அமெரிக்காவின் நியூயோர்க் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஈரான் ஆதரவு ஆயுதக் குழுவொன்றின் தளபதி, சிறையிலிருந்து ரகசியக் குறியீடுகள் மூலம் தகவல்களைப் பரிமாறி, பிரித்தானியாவில் உள்ள முக்கிய விமானப்படைத் தளத்தின் மீது தாக்குதல் நடத்தும் முயற்சியை வழிநடத்தியதாக அமெரிக்க மத்திய வழக்கறிஞர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
மொஹமட் டாவூத் அல்-சாதி (Mohammad Dawood Al-Saadi) என்ற ஈரான் மற்றும் ஈராக் இரட்டைக் குடியுரிமை கொண்ட நபரே இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளார். இவர் ஈரான் ஆதரவு ஆயுதக் குழுவான கதாயிப் ஹிஸ்புல்லாவுடன் (Kataib Hezbollah) தொடர்புடையவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
பிரித்தானியாவின் RAF Fairford விமானப்படைத் தளத்தை இலக்கு வைத்து நடத்தத் திட்டமிடப்பட்ட தாக்குதலுக்கு, அல்-சாதி தனது குடும்ப உறுப்பினர்களுடன் மேற்கொண்ட சிறைத் தொலைபேசி உரையாடல்களில் ரகசியக் குறியீடுகளைப் பயன்படுத்தி வழிகாட்டல்களை வழங்கியதாகக் குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த விமானப்படைத் தளம் அமெரிக்காவின் B-1 ரக குண்டுவீச்சு விமானங்கள் பயன்படுத்தும் முக்கிய தளமாகும்.
மூவருக்கு எதிராகக் குற்றப்பத்திரிகை தாக்கல்
நியூயோர்க்கில் செவ்வாய்க்கிழமை (10) நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட புதிய குற்றப்பத்திரிகையின்படி, அல்-சாதி இந்தத் திட்டத்தை ஈரானிய இஸ்லாமியப் புரட்சிகர காவல் படையின் (IRGC) செயற்பாட்டாளரான மொஹ்சென் மொஹஜெரி மற்றும் மற்றொரு ஈரானியரான மொஹமட் அலி அல்-ஹசானி ஆகியோருடன் இணைந்து ஒருங்கிணைத்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த மூவருக்கும் எதிராகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
கடந்த செப்டெம்பர் மாதம், பிரித்தானிய விமானப்படைத் தளத்தை நோக்கிச் சென்ற சந்தேகத்திற்கிடமான மூன்று வாகனங்கள் தொடர்பாகப் பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து, பயங்கரவாதத் தாக்குதல் திட்டம் தொடர்பான சந்தேகத்தின் அடிப்படையில் ஏழு பேர் கைது செய்யப்பட்டனர்.
எனினும், குறித்த வாகனங்களில் வெடிபொருட்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படாததால், அவர்கள் கடுமையான நிபந்தனைகளின் அடிப்படையில் பின்னர் விடுவிக்கப்பட்டனர். தொடர்ந்து ஒக்டோபர் மாத இறுதியில் அவர்களில் பலர் மீண்டும் கைது செய்யப்பட்டனர்.
எரிபொருள் நிரப்பப்பட்ட அந்த வாகனங்களை வெடிபொருள் தாக்குதலுக்குப் பயன்படுத்தும் வகையில் மாற்றியமைக்கத் திட்டமிடப்பட்டிருந்ததாக விசாரணை தொடர்பான தகவல்களை அறிந்த வட்டாரங்கள் CNN செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளன.
தாக்குதல் திட்டம் எவ்வாறு முன்னெடுக்கப்பட்டது?
நீதிமன்ற ஆவணங்களின்படி, மொஹமட் அலி அல்-ஹசானி ஆரம்பகட்ட நடவடிக்கைகளை வழிநடத்தியதாகக் கூறப்படுகிறது. விமானப்படைத் தளத்தை இரகசியமாகக் கண்காணிக்க ஏற்பாடு செய்ததுடன், வாகனங்கள் மற்றும் எரிபொருள் பீப்பாய்களைப் பெற்றுக்கொள்வதற்காக அடையாளம் வெளியிடப்படாத சிலருக்கு பணம் வழங்கியதாகவும் குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், வாகனங்களைச் செலுத்திச் சென்றவர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்ததாகவும், அவர்கள் விமானப்படைத் தளத்தின் பாதுகாப்புப் பகுதிகளை அணுகியபோது அவர்களுக்கு வழிகாட்டியதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
மறுபுறம், சிறையில் இருந்த அல்-சாதி, ஈராக்கில் வசிக்கும் தனது குடும்ப உறுப்பினர்களிடம் புனைப்பெயர்களைப் பயன்படுத்தி, தாக்குதல் திட்டத்திற்கான நிதியைப் பரிமாற்றுமாறு அறிவுறுத்தியதாக அமெரிக்க வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், ‘வேலை’ (Work) என்ற சொல்லைப் பயன்படுத்தி மொஹஜெரிக்கு தகவல்களை அனுப்புமாறும் குடும்பத்தினரிடம் கேட்டுக்கொண்டதாகக் கூறப்படுகிறது. இதற்கு முன்னர் பயங்கரவாதத் தாக்குதல்களைக் குறிப்பிடுவதற்கும் அவர் இந்தச் சொல்லைப் பயன்படுத்தியிருந்ததாக விசாரணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஜூலை மாதம் இடம்பெற்ற தொலைபேசி உரையாடலொன்றில், தங்களது ‘பழைய வேலை’ நிறுத்தப்பட்டுள்ளதா அல்லது தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதா என அல்-சாதி தனது சகோதரியிடம் கேட்டதாகவும், அதற்கு அவர் ‘நிறுத்தப்படவில்லை’ எனப் பதிலளித்ததாகவும் நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சிறைத் தொலைபேசி உரையாடல்கள் குறித்து விசாரணை
அல்-சாதி ஏற்கனவே அமெரிக்காவின் புரூக்ளினில் அமைந்துள்ள Metropolitan Detention Center சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். அவருடன் தொடர்புகொள்வதற்கான வாய்ப்புகளைக் கட்டுப்படுத்தும் வகையில், சிறப்பு நிர்வாகக் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டிருந்தன.
அவரது தொலைபேசி உரையாடல்களில் ரகசியக் குறியீட்டு மொழி பயன்படுத்தப்பட்டதாகவும், சில சொற்களைப் பயன்படுத்தும்போது அழைப்பு துண்டிக்கப்படுவதைத் தவிர்க்க எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அவர் குடும்பத்தினரிடம் கூறியதாகவும் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக, 2026 செப்டெம்பர் 24ஆம் திகதி இடம்பெற்ற இறுதித் தொலைபேசி உரையாடலில், “நாம் அதைச் செய்வதற்கு அவருக்குப் பணம் கொடுங்கள்” என குடும்பத்தினருக்கு அவர் அறிவுறுத்தியதாகக் குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த உரையாடலுக்கு மூன்று நாட்களுக்குப் பின்னர், அவரது கூட்டாளிகள் RAF Fairford விமானப்படைத் தளத்தின் மீதான தாக்குதலை முன்னெடுக்க முயன்றதாக அமெரிக்க வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
முன்னைய பயங்கரவாதக் குற்றச்சாட்டுகளும் விசாரணையில்
அல்-சாதி மீது இதற்கு முன்னரும் அமெரிக்காவில் பல்வேறு பயங்கரவாதத் திட்டங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
ஐரோப்பாவின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற தாக்குதல்களை காணொளி அழைப்புகள் மூலம் பதிவு செய்ய உதவியதாகவும், யூத நிறுவனங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தீவைப்புத் தாக்குதல்கள் உள்ளிட்ட சம்பவங்களின் காணொளிகளைப் பயன்படுத்தி பிரசாரப் பதிவுகளைத் தயாரித்ததாகவும் முன்னைய குற்றச்சாட்டுகளில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும், அமெரிக்காவில் உள்ள முக்கிய யூத வழிபாட்டுத் தலம் ஒன்றை இலக்காகக் கொண்ட தாக்குதல் உள்ளிட்ட படுகொலைத் திட்டங்களை முன்னெடுப்பதற்காக ஏப்ரல் மாதத்தில் ஒருவரை வேலைக்கு அமர்த்த முயன்றதாகவும் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஆனால், அவர் தொடர்புகொண்ட நபர் இரகசிய விசாரணை அதிகாரி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, துருக்கியில் பயணம் மேற்கொண்டிருந்தபோது அவர் கைது செய்யப்பட்டதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், அல்-சாதி ஏற்கனவே சுமத்தப்பட்டிருந்த ஆரம்பகட்டக் குற்றச்சாட்டுகளை மறுத்து நீதிமன்றத்தில் குற்றமற்றவர் எனத் தெரிவித்துள்ளார்.
பிரித்தானிய விமானப்படைத் தளத்தின் மீதான தாக்குதல் முயற்சி தொடர்பான புதிய குற்றச்சாட்டுகள் குறித்து மேலதிக சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.





