சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிள்களில் பயணித்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட மூவர் இன்று (15) ஞாயிற்றுக்கிழமை சம்மாந்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது, அவர்கள் பயணித்ததாகக் கூறப்படும் மூன்று மோட்டார் சைக்கிள்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
குறித்த நபர்கள் தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிள்களில் பயணித்தமை தொடர்பான காணொளி ஆதாரம், இலங்கைப் பொலிஸாரின் உத்தியோகபூர்வ வாட்ஸ்அப் இலக்கத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வேதமுல்லவின் உத்தரவின் பேரிலும், அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த பண்டார கஸ்தூரி ஆராய்ச்சியின் வழிநடத்தலிலும் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே. இப்னு அசாரின் நெறிப்படுத்தலில், சம்மாந்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி டபிள்யூ.ஏ.என். நிசாந்த பிரதீப் குமார தலைமையிலான பொலிஸ் குழுவினர் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின்போதே சந்தேகநபர்கள் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களும், பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட மூன்று மோட்டார் சைக்கிள்களும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.





