அமெரிக்கா, சீனா மற்றும் ரஷ்யா ஆகிய மூன்று வல்லரசுகளும் தங்களுக்குள் இணைந்து உலகளாவிய முக்கிய முடிவுகளை எடுக்கத் தொடங்கினால், இந்தியா உள்ளிட்ட ஏனைய நாடுகளின் சர்வதேச அரசியல் செல்வாக்கு குறையக்கூடும் என்ற அச்சம் சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின் மற்றும் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் ஆகியோர் சீனாவின் ஷென்சென் நகரில் சந்தித்துப் பேசியதைத் தொடர்ந்து இந்த விவாதம் தீவிரமடைந்துள்ளது.
இந்தச் சந்திப்பை சில சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் ‘யால்டா 2.0’ அல்லது ‘இரண்டாவது யால்டா மாநாடு’ என வர்ணிக்கின்றனர். 1945ஆம் ஆண்டு இரண்டாம் உலகப் போரின் இறுதிக்கட்டத்தில் அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் சோவியத் ஒன்றியத்தின் தலைவர்கள் சந்தித்து உலகின் எதிர்கால அரசியல் ஒழுங்கு குறித்து விவாதித்த யால்டா மாநாட்டுடன் தற்போதைய சந்திப்பை ஒப்பிட்டுப் பார்க்கின்றனர்.
எனினும், இந்த ஒப்பீடு பொருத்தமற்றது எனச் சீன ஊடகங்களும் சில ஆய்வாளர்களும் விமர்சிக்கின்றனர். இது பனிப்போர் காலத்தைச் சேர்ந்த பழைய அரசியல் சிந்தனையை மீண்டும் பயன்படுத்துவதாகவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
இந்தச் சந்திப்பு உண்மையில் உலக அதிகாரச் சமநிலையில் புதிய மாற்றத்தை ஏற்படுத்துமா? அதில் இந்தியாவின் நிலை என்னவாக இருக்கும்? இந்தியா தலைமையிலான பிராந்திய ஒத்துழைப்புகள் தொடர்ந்து வலுப்பெறுமா? என்பன தற்போது முக்கியமான கேள்விகளாகியுள்ளன.
1945ஆம் ஆண்டின் யால்டா மாநாடு – ஏன் மீண்டும் பேசப்படுகிறது?
1945ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம், கிரிமியாவில் உள்ள யால்டா நகரில் அன்றைய மூன்று முக்கிய வல்லரசுகளின் தலைவர்கள் சந்தித்தனர்.
அமெரிக்க ஜனாதிபதி பிராங்க்ளின் ரூஸ்வெல்ட், பிரிட்டன் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் மற்றும் சோவியத் தலைவர் ஜோசப் ஸ்டாலின் ஆகியோர் அந்தச் சந்திப்பில் பங்கேற்றனர்.
அப்போது நாஜி ஜெர்மனி தோல்வியின் விளிம்பில் இருந்ததுடன், ஐரோப்பா மற்றும் பசிபிக் பிராந்தியங்களில் போர் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருந்தது.
போருக்குப் பின்னரான உலக ஒழுங்கு, ஐரோப்பாவின் எதிர்காலம் மற்றும் சர்வதேச பாதுகாப்பு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் அந்தத் தலைவர்கள் கலந்துரையாடினர்.
தற்போது அமெரிக்கா, சீனா மற்றும் ரஷ்யத் தலைவர்கள் சந்தித்துள்ள நிலையில், உலகின் முக்கிய முடிவுகளை மூன்று வல்லரசுகளும் தங்களுக்குள் தீர்மானிக்கும் புதிய அரசியல் சூழல் உருவாகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
மூன்று வல்லரசுகளின் சந்திப்புக்குப் பின்னால் உள்ள காரணங்கள் என்ன?
இந்தச் சந்திப்பு வெறும் அடையாள அரசியல் நடவடிக்கை அல்ல என சீனா தொடர்பான விவகாரங்களில் ஆய்வு மேற்கொண்டு வரும் கசாலா வாஹப் தெரிவித்துள்ளார்.
அவரது கருத்துப்படி, அமெரிக்கா, சீனா மற்றும் ரஷ்யா ஆகிய மூன்று நாடுகளுக்கும் தற்போது மத்திய கிழக்கில் நிலவும் போரை முடிவுக்குக் கொண்டுவருவதும், அப்பிராந்தியத்தில் நிலைத்தன்மையை ஏற்படுத்துவதும் முக்கியமான தேவையாக உள்ளது.
குறிப்பாக, எரிபொருள் விலைகளின் அதிகரிப்பு மற்றும் ஹோர்முஸ் நீரிணை தொடர்பான பதற்றம் ஆகியவை இந்த நாடுகளின் பொருளாதார மற்றும் பாதுகாப்பு நலன்களுடன் தொடர்புடையவை.
இந்த மூன்று நாடுகளும் தங்களுக்கிடையிலான முக்கிய பிரச்சினைகள் குறித்து நேரடியாகப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய சூழல் உருவாகியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டுகிறார்.
இது ஆரம்பகட்டச் சந்திப்பு மட்டுமே என்றும், எதிர்காலத்தில் மேலும் பல பேச்சுவார்த்தைகள் இடம்பெற வாய்ப்புள்ளதாகவும் அவர் கருதுகிறார்.
மறுபுறம், ஜெர்மனி, இந்தோனேசியா, எத்தியோப்பியா மற்றும் ஆசியான் நாடுகளுக்கான முன்னாள் இந்தியத் தூதர் குர்ஜீத் சிங் இந்தச் சந்திப்பு குறித்து வேறுபட்ட கவலையை வெளியிட்டுள்ளார்.
மூன்று நாடுகளும் உலகின் முக்கிய வல்லரசுகளாகத் தங்களை முன்னிறுத்தினாலும், உலகளாவிய பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான பொதுவான அணுகுமுறையை விடத் தங்களது தேசிய நலன்களுக்கே முன்னுரிமை அளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா வர்த்தகச் சமநிலையின்மை மற்றும் அரிய தாதுப் பொருட்களின் விநியோகம் குறித்து கவலைப்படுகின்றது. சீனா தன் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகள் மற்றும் அவற்றின் தாக்கம் குறித்து கவனம் செலுத்துகின்றது. ரஷ்யா சர்வதேச அரசியலின் முக்கியப் பேச்சுவார்த்தை மேடைக்குத் திரும்புவதை முக்கியமாகக் கருதுகின்றது என அவர் விளக்கியுள்ளார்.
மூன்று வல்லரசுகளும் இணைந்து ஏனைய நாடுகளுக்கு எவ்வாறு செயல்பட வேண்டும் என அறிவுறுத்தும் நிலை உருவாகக் கூடாது என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
குவாட் அமைப்பின் செல்வாக்கு குறைந்து வருகிறதா?
இந்தச் சந்திப்பைத் தொடர்ந்து இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நான்கு நாடுகளை உள்ளடக்கிய குவாட் (QUAD) அமைப்பின் எதிர்காலம் குறித்த விவாதமும் தீவிரமடைந்துள்ளது.
இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் வளர்ந்து வரும் அரசியல், பொருளாதார மற்றும் இராணுவச் செல்வாக்கைச் சமநிலைப்படுத்தும் முக்கிய ஒத்துழைப்புத் தளமாக குவாட் நீண்டகாலமாகக் கருதப்படுகிறது.
ஆனால், குவாட் அமைப்பு தற்போது முன்னர் இருந்த அதே அளவிலான அரசியல் முக்கியத்துவத்துடன் செயல்படுகிறதா என்ற கேள்வியை கசாலா வாஹப் எழுப்பியுள்ளார்.
இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெறத் திட்டமிடப்பட்டிருந்த குவாட் தலைவர்கள் உச்சிமாநாடு நடைபெறாததையும், அமெரிக்க நிர்வாகத்தின் அணுகுமுறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களையும் அவர் இதற்கான எடுத்துக்காட்டுகளாகக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அண்மைய குவாட் கூட்டறிக்கையில் சீனா தொடர்பான நேரடியான குறிப்புகள் இடம்பெறாததுடன், வர்த்தக ஒத்துழைப்புக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டிருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அவரது பார்வையில், குவாட் அமைப்பின் ஆரம்பகட்ட நோக்கங்களில் ஒன்றாக இருந்த இராணுவ ஒத்துழைப்பு மற்றும் சீனாவின் செல்வாக்கை எதிர்கொள்ளும் நடவடிக்கைகள் தற்போது ஒப்பீட்டளவில் குறைந்த முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளன.
ட்ரம்ப் நிர்வாகம் சீனாவுடனான இராணுவப் போட்டியைவிட வர்த்தகம் மற்றும் பொருளாதாரப் போட்டிக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனினும், குவாட் அமைப்பு செயலிழந்துவிட்டதாகக் கருத முடியாது என்பது முன்னாள் தூதர் குர்ஜீத் சிங்கின் நிலைப்பாடாகும்.
குவாட் அமைப்பு தனது பணிகளைத் தொடர்ந்து முன்னெடுத்து வருவதாகவும், அதன் செயல்திறனைத் தலைவர்களின் உச்சிமாநாடுகளை மட்டும் அடிப்படையாகக் கொண்டு மதிப்பிட முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சீனாவுக்கு எதிரான சமநிலை சக்தியாக இந்தியா செயல்படுமா?
அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுடனான இந்தியாவின் நெருக்கமான உறவுகள், சீனாவின் பிராந்தியச் செல்வாக்கைச் சமநிலைப்படுத்தும் உத்தியாகப் பார்க்கப்படுகின்றன.
ஆனால், இந்தியா தன்னை சீனாவுக்கு எதிரான சமநிலை சக்தியாகக் கருத வேண்டும் என்ற அணுகுமுறையுடன் குர்ஜீத் சிங் உடன்படவில்லை.
இந்தியாவும் சீனாவும் அண்டை நாடுகள் என்பதுடன், இரு நாடுகளுக்கும் இடையில் குறிப்பிடத்தக்க வர்த்தக உறவுகளும் உள்ளன.
எனவே, சீனாவிலிருந்து இந்தியா முழுமையாகத் தன்னைத் தனிமைப்படுத்திக் கொள்வது நடைமுறையில் சாத்தியமற்றது என்றும், இந்தியா தனது தேசிய நலன்களின் அடிப்படையில் இருதரப்பு உறவுகளை நிர்வகிக்க வேண்டியுள்ளதாகவும் அவர் விளக்கியுள்ளார்.
சீனாவின் செல்வாக்கைச் சமநிலைப்படுத்துவது இந்தியாவின் தனிப்பட்ட பொறுப்பு அல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், 2020 முதல் 2024 வரையான காலப்பகுதியில் எல்லைப் பதற்றம் காரணமாக இந்தியா – சீனா உறவுகள் தேக்கமடைந்திருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தியா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் 21ஆம் நூற்றாண்டை ஆசியாவின் நூற்றாண்டாகப் பார்க்கும் நிலையில், சீனா அதனை சீனாவின் நூற்றாண்டாகக் கருதுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆசியாவின் பொருளாதார வளர்ச்சியில் சீனா முக்கிய இடத்தைப் பெற விரும்பினாலும், அந்தப் பொருளாதாரக் கட்டமைப்பில் இந்தியாவுக்கும் சமமான இடத்தை வழங்க அது தயாராக உள்ளதா என்பது கேள்விக்குறியாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆசியான் நாடுகளுக்கும் இந்தியாவின் பங்கு முக்கியம்
தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பான ஆசியான் (ASEAN) நாடுகளுடனான இந்தியாவின் உறவுகளும் தற்போதைய உலக அரசியல் சூழலில் முக்கியத்துவம் பெறுகின்றன.
1990களில் இந்தியா முன்னெடுத்த ‘கிழக்கு நோக்கிய கொள்கை’ (Look East Policy), 2014ஆம் ஆண்டு ‘கிழக்கு நோக்கிய செயல்பாட்டுக் கொள்கை’ (Act East Policy) என மாற்றப்பட்டது.
ஆசியான் நாடுகள் சீனாவுடன் வலுவான பொருளாதார உறவுகளைப் பேணி வந்தாலும், தென் சீனக் கடல் பகுதியில் சீனாவின் நடவடிக்கைகள் தொடர்பாகப் பாதுகாப்பு மற்றும் கடல்சார் உரிமைகள் குறித்த கவலைகளையும் கொண்டுள்ளன.
இந்தச் சூழலில் இந்தியா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுடனான ஒத்துழைப்பை அவை முக்கிய வாய்ப்பாகக் கருதுகின்றன.
வல்லரசுகளுக்கு இடையிலான போட்டி அதிகரிக்கும் நிலையில், தாங்கள் தனிமைப்படுத்தப்படுவதை ஆசியான் நாடுகள் விரும்பவில்லை என குர்ஜீத் சிங் தெரிவித்துள்ளார்.
மேலும், ஆசியான் நாடுகள் மற்றும் உலகின் தென்பகுதி நாடுகளின் நலன்களை முன்னிறுத்தி இணைந்து செயல்படக்கூடிய முக்கிய கூட்டாளியாக இந்தியா விளங்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை – நடுநிலை அல்ல, உத்திசார் தன்னாட்சி!
இந்தியா குவாட் அமைப்பில் அங்கம் வகிப்பதுடன், பிரிக்ஸ் (BRICS), ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO), ஜி20 (G20) உள்ளிட்ட பல சர்வதேச அமைப்புகளிலும் செயல்பட்டு வருகின்றது.
அதேவேளை, ஆசியான், ஆப்பிரிக்கா, மத்திய ஆசியா, தெற்கு பசிபிக் மற்றும் கரீபியன் பிராந்திய நாடுகளுடனான உறவுகளையும் இந்தியா விரிவுபடுத்தி வருகின்றது.
இந்த அணுகுமுறையை வெறுமனே நடுநிலைக் கொள்கை எனக் குறிப்பிட முடியாது என்றும், இது ‘உத்திசார் தன்னாட்சி’ (Strategic Autonomy) என்ற கொள்கையின் அடிப்படையில் அமைந்துள்ளதாகவும் குர்ஜீத் சிங் விளக்கியுள்ளார்.
அதாவது, ஒரு குறிப்பிட்ட வல்லரசின் அரசியல் அல்லது இராணுவ நிலைப்பாட்டை முழுமையாகப் பின்பற்றாமல், ஒவ்வொரு சர்வதேச விவகாரத்திலும் தனது தேசிய நலன்களுக்கு ஏற்ப இந்தியா முடிவுகளை எடுப்பதாகும்.
ஐக்கிய நாடுகள் சபை, உலக வர்த்தக அமைப்பு மற்றும் உலக சுகாதார அமைப்பு போன்ற பல்தரப்பு அமைப்புகளின் செயல்திறன் குறித்தும் அவர் கவலை வெளியிட்டுள்ளார்.
இந்த அமைப்புகளின் செயல்பாடுகள் வலுவிழந்து வரும் நிலையில், குறிப்பிட்ட நாடுகள் இணைந்து செயல்படுவதற்கான சிறிய கூட்டமைப்புகள் அதிகரித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உலக அரசியலில் இந்தியாவின் எதிர்காலம் எவ்வாறு அமையும்?
அமெரிக்கா, சீனா மற்றும் ரஷ்யா ஆகிய மூன்று வல்லரசுகளும் தங்களுக்குள் இணைந்து முக்கியமான சர்வதேச முடிவுகளை எடுக்கத் தொடங்கினால், இந்தியா, ஆசியான் நாடுகள், ஆப்பிரிக்க நாடுகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட ஏனைய முக்கியத் தரப்புகளின் பங்களிப்பு குறையக்கூடும் என்ற கவலை தற்போது எழுந்துள்ளது.
ஆனால், இந்தியா தனது பல்தரப்பு உறவுகளையும் உத்திசார் தன்னாட்சியையும் தொடர்ந்து வலுப்படுத்துவதன் மூலம் உலக அரசியலில் தனக்கான இடத்தைப் பேண முடியும் என்பதே முன்னாள் இந்தியத் தூதரின் கருத்தாகும்.
எனவே, ஷென்சென் சந்திப்பு உலக அரசியலில் புதிய அதிகாரக் கட்டமைப்பை உருவாக்குமா அல்லது மூன்று வல்லரசுகளின் தற்போதைய நலன்களை மையப்படுத்திய தற்காலிக இராஜதந்திர முயற்சியாக அமையுமா என்பது எதிர்கால அரசியல் நகர்வுகளைப் பொறுத்தே அமையும்.
எவ்வாறாயினும், வளர்ந்து வரும் வல்லரசுகளின் போட்டிக்கு மத்தியில் இந்தியா தனது தேசிய நலன்கள், பொருளாதார வளர்ச்சி மற்றும் சர்வதேச ஒத்துழைப்பை எவ்வாறு சமநிலைப்படுத்துகிறது என்பதே அதன் எதிர்கால உலகளாவிய செல்வாக்கைத் தீர்மானிக்கும் முக்கிய காரணியாக இருக்கும்.





