயலாளர் மார்கோ ரூபியோ, கடந்த வசந்த காலத்தில் வாஷிங்டனில் உள்ள உயர்மட்ட அதிகாரிகளுக்கு அனுப்பிய இரகசியக் குறிப்பில், ஜென்சன் ஹுவாங் சீன உளவாளி எனச் சந்தேகிக்கப்படும் பெண்ணுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பதாக எச்சரித்திருந்தார் என நியூயோர்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
எனினும், அலிஸ் ஹுவாங் மற்றும் என்விடியா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜென்சன் ஹுவாங் ஆகியோர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக சீன அரசாங்கம் குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ளது. சீன வெளியுறவு அமைச்சு, இக்குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை, ஊகங்களை அடிப்படையாகக் கொண்டவை என்றும் சீனாவை அவதூறு செய்வதற்காக முன்வைக்கப்பட்டவை என்றும் தெரிவித்துள்ளது.
என்விடியா நிறுவனத்தின் இரகசியங்கள் கசிந்தனவா?
இந்த விவகாரம் தொடர்பாக என்விடியா நிறுவனம் சுயாதீன விசாரணை ஒன்றை ஆரம்பித்துள்ளது.
இருப்பினும், நிறுவனத்தின் வர்த்தக இரகசியங்கள் அல்லது அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்புக்கு அவசியமான தகவல்கள் சமரசம் செய்யப்பட்டுள்ளன என்பதற்கான காரணம் எதுவும் தங்களுக்குத் தற்போது இல்லை என நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் ஜென்சன் ஹுவாங் தமது மனைவி மற்றும் பிள்ளைகளுக்கு ஏற்பட்ட மனவேதனைக்காக மன்னிப்புக் கோரியுள்ளதாகவும், தாம் திருமண உறவில் நேர்மையாக நடந்துகொள்ளவில்லை என்பதை ஒப்புக்கொண்டுள்ளதாகவும் BBC செய்தி வெளியிட்டுள்ளது.
அதேவேளை, என்விடியா நிறுவனத்தைப் பாதுகாப்பதற்கும் அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்புக்கு ஆதரவளிப்பதற்கும் தாம் உறுதியாக இருப்பதாக ஹுவாங் தெரிவித்துள்ளார். நிறுவனத்தினால் முன்னெடுக்கப்படும் சுயாதீன விசாரணைக்கும் முழுமையான ஒத்துழைப்பு வழங்கத் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பங்குச் சந்தையில் 250 பில்லியன் டொலர் மதிப்பு சரிவு
இந்தச் செய்தி வெளியானதைத் தொடர்ந்து என்விடியா நிறுவனத்தின் பங்குகள் திங்கட்கிழமை நான்கு சதவீதத்திற்கும் அதிகமாக வீழ்ச்சியடைந்துள்ளன.
இதன் காரணமாக நிறுவனத்தின் சந்தை மதிப்பிலிருந்து சுமார் 250 பில்லியன் அமெரிக்க டொலர் (சுமார் 190 பில்லியன் பவுண்ட்) குறைந்துள்ளதாக BBC தெரிவித்துள்ளது.
உலகின் இரண்டாவது அதிக சந்தை மதிப்பைக் கொண்ட நிறுவனமாகக் கருதப்படும் என்விடியா, செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்திற்குத் தேவையான உயர் செயல்திறன் கொண்ட கணினிச் சில்லுகளை வடிவமைத்து உற்பத்தி செய்கிறது. குறிப்பாக, உலகளாவிய AI தொழில்நுட்ப வளர்ச்சியில் அந்நிறுவனத்தின் சில்லுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
எனவே, நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி தொடர்பான இந்த விவகாரம் வெறும் தனிப்பட்ட உறவு தொடர்பான சர்ச்சையாக மட்டும் பார்க்கப்படாமல், அமெரிக்காவின் தொழில்நுட்பப் பாதுகாப்பு மற்றும் சீனாவுடனான போட்டி ஆகியவற்றுடனும் தொடர்புபடுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்க நாடாளுமன்றக் குழுக்களின் விசாரணையும் எதிர்பார்ப்பு
இதேவேளை, ஜென்சன் ஹுவாங் அடுத்த வாரம் அமெரிக்க நாடாளுமன்றத்தின் பல்வேறு குழுக்களின் கூட்டுக் கூட்டத்தில் பங்கேற்று விளக்கமளிக்குமாறு கோரப்பட்டுள்ளார்.
இந்தக் கூட்டம் மூடிய அறைக்குள் நடைபெறவுள்ளதாகவும், வெளிநாட்டு உளவு நடவடிக்கைகளிலிருந்து என்விடியா நிறுவனத்தின் பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் அலிஸ் ஹுவாங்குடனான தொடர்புகள் குறித்து விளக்கமளிக்குமாறு அவரிடம் கோரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், குறித்த கூட்டத்தில் ஜென்சன் ஹுவாங் பங்கேற்பாரா என்பது இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.
இதற்கிடையில், ஜென்சன் ஹுவாங் மற்றும் என்விடியா நிறுவனத்துக்கு எதிராக கலிபோர்னியாவில் முன்மொழியப்பட்ட கூட்டு வழக்கொன்றும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பங்குதாரர்களிடமிருந்து ஜென்சன் ஹுவாங்கின் குறித்த தொடர்பு மறைக்கப்பட்டதாகவும், இதன் மூலம் முதலீட்டாளர்கள் ஏமாற்றப்பட்டதாகவும் அந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
அத்துடன், சீனாவுக்கு என்விடியா தயாரிப்புகளை இரகசியமாகக் கொண்டு செல்ல உதவுவதற்காக அலிஸ் ஹுவாங் முயற்சித்திருக்கலாம் என்றும் வழக்கில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
எனினும், இவை வழக்கில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளாகும். அவை நீதிமன்றத்தால் நிரூபிக்கப்பட்ட உண்மைகள் அல்ல. இந்த வழக்கு தொடர்பாக BBC என்விடியா நிறுவனத்திடம் கருத்துக் கோரியுள்ளது.
அமெரிக்கா – சீனா தொழில்நுட்பப் போட்டியில் புதிய கவனம்
அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பப் போட்டியில் என்விடியா முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது.
சீனாவின் இராணுவ மற்றும் கண்காணிப்புத் திறன்களை மேம்படுத்துவதற்கு அமெரிக்கத் தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படலாம் என்ற பாதுகாப்புக் கவலைகளை ட்ரம்ப் நிர்வாகம் ஏற்கனவே வெளியிட்டுள்ளது.
இதன் காரணமாக, என்விடியாவின் மேம்பட்ட கணினிச் சில்லுகளைச் சீனாவுக்கு ஏற்றுமதி செய்வதில் அமெரிக்கா பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
என்விடியாவின் H200 சில்லுகள் தொடர்பான ஏற்றுமதிக் கட்டுப்பாடுகள் முன்னதாக அமெரிக்காவில் விவாதிக்கப்பட்டிருந்தன. பின்னர், சில நிபந்தனைகளின் அடிப்படையில் சீன வாடிக்கையாளர்களுக்கு H200 சில்லுகளை விற்பனை செய்ய அனுமதிப்பதாக ட்ரம்ப் நிர்வாகம் ஜனவரி மாதம் அறிவித்திருந்தது.
ஆனால், என்விடியாவின் மிகவும் மேம்பட்ட AI சில்லுகளான GB200 Blackwell உள்ளிட்ட தயாரிப்புகளுக்குச் சீனச் சந்தையில் தொடர்ந்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்தச் சூழலில், என்விடியா தலைமை நிர்வாக அதிகாரி தொடர்பான உளவு குற்றச்சாட்டுகள் அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பு வட்டாரங்களில் கூடுதல் கவனத்தைப் பெற்றுள்ளன.
எனினும், ஜென்சன் ஹுவாங் சீன உளவாளி எனச் சந்தேகிக்கப்படும் பெண்ணின் பின்னணி குறித்து அறிந்திருந்தாரா, என்விடியா நிறுவனத்தின் இரகசியத் தகவல்கள் ஏதேனும் பாதிக்கப்பட்டனவா என்பன உள்ளிட்ட முக்கிய விடயங்கள் விசாரணைகளின் மூலமே தெளிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.





