அமெரிக்காவில், ஆன்லைன் விளையாட்டின் மூலம் அறிமுகமான ஒரு சிறுமி காணாமல் போயிருப்பதை அறிந்த 16 வயது சிறுவன், தனது தாயின் உதவியுடன் அந்தச் சிறுமியை மீட்க உதவிய சம்பவம் கவனம் பெற்றுள்ளது.
அமெரிக்காவின் கொலராடோ மாநிலத்தைச் சேர்ந்த 16 வயதான லாண்டன் ட்ரெஸ்ப் (Landon Trespe), தனது வீட்டில் மடிக்கணினி மூலம் ‘Among Us’ என்ற ஆன்லைன் விளையாட்டை விளையாடிக் கொண்டிருந்தபோது, மற்றொரு வீராங்கனையுடன் உரையாடியுள்ளார்.
அந்த வீராங்கனை 17 வயதுடைய சிறுமி எனத் தன்னை அறிமுகப்படுத்தியுள்ளார். இருவருக்கும் இடையே நட்புரீதியான உரையாடல் தொடர்ந்து இடம்பெற்றுள்ளது. இதன்போது, தான் பயன்படுத்தும் பெயர் தனது உண்மையான பெயர் அல்ல என்றும், வீட்டைவிட்டு வெளியேறிய பின்னர் தனது விருப்பத்திற்கு மாறாக வேறொரு இடத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அந்தச் சிறுமி தெரிவித்துள்ளார்.
மேலும், தனது வீட்டிலிருந்து நூற்றுக்கணக்கான மைல்கள் தொலைவில் இருப்பதாகக் கூறிய அவர், தாம் இருக்கும் இடம் குறித்து சரியான தகவல் தெரியவில்லை என்றும் தெரிவித்துள்ளார். அந்தச் சிறுமி காணாமல் போய் ஓராண்டுக்கும் மேலாகியிருந்ததாகக் கூறப்படுகிறது.
தாயிடம் தகவல் தெரிவித்த சிறுவன்
சிறுமியின் நிலைமையை அறிந்த லாண்டன் அதிர்ச்சியடைந்துள்ளார். என்ன செய்வதென்று தெரியாமல் குழப்பமடைந்த அவர், சுமார் இரண்டு வாரங்களாக அந்தச் சிறுமியுடன் தொடர்ந்து உரையாடி மேலதிக தகவல்களைப் பெற்றுள்ளார்.
பின்னர், இந்த ஆண்டு ஒக்டோபர் 31ஆம் திகதி தனது தாயான 41 வயதுடைய கிறிஸ்டினாவிடம் சம்பவத்தைத் தெரிவித்துள்ளார்.
ஐந்து குழந்தைகளின் தாயும் தொழில்முறை செவிலியருமான கிறிஸ்டினா, அன்றைய தினம் ஹாலோவீன் கொண்டாட்டத்திற்காக தனது இளைய குழந்தைகளுக்கு ஒப்பனை செய்து கொண்டிருந்தபோது மகன் இந்தத் தகவலைக் கூறியுள்ளார்.
சிறுமி ஆபத்தான சூழ்நிலையில் இருக்கக்கூடும் என்பதை உணர்ந்த கிறிஸ்டினா, உடனடியாகச் செயற்பட்டு உரிய அதிகாரிகளுக்குத் தகவல் வழங்கியுள்ளார். இதன் மூலம் சிறுமி இருக்கும் இடத்தைக் கண்டறிந்து அவரை மீட்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
பெற்றோரின் விழிப்புணர்வின் முக்கியத்துவம்
இந்தச் சம்பவம், இணையவழி விளையாட்டுகள் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் அறிமுகமாகும் நபர்களுடன் சிறுவர்கள் தொடர்புகொள்ளும்போது ஏற்படக்கூடிய ஆபத்துகள் குறித்தும் கவனத்தை ஈர்த்துள்ளது.
அதேவேளை, இணையத்தில் அறிமுகமாகும் ஒருவர் ஆபத்தில் இருப்பதாகத் தெரியவந்தால், அதனைத் தனியாகக் கையாள முயற்சிக்காமல் பெற்றோர் அல்லது நம்பகமான பெரியவர்களிடம் உடனடியாகத் தெரிவிக்க வேண்டும் என்பதற்கும் இந்தச் சம்பவம் ஓர் எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.
தனது நண்பரின் நிலைமையை அலட்சியப்படுத்தாமல் தாயிடம் தெரிவித்த லாண்டனின் செயற்பாடும், தகவல் கிடைத்தவுடன் பொறுப்புடன் நடவடிக்கை எடுத்த அவரது தாயின் பங்களிப்பும் இந்த மீட்பு முயற்சியில் முக்கியத்துவம் பெற்றுள்ளன.





