சுமார் 100 மாணவர்களுக்கு நீச்சல் பயிற்சி; இரண்டாம் கட்டப் பயிற்சியில் 30 இளைஞர்கள் பங்கேற்பு; நிந்தவூர் ஜனாஸா அமைப்பினரின் ஆதரவுடன் சமூகப் பணி
உயிர்காப்பு (Lifesaving) என்பது வெறுமனே ஒரு பயிற்சியோ அல்லது சான்றிதழைப் பெற்றுக்கொள்வதற்கான தகுதியோ அல்ல. ஆபத்தான சூழ்நிலைகளில் மனித உயிர்களைக் காப்பாற்றுவதற்கான பொறுப்புணர்வும் அர்ப்பணிப்பும் நிறைந்த சமூகப் பணியாகும்.
அந்த வகையில், அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் கீழ் இயங்கும் உயிர்காப்பு மற்றும் அவசரகால மீட்புக் குழு, நீச்சல் மற்றும் உயிர்காப்புப் பயிற்சிகள் ஊடாக மாவட்டத்தின் இளம் தலைமுறையினருக்குப் பயனளிக்கும் பணிகளை முன்னெடுத்து வருகின்றது.
அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரதிப் பணிப்பாளர் எம்.ஏ.சி.எம். றியாஸின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் இக்குழுவின் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.
தற்போது இரண்டாம் கட்டமாக முன்னெடுக்கப்படும் உயிர்காப்பு மற்றும் நீச்சல் பயிற்சிகளில் சுமார் 30 இளைஞர்கள் பங்கேற்று வருகின்றனர். இப்பயிற்சிகளை வழங்குவதில் குழுவின் தலைவர் எஸ்.எம். பிரோஸ் உள்ளிட்ட எஸ்.என். தில்சாத் பர்வீஸ், எம்.டி.எம். றிசாட், எம்.டி.எம். இஸ்காத் மற்றும் ஏ.ஆர்.எம். மஜீட் ஆகிய ஐந்து இளைஞர்கள் பயிற்சியாளர்களாகச் செயற்பட்டு வருகின்றனர்.
இக்குழுவினரின் பயிற்சிச் செயற்பாடுகளுக்கு அம்பாறை மாவட்ட பொலிஸ் உயிர்காப்புப் படையினர், இலங்கை கடற்படையின் தென்கிழக்குக் கடற்படைப் பிரிவின் பாணம முகாம் அதிகாரிகள், கல்முனை சுகாதாரப் பணிமனை, சென் ஜோன்ஸ் அம்புலன்ஸ் பிரிவினர், அக்கரைப்பற்று மற்றும் கல்முனை மாநகர சபையின் தீயணைப்புப் படையினர், உகன விமானப்படையினர் மற்றும் முதலுதவிப் பயிற்சிக்கான வளவாளராக கே.டி. ரோகினி ஆகிய தரப்பினரும் பங்களிப்புச் செய்து வருகின்றனர்.

இக்குழுவின் செயற்பாடுகள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் தொடர்பில் அதன் தலைவர் எஸ்.எம். பிரோஸிடம் கேட்டபோது, இதுவரை அக்கரைப்பற்று நீச்சல் தடாகத்தில் சுமார் 100 மாணவர்களுக்கு நீச்சல் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
அத்துடன், சம்மாந்துறை மஜீட்புரம் பாடசாலை மாணவர்கள் மாகாண மட்ட நீச்சல் போட்டிகளில் பங்கேற்பதற்கான பயிற்சிகளும் வழங்கப்பட்டுள்ளன. இதன் பயனாக, குறித்த போட்டியில் அப்பாடசாலை மாணவர்கள் மூன்றாம் இடத்தைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.
இதேவேளை, நிந்தவூரில் அண்மையில் இடம்பெற்ற துயரச் சம்பவத்தின்போது, அவசரகால மீட்புப் பணிகளில் இக்குழுவின் இரண்டாம் கட்டப் பயிற்சியாளர்கள் சுமார் 30 பேர் பங்குபற்றியிருந்தனர். அதேவேளை, மீட்புப் பணியில் ஈடுபட்டவர்களுக்கு உணவு மற்றும் குளிர்பானங்களை வழங்கிய நிந்தவூர் ஜனாஸா அமைப்பினருக்கும் அமைப்பின் தலைவர் நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார். இத்தகைய சமூக அமைப்புகளின் ஆதரவு, அவசரகால மீட்புப் பணிகளில் ஈடுபடும் இளைஞர்களுக்கு ஊக்கமளிப்பதாக அமைந்துள்ளது.
மேலும், எதிர்காலத்தில் பாடசாலை மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் ஜனாஸா நலன்புரி அமைப்புகளைச் சேர்ந்தவர்களுக்கும் நீச்சல் மற்றும் உயிர்காப்புப் பயிற்சிகளை விரிவுபடுத்துவதற்குத் திட்டமிட்டுள்ளதாகக் குழுவின் தலைவர் தெரிவித்தார்.
இதற்கமைய, நிந்தவூர் பிரதேச சபைத் தவிசாளர் சட்டத்தரணி ஏ.எல். ரியாஸ் ஆதம் மற்றும் நிந்தவூர் ஜனாஸா அமைப்பின் உப தலைவர் ஆகியோர், இக்குழுவுடன் இணைந்து செயற்படுவதற்காக நிந்தவூரிலிருந்து 10 இளைஞர்களை இணைத்துக்கொள்வதற்கு ஒத்துழைப்பு வழங்குவதாக உறுதியளித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அம்பாறை மாவட்ட மக்களுக்கு ஓர் அழைப்பு
சம்மாந்துறை உள்ளிட்ட அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலுள்ள நீர்நிலைகள் மற்றும் கடற்கரைகளில் ஏற்படக்கூடிய நீர்விபத்துக்களைத் தடுப்பதற்கும், அவசரகாலச் சூழ்நிலைகளில் உயிர்களைக் காப்பாற்றுவதற்கும் இத்தகைய பயிற்சி பெற்ற இளைஞர்களின் சேவை அவசியமானதாகும்.
எனவே, மாவட்டத்திலுள்ள பாடசாலைகள், இளைஞர் அமைப்புகள், விளையாட்டுக் கழகங்கள் மற்றும் ஜனாஸா நலன்புரி அமைப்புகள் இக்குழுவினருடன் இணைந்து செயற்பட முன்வர வேண்டும். குறிப்பாக, மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் நீச்சல் மற்றும் உயிர்காப்புப் பயிற்சிகளைப் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்துவதன் மூலம் நீர்விபத்துக்களால் ஏற்படும் உயிரிழப்புகளைக் குறைப்பதற்கும், அவசரநிலைகளை எதிர்கொள்ளக்கூடிய திறனுள்ள இளைஞர் சமூகத்தை உருவாக்குவதற்கும் பங்களிக்க முடியும்.
பல சவால்களைக் கடந்து பெற்றுக்கொண்ட தமது திறமைகளையும் அனுபவங்களையும் சமூகத்தின் நலனுக்காகப் பயன்படுத்த முன்வந்துள்ள இளைஞர்களின் இச்சேவை உரிய அங்கீகாரத்தையும் ஊக்குவிப்பையும் பெற வேண்டியது அவசியமாகும். இத்தகைய உயிர்காக்கும் சமூகப் பணிகளுக்கு மாவட்டத்தின் அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்குவது காலத்தின் தேவையாகும்.





