‘திட்வா’ சூறாவளி பாதிப்புக்கு நன்னீர் மீனவர்களுக்கு நிதி உதவி திட்டம்

‘திட்வா’ சூறாவளியினால் வாழ்வாதாரத்தை இழந்த கிழக்கு மாகாண நன்னீர் மீனவ சமூகத்தை மீளக் கட்டியெழுப்புவதையும், அவர்களின் தொழில்சார் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட 1.33 மில்லியன் அமெரிக்க டொலர் (சுமார் 436 மில்லியன் ரூபா) மதிப்பிலான விசேட செயற்திட்டத்திற்கான உத்தியோகபூர்வ ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்வு, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரின் தலைமையில் நேற்று (29) கொழும்பிலுள்ள ஜப்பானிய தூதரகத்தில் நடைபெற்றுள்ளது.

இச்செயற்திட்டத்திற்கான முழுமையான நிதிப் பங்களிப்பை ஜப்பானிய அரசாங்கம் வழங்குவதுடன், ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பு இதற்கான தொழிநுட்ப உதவிகளை வழங்கவுள்ளது. இந்த ஒப்பந்தத்தில் இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் அக்கியோ இசோமாடா மற்றும் FAO வதிவிடப் பிரதிநிதி விம்லேந்திர ஷரன் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

இச்செயற்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படவுள்ள முக்கிய நடவடிக்கைகள்:

  • கிழக்கு மாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட 30 நீர்த்தேக்கங்களில் 200 மீன் வளர்ப்பு கூடுகளை (Fish Cages) நிறுவுதல்.
  • குறித்த நீர்த்தேக்கங்களுக்குத் தேவையான தடுப்பு வலை (Barrage nets) முறைமைகளை வழங்குதல்.
  • கிழக்கு மாகாணத்திலுள்ள இங்கிணியாகல மீன் இனப்பெருக்க நிலையத்தின் வசதிகளை மேம்படுத்தத் தேவையான ஹார்மோன்கள் மற்றும் இரசாயனப் பொருட்களை வழங்குதல்.
  • மீனவ சங்கங்கள் மற்றும் பிரதிநிதிகளுக்கு கூண்டு மீன் வளர்ப்பு (Cage Culture) தொடர்பான தொழிநுட்பப் பயிற்சிகளை வழங்குதல்.
  • முதற்கட்ட மீன் வளர்ப்புச் சுழற்சிக்குத் தேவையான மீன் குஞ்சுகள் மற்றும் மீன் உணவுகளை (Feed) இலவசமாக வழங்குதல்.

இங்கு உரையாற்றிய அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், கடல் மீன்பிடியுடன் ஒப்பிடுகையில் குறைந்த எரிபொருள் செலவில் மக்களின் புரதத் தேவையைப் பூர்த்தி செய்யவும், எதிர்காலத்தில் ஏற்றுமதி வாய்ப்புகளை நோக்கி நகரவும் இந்த நவீன கூண்டு மீன் வளர்ப்பு முறை பெரிதும் உதவும் எனத் தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாணத்தில் மாத்திரமன்றி, முழு இலங்கையிலும் நன்னீர் மீன்பிடித்துறையை நவீனமயமாக்கக் கிடைத்துள்ள ஒரு பாரிய வாய்ப்பு இதுவென்றும் அவர் குறிப்பிட்டார்.

ஜப்பானிய தூதுவர் அக்கியோ இசோமாடா கருத்துத் தெரிவிக்கையில், கடல் மீன்பிடித்துறை எரிபொருள் விலை உயர்வால் சவால்களை எதிர்கொண்டுள்ள இவ்வேளையில், நன்னீர் மீன்பிடித்துறையை வலுப்படுத்துவது இலங்கையின் தேசிய உணவுப் பாதுகாப்பிற்கு மிக அவசியமானது எனச் சுட்டிக்காட்டினார்.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore