கர்ப்பமாக இருப்பதே தெரியாமல் குளியலறையில் குழந்தை பெற்றெடுத்த பெண்! – பிரசவ வலியை குடல்வால் அழற்சி என நினைத்ததால் ஏற்பட்ட ஆச்சரியம்!

அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாநிலத்தைச் சேர்ந்த 28 வயதான பெண் ஒருவர், தான் கர்ப்பமாக இருப்பதையே அறியாமல், கடுமையான வயிற்றுவலியை குடல்வால் அழற்சி (Appendicitis) எனத் தவறாக நினைத்த நிலையில், குளியலறையில் வெறும் 10 நிமிடங்களில் குழந்தையைப் பெற்றெடுத்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஹெலன் டேல் என்ற குறித்த பெண், கர்ப்பகாலத்தில் வழக்கமான அறிகுறிகள் எதனையும் அனுபவிக்கவில்லை. மாதவிடாயும் வழமைபோன்று சீராக இடம்பெற்றதுடன், கர்ப்பகாலம் முழுவதும் சுமார் 10 இறாத்தல் (4.5 கிலோகிராம்) மாத்திரமே உடல் எடை அதிகரித்திருந்தது. இதனை அவர் உணவுப் பழக்கத்தில் ஏற்பட்ட மாற்றம் காரணமாகவே கருதியிருந்தார்.

கடந்த 2025 நவம்பர் மாதம், அதிகாலை 2 மணியளவில் கடுமையான வயிற்றுவலியுடன் அவர் விழித்தெழுந்துள்ளார். அது மாதவிடாய் வலி என நினைத்த அவர், தனது துணைவர் ஜஸ்டின் ஹைலின் 32ஆவது பிறந்தநாள் என்பதால் ஆரம்பத்தில் வலியைப் பொருட்படுத்தாமல் இருந்துள்ளார்.

அன்று முழுவதும் கடுமையான வலியால் அவதிப்பட்ட அவர், மாலை நேரத்தில் பிரசவம் நடைபெறப்போகிறது என்பதை அறியாமலேயே உணவகத்திற்குச் சென்று பீட்சா உணவையும் உட்கொண்டுள்ளார்.

எனினும், மாலை 7 மணியளவில் வலி தாங்க முடியாத அளவுக்கு அதிகரித்ததால், தனக்கு குடல்வால் அழற்சி ஏற்பட்டிருக்கலாம் என அவர் சந்தேகித்துள்ளார்.

இதையடுத்து, வெந்நீர் குளியலுக்காக குளியல் தொட்டியில் நீரை நிரப்பிய அவர், சில நிமிடங்களிலேயே குழந்தையைப் பெற்றெடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.

இதுகுறித்து ஹெலன் தெரிவிக்கையில், குழந்தை பிறக்கப்போகிறது என்பதை உணர்ந்தபோது பெரும் அதிர்ச்சியடைந்ததாகவும், குழந்தையைப் பெற்றெடுத்த பின்னர் தொப்புள் கொடியை அகற்றி, குழந்தையின் மூக்கைச் சுத்தம் செய்து, அதன் முதுகைத் தடவியதாகவும் தெரிவித்துள்ளார்.

குழந்தை அழத் தொடங்கியதும் தானும் அழுததாகவும், தனது மகளிடம் முதலில், “நீ யார்?” என்று கேட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அடுத்த அறையில் இருந்த துணைவருக்குத் தெரியாத பிரசவம்!

ஹெலன் குழந்தையைப் பெற்றெடுத்துக் கொண்டிருந்தபோது, அவரது துணைவர் ஜஸ்டின் அடுத்த அறையில் எதுவும் தெரியாமல் இருந்துள்ளார்.

குழந்தையின் அழுகுரலைக் கேட்ட பின்னரே அங்கு நடந்ததை அவர் அறிந்துள்ளார். திடீரெனத் தந்தையான அதிர்ச்சியில் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்த ஜஸ்டின் உடனடியாக அவசர மருத்துவ சேவையைத் தொடர்புகொண்டுள்ளார்.

இதன்போது, ஹெலன் தானாகவே தொப்புள் கொடியை வெட்டியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர் இருவரும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். மருத்துவப் பரிசோதனைகளின் பின்னர் ஹெலன் ஒருநாள் கழித்து வீடு திரும்ப அனுமதிக்கப்பட்ட போதிலும், குழந்தை ஐந்து நாட்கள் மருத்துவமனையில் கண்காணிப்பில் வைக்கப்பட்டது.

பிறக்கும்போது சுமார் 5 இறாத்தல் (2.27 கிலோகிராம்) எடையைக் கொண்டிருந்த குழந்தை, ஏனைய வகையில் ஆரோக்கியமாக இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

கர்ப்பம் தெரியாமல் போனதற்கு மருத்துவக் காரணம்?

ஹெலனின் கர்ப்பம் வெளிப்படையாகத் தெரியாமல் போனதற்கும், குழந்தையின் அசைவுகளை அவர் உணராமல் இருந்ததற்கும் சில உடற்கூறியல் காரணங்கள் இருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக, கருப்பை சாய்ந்த நிலையில் அமைந்திருப்பது (Tilted Uterus) மற்றும் நஞ்சுக்கொடி கருப்பையின் முன்புறத்தில் அமைந்திருப்பது (Anterior Placenta) ஆகியவை இதற்குக் காரணமாக இருக்கலாம் என மருத்துவர்கள் ஊகித்துள்ளனர்.

நஞ்சுக்கொடி முன்புறத்தில் அமைந்திருப்பது குழந்தையின் அசைவுகளை உணரும் தன்மையைக் குறைக்கக்கூடும்.

ஹெலனின் தாயார் ஒரு செவிலியர் பயிற்சியாளராகப் பணியாற்றி வருவதுடன், பிரசவத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்னர்கூட ஹெலனைச் சந்தித்தபோது அவர் கர்ப்பமாக இருப்பதை அறியவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குழந்தை வேண்டாம் என்ற எண்ணத்தில் இருந்த பெண்ணுக்கு எதிர்பாராத தாய்மை!

குழந்தை பிறப்பதற்கு முன்னர் ஹெலன், தனக்குக் குழந்தைகள் வேண்டாம் என்ற உறுதியான எண்ணத்தில் இருந்துள்ளார். ஆனால் அவரது துணைவர் ஜஸ்டின் எதிர்காலத்தில் தந்தையாக வேண்டும் என்ற விருப்பத்தைக் கொண்டிருந்தார்.

இருவரும் சந்தித்தது குழந்தை பிறப்பதற்கு 11 மாதங்களுக்கு முன்னரே. மேலும், குழந்தை பிறப்பதற்கு மூன்று வாரங்களுக்கு முன்புதான் அவர்கள் புதிய வீட்டையும் வாங்கியிருந்தனர்.

எதிர்பாராத விதமாகத் தாயான போதிலும், குழந்தையுடன் உணர்வுபூர்வமாக இணைவதில் தனக்கு எந்தச் சிரமமும் ஏற்படவில்லை என்றும், குழந்தையைப் பார்த்தவுடன் அது தனது குழந்தை என்ற உணர்வு ஏற்பட்டதாகவும் ஹெலன் தெரிவித்துள்ளார்.

குழந்தை பிறந்த செய்தியைக் கேட்ட நண்பர்களும் உறவினர்களும் உடனடியாக உதவ முன்வந்ததுடன், குழந்தைக்குத் தேவையான ஆடைகள், தொட்டில் மற்றும் தள்ளுவண்டி உள்ளிட்ட பொருட்களையும் வழங்கியுள்ளனர். தங்களது வீட்டிலிருந்த விளையாட்டு அறையை குழந்தைக்கான அறையாகவும் மாற்றியுள்ளனர்.

தனது பணியிடமும் ஆறு வாரங்கள் சம்பளத்துடன் கூடிய விடுமுறையை வழங்கி உதவியதாக ஹெலன் தெரிவித்துள்ளார்.

தற்போது ஒரு வயதாகும் மகள் கிளாராவுடன் தாய்மையை மகிழ்ச்சியாக அனுபவித்து வருவதாகக் கூறும் ஹெலன், எதிர்பாராத இந்த மாற்றம் தனது வாழ்க்கையை முழுமையாக மாற்றியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

எனினும், கிளாராவே தங்களது ஒரே குழந்தையாக இருப்பார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore